Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

திட்டம், ஒப்பந்தம், அறிவிப்பு, பேட்டி என முதன்மையானவர் எதைப் பற்றி ஆரம்பித்தாலும், ‘வேணாம் சார் பேர் கெட்டுப்போயிடும்’ எனச் சொல்லி அணை போடுகிறாராம் அருகிலேயே நிற்கும் தலையாய அதிகாரி. போதாக்குறைக்கு முதன்மையானவரின் முக்கிய ஆலோசகரும் ‘அது வேண்டாம்... இது வேண்டாம்’ என்றே தடுக்க, முக்கியமான பல விஷயங்கள் தள்ளிப்போகின்றனவாம். “அரசியல் அனுபவம் பெற்ற ஒருவரைக் கைப்புள்ள கணக்காகக் கட்டிப்போடுறாங்களே…” என அதிகாரிகள் வட்டாரத்தில் ஏகக் குமுறல். #ஆமா... அவரை வேலை செய்யவிடாம பார்த்துக்குறதுதான் எங்களோட வேலை!

சின்ன தலைவியின் மன்னார்குடி தம்பி, பல காலமாக ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கிறார். இனிஷியில் புள்ளியின் இல்ல விழாவுக்கு நிச்சயம் அழைப்பு வரும், அப்போது இணக்கம் ஏற்படும் என உறவுகள் யாவரும் காத்திருக்க, அழைப்பு அனுப்பக் கூடாது எனக் கறாராகச் சொல்லிவிட்டாராம் சின்ன தலைவி. “எனக்கு துரோகம் பண்ணியவங்களோட கூட்டுச் சேர்ந்தவங்களுக்கு மன்னிப்பே கிடையாது” என்றாராம். “யார் துரோகி, யார் பாசமானவங்கன்னு இன்னும் புரியாத சகோதரி எனக்குத் தேவையே இல்லை” என மன்னார்குடி தம்பியும் எடுத்தெறிந்து பேசினாராம். #ஏது பந்த பாசம்... எல்லாம் வெளி வேஷம்... காசு பணம் வந்தா... நேசம் சில மாசம்!

‘உள்ளடி வேலை பார்க்கிறவங்களோட கூட்டணி வேண்டாம். நாம் தனித்தே நம் சக்தியை நிரூபிப்போம்’ எனக் கட்சி நிர்வாகிகளிடம் கொந்தளித்த தோட்டத்துத் தலைவர், இலைக் கட்சியின் துணிவான புள்ளியிடம் பாசம் துளிர்க்கப் பேசினாராம். “கட்சிக்காரங்க ரொம்ப சோர்ந்துட்டாங்க. பலருக்கும் வாய்ப்பு கொடுக்கணும். மற்றபடி உங்க மேல எனக்கு எந்த வருத்தமும் இல்லை” என்றாராம். கூடவே, “எங்க கட்சியோட முக்கிய நிர்வாகிகள் போட்டியிடுற இடங்களில் முடிஞ்ச ஒத்துழைப்பையும் கொடுங்க” என்றாராம். #தைலம் தடவுறது மருத்துவத்துல ரொம்ப முக்கியம்!

ஒரு சீட் வாங்கி வென்று காட்டிய முருகப் பிரமுகர், சாதாரண காலங்களிலேயே சண்டையும் சச்சரவுமாகத்தான் இருப்பார். ஆனால், எம்.எல்.ஏ-வான பிறகு அநியாய அமைதிக்கு மாறிவிட்டார். பஞ்சாயத்து, பேச்சுவார்த்தை என யாரும் தன்னை அணுகாதபடி பார்த்துக்கொள்கிறார். சிபாரிசு, கமிஷன், கான்ட்ராக்ட் போன்ற விஷயங்களிலும் ஆள் தலையீடு காட்டாமல் தள்ளியே இருக்கிறாராம். ‘இருக்கிற வரைக்கும் நல்ல பெயரோடு இருந்துட்டுப் போயிடுவோம்’ என்கிறாராம் உற்ற நண்பர்களிடம். #ஏதே திருந்தீட்டீங்களா... சொல்லவேல்ல!

இலைக் கட்சியின் பணிவானவரை எதிர்த்து, கோல்டு பிரமுகரைத் தேர்தலில் நிறுத்தியபோது, ‘வென்றால் அமைச்சர்… தோற்றாலும் நிச்சயம் உங்களை கௌரவமான பதவியில் அமரவைப்பேன்’ என உறுதி கொடுத்திருந்தார் முதன்மையானவர். அதனால் ராஜ்ய சபா, டெல்லி பிரதிநிதி உள்ளிட்ட பதவிகளின் அறிவிப்பின்போதெல்லாம், ‘என்னண்ணே உங்க பேரைக் காணோம்?’ என கோல்டு பிரமுகரைச் சீண்டிக்கொண்டே இருந்தார்கள் நிர்வாகிகள் பலரும். “கட்சியில் மாவட்டச் செயலாளர்ங்கிறது சாதாரண பொறுப்பு இல்லை. எனக்கு அதுவே போதும். இப்படி உசுப்பேற்றி என் வாழ்க்கையில் விளையாடாதீங்கடா சாமிகளா…” எனச் சொல்லி நிழலாக நின்ற சிலரை விலக்கிவைத்துவிட்டாராம் கோல்டு பிரமுகர். #இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணமாக்கிட்டாய்ங்களே!

கிசுகிசு

போனில் பேசும்போது, தங்கள் கட்சிக்கு வாக்களிக்காத சில சமூகத்தினரைச் சகட்டுமேனிக்கு வறுத்தெடுக்கிறாராம் அண்ணன் தலைவர். “இப்படிப் பேசாதீங்கண்ணே… யாராச்சும் பதிவு பண்ணி வெளியே விட்டா அப்புறம் அந்தச் சமூகத்து ஓட்டே நமக்குக் கிடைக்காது” எனத் தயங்கியபடியே சொல்லியிருக்கிறார்கள் தம்பிகள். ஆனாலும் ஆத்திரம் அடங்காத அண்ணன் தலைவர், வாட்ஸ்அப் அழைப்பில் போய் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக வறுத்தெடுக்க, “அண்ணே... பகிரியிலும் பேச்சையெல்லாம் ஈஸியா ரெக்கார்ட் பண்ணலாம்… நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க?” எனப் பாடமே நடத்திக்காட்டினார்களாம் தம்பிகள். ‘உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரையாவது உஷ்ணத்தைக் குறைங்க’ எனச் சொல்லி அமைதிப்படுத்தி வைத்திருக்கிறார்களாம். #தொப்புள்ல வெளக்கெண்ண... என்ன ஆனா எனக்கென்ன?

உள்ளாட்சித் தேர்தலில் உரிய ஒதுக்கீடுகளைக் கேட்டுப் பெறக் கோரி உறுமும் கட்சித் தலைவருக்கு, கட்சிக்குள் நிறைய நெருக்கடிகளாம். “டிமாண்ட் பண்ணிக் கேட்கும் நிலையில் நாம் இல்லை. நம் எதிர்பார்ப்பைச் சொல்வோம். அவர்கள் கொடுப்பதைத்தான் பெற்றுக்கொள்ள முடியும்” என நிர்வாகிகளிடம் தெளிவுபடுத்திச் சொல்லியிருக்கிறார். முதன்மையானவரைச் சந்தித்து, முழு விவரங்களையும் சொல்ல நேரம் கிடைக்காது என்பதால், தனிப்பட்ட கடிதம் எழுதுகிற திட்டத்தில் இருக்கிறாராம். #அன்புள்ள மாண்புமிகு... ஆதங்கத்தில் ஓர் கடிதம்!

நீதித்துறை சம்பந்தப்பட்ட மாண்புமிகுவை உதவி, சிபாரிசு எனக் கேட்டுப் பலரும் சந்திக்கிறார்களாம். இதில் சலிப்படைந்துபோன மாண்புமிகு, ‘சிபாரிசு கேட்டு என்னை அணுகாதீர்’ எனத் தன் அலுவலக வாசலில் போர்டு எழுதி வைத்துவிட்டாராம். ‘எங்களிடம் ஓட்டுக் கேட்டு வராதீங்கன்னு நாங்களும் போர்டு எழுதிவைக்கலாமா?’ எனக் கட்சிக்காரர்கள் சிலர் சத்தமிட, ‘அரசுப் பணிக்கு நான் எப்படி சிபாரிசு பண்ண முடியும்... என் துறைக்கு நானே இழுக்கு ஏற்படுத்தலாமா?’ எனப் புலம்பினாராம் அந்த மாண்புமிகு. #கடுப்பேத்துறாங்க மை லார்ட்!