Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

மாநகரை மூன்றாகப் பிரித்ததிலிருந்து மனவருத்ததில் இருக்கிறாராம் நகரின் உயரதிகாரி. பிரிப்பு மட்டுமின்றி உள்ளடி வேலைகளும் மிகுதியாக இருப்பதால், தினமும் முதன்மையானவரைச் சந்திக்கிற வகையில் உளவுத்துறையின் தலைமைப் பதவிக்கு வர விரும்புகிறாராம். அதற்காக முதன்மையானவரின் தந்தை ஆட்சி செய்த காலத்தில் தன் உளவுப் பணிகள் எப்படியெல்லாம் சிறப்பாக இருந்தன என்பதற்கான கோப்புகளைத் தயாரித்துவருகிறாராம். #பெரிய ஜவாலாருக்கே... சாரி, சவாலாருக்கே!

இது கொஞ்சம் வெளிப்படையான கிசுகிசு... முதலில் அ.தி.மு.க., பின்னர் சசிகலா பக்கம் என அணி மாறிய நகைச்சுவை நடிகர் செந்தில், இப்போது எதில் இருக்கிறார் என்பதே தெரியவில்லை. சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொள்ள மதுரைக்குப் போயிருக்கிறார். விமான நிலைய வாசலில் செந்திலின் வாயைக் கிளறிய சிலர், “ஜெயிக்கிற பக்கம் சேர்ந்திருக்கலாமே அண்ணே…” என ஆதங்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு செந்தில் சொன்ன பதில்: “தம்பி, என் பெயர் செந்தில். செந்தில் பாலாஜி இல்லை!” #ஆத்தி... என்னா... அடி!

ஆளுங்கட்சிக்கு எதிரான கருத்துகளை வலிமையாகப் பேச, சமீபத்தில் உடல் இளைத்த பூ நடிகையைப் பயன்படுத்தச் சொல்லி காவிக் கட்சியின் மாஜி காக்கிக்கு உத்தரவிட்டிருக்கிறதாம் டெல்லி. கொரோனா தடுப்புப் பணிகளின் குளறுபடி தொடங்கி புதிய அரசின் ஊழல் வரை தடாலடியாகப் போட்டு உடைக்கச் சொல்லியிருக்கிறார்களாம். சீக்கிரமே தமிழகம் முழுக்க அம்மணி சுற்றுப்பயணம் கிளம்பினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள். #இங்கு ஃபர்னிச்சர்கள் சிறந்த முறையில் உடைக்கப்படும்!

கதர்க் கட்சியில் தமிழகத் தலைவர் பதவியை அறிவிக்கும் நேரம் பார்த்து, விவசாயிகள் பிரச்னை பெரிதாகிவிட்டதால் பிரகாசமான பெண்மணிக்கு ரொம்பவே வருத்தமாம். கிட்டத்தட்ட அம்மணி பெயர் தலைவர் பதவிக்கு `டிக்’ செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த இடைப்பட்ட காலத்துக்குள் யாராவது குறுக்குசால் ஓட்டிவிடுவார்களோ என நினைக்கிறார். டெல்லி லாபிகள் மூலமாக அறிவிப்பை விரைவுபடுத்தச் சொல்லியிருக்கிறாராம். #சீக்கீரம் சொல்லுங்கய்யா... பக்கு பக்குனு இருக்குல்ல!

கிசுகிசு

உள்ளாட்சித் தேர்தல் செலவுக்கு இலைக் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மூலமாகத்தான் பசைப் பட்டுவாடா நடத்தப்பட்டதாம். ‘மணியான சீனியர் மாஜிக்கள் இருவர் மூலமாக நடத்தப்பட்ட விநியோகம், சரிவர கைக்கு வரவில்லை’ என மாவட்டங்கள் புலம்ப, ‘மாவட்டங்களுக்கு ஒதுக்கிய பசை எங்களுக்கு வரவில்லை’ என வேட்பாளர்கள் தரப்பிலிருந்து ஏகக் குமுறலாம். “இந்த நேரத்தில் எப்படி என்கொயரி பண்ண முடியும்? கைக்காசைப் போட்டுச் சமாளியுங்கள். தேர்தல் முடிந்ததும் பார்த்துக்கலாம்” எனச் சொல்லிவிட்டதாம் துணிவானர் தரப்பு. தேர்தலுக்குப் பிறகு மாஜிக்களுக்கு எதிராக வெளிப்படையாகவே வெடிக்கத் தயாராகிவருகிறார்களாம் பலர். #அப்ப, நியாயம் கேட்டு மணிகளை அடிக்கப் போறாங்க?! அதாவது, ஆராய்ச்சி மணிகளை!

வீடியோ சர்ச்சையில் சிக்கிய காவிக்கட்சிப் பிரமுகரை, மத்திய உளவு அமைப்பைச் சேர்ந்த சிலர் சமீபத்தில் நேரில் சந்தித்தார்களாம். நிகழ்வுக்குப் பின்னால் நடந்த சதி குறித்து விசாரித்தார்களாம். எல்லாம் முடிந்து கிளம்புகையில், ‘கவலைப்படாதீர்கள். உங்களை நம்பிக்கையோடு இருக்கச் சொன்னார்கள்’ என்றார்களாம். #‘தர்மமும் துரோகமும் ஒன்று... தர்மம் காக்க துரோகம் செஞ்சதுண்டு...’ சினிமா பாடல் பாஸ்!

டெல்டா மாவட்டத்தின் ட்ரீட்மென்ட் புள்ளி, அநியாயத்துக்கு அமைதிகாப்பது இலைக்கட்சியின் சீனியர்களை ரொம்பவே யோசிக்கவைத்திருக்கிறது. சின்ன தலைவியின் பக்கம் ஜாகையை மாற்றுகிறாரா எனச் சிலர் மூலமாக விசாரிக்க, ‘அப்படியெல்லாம் கிடையவே கிடையாது’ என்றார்களாம். ‘பிறகு ஏன் மௌனம்?’ எனக் கேட்க, ‘தேர்தல் நேரத்தில் பலர் மூலமாகவும் பதுக்கப்பட்ட பசை, கைக்கு வராமல் இழுத்துக்கொண்டே போவதுதான்’ என்றார்களாம். #மௌனமும் ஒருவகை ‘வைத்தியம்’னு ரூமியே சொல்லியிருக்கார்!