
ஓவியம்: சுதிர்
தொடர்ந்து ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொண்டேயிருக்கும் மில்க் மினிஸ்டர், ஒருகட்டத்தில் உள்ளடிப் பகையால், தன் மகனின் மாவட்டப் பொறுப்பையும் காப்பாற்ற முடியாமல் கஷ்டப்பட்டார். இப்போது துறைரீதியாகத் தொடரும் குளறுபடிகள் மில்க் மினிஸ்டரைப் படுத்தி எடுக்கின்றனவாம். கடந்த வாரம் தலைநகரில் மில்க் விநியோகப் பற்றாக்குறை என மொத்த மீடியாக்களும் முழங்க, அதிகாரிகளைத் தாளித்துத் தீர்த்துவிட்டாராம் மில்க் மினிஸ்டர். “எல்லாரையும் அனுசரிச்சுதான் நடந்துக்கிறேன். எனக்கு மட்டும் ஏன் வளைச்சு வளைச்சு வம்பு கிளப்புறாங்க?” என மனம்விட்டுப் புலம்பவும் செய்கிறாராம். #கல்லெடுக்காம இருந்தா சரி!
‘என் கையில் நான்கு எம்.எல்.ஏ-க்கள்’ என அணில் அமைச்சர் கூப்பாடு போட, இலைக் கட்சியில் அதிருப்தியிலிருக்கும் எம்.எல்.ஏ-க்களை மற்ற அமைச்சர்களும் ஆளுக்குச் சிலரை வளைக்க உத்தரவு கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இதனால், தென் மண்டல அமைச்சர்கள் அணில் அமைச்சர்மீது செம கடுப்பில் இருக்கிறார்களாம். ‘முதன்மையானவரிடம் நல்ல பெயர் வாங்குவதையே முழு நேர வேலையாக வைத்துக்கொண்டு நமக்குக் குடைச்சல் கொடுக்கிறாரே…’ என அணில் அமைச்சருக்கு எதிராக ஆத்திரப்படுகிறார்கள். இத்தனைக்கும் உண்மையிலேயே அணில் அமைச்சர் கையில் இலைக் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ.கூட இல்லையாம். சும்மா அடித்துவிடும் வகையில் அவர் செய்கிற லாபிதானாம் இது. #பிம்பிளிக்கி பிளாப்பி!

‘சினிமாவுக்கும் எனக்கும் இனி எந்தத் தொடர்பும் இல்லை’ என வாரிசு அறிவித்துவிட்டாலும், விநியோக விஷயங்கள் அவரைக் கேட்டே நடப்பதாகச் சொல்கிறார்கள். வாரிசு பார்த்து ஓகே செய்யும் படங்கள் மட்டுமே விநியோகத்துக்கு வாங்கப்படுவதாகவும், அரசுப் பணிகள் நிறைய இருந்தாலும், இதற்காக நேரம் ஒதுக்க வாரிசு தவறுவதில்லை என்றும் சொல்கிறார்கள். சினிமாதுறையினரின் பலவிதமான சிபாரிசுகளுக்குத் தலையாட்ட முடியாமலேயே சினிமாவுக்கும் தனக்கும் இனி தொடர்பில்லை என அறிவித்தாராம் வாரிசு. #இல்லை... ஆனா... இருக்கு!
நாடாளுமன்றத்தில் `தாம் தூம்’ எனக் குதித்தாலும், தனிப்பட்ட வகையில் காவிக் கட்சியின் ஆளுமைப் புள்ளிகளுடன் அன்பு பாராட்டத் தயங்குவதே இல்லையாம் டெல்லியின் வெள்ளைப் புள்ளி. “முன்பெல்லாம் டெல்லியில் ஒவ்வொருவருடைய நெட்வொர்க்கையும் கவனிக்க ஆள் வைத்திருப்பார்கள். ஆனால், இப்போது இஷ்டத்துக்கு இயங்குகிறார்கள். தமிழகத் தலைமைக்கு விஷயங்களை கவனித்துச் சொல்லவேண்டிய வெள்ளைப் புள்ளியே, வேஷம் போட்டுக் காரியம் சாதிக்கிறவராக இருப்பதுதான் சிக்கல்” எனக் குமுறுகிறார்கள் டெல்லியின் உடன்பிறப்புகள். #பாலாப்போச்சு... சாரி, பாழாப்போச்சு!
அமைச்சர்கள் பலரும், தங்களுக்கு ஆதரவான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைத் தங்கள் துறைக்கு நியமிக்கச் சொல்லி தொடர்ந்து முதன்மையானவரை வற்புறுத்திவருகிறார்களாம். அமைச்சர்களுக்கு செக் வைக்கும்விதமாகத்தான் அவர்களுக்கு ஒத்துவராத அதிகாரிகளை நியமித்து, கோட்டையின் உச்ச அதிகாரி கெடுபிடி காட்டினார். அதை உடைத்து, முதன்மையானவரிடம் பலவிதமான விஷயங்களையும் சொல்லி, அவர் மனதைக் கரைத்துவிட்டார்களாம் சில மந்திரிகள். அதனால், சீக்கிரமே ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் மாற்றப் பட்டியல் வெளியாகும் என்கிறார்கள். அதேநேரம் கோட்டையின் உச்ச அதிகாரி அந்த சீட்டைவிட்டு நகரும் வரை அமைச்சர்களின் கோரிக்கைக்குத் தலையாட்ட மாட்டார் என்றும் கோட்டை வட்டாரம் கிசுகிசுக்கிறது. #அன்பே... அன்பே... கொல்லாதே!