Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

அடுத்தடுத்த தேர்தல் தோல்விகளால் ரொம்பவே மனமுடைந்துபோயிருக்கும் அண்ணன் தலைவர், முதலில் கட்சிக்கான நிதியை வளப்படுத்த நினைக்கிறாராம். தேர்தலில் அடிப்படைச் செலவுகளுக்கே நிதியின்றி வேட்பாளர்கள் அல்லாடியதைப் பலரிடமும் வருத்தத்தோடு பகிரும் அண்ணன் தலைவர், “உங்களால் முடிந்த நிதியுதவியைச் செய்தால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் ஜெயித்துக் காட்டுவோம்” என்கிறாராம். #கைக்குக் கைமாறும் பணமே... உன்னைக் கைப்பற்ற நினைக்குது மனமே!

கிசுகிசு

டெல்லியில் ஒரு முக்கியமான நிகழ்வுக்கு, உச்ச நடிகர் வந்தால் சிறப்பாக இருக்கும் எனச் சொல்லி அவரை அழைத்திருக்கிறது ஒரு குழு. மருத்துவரீதியான காரணங்களைச் சொல்லி, உச்ச நடிகர் தவிர்த்துவிட்டாராம். காவிக் கட்சியின் ஆட்கள் சிபாரிசு செய்தும் `முடியவே முடியாது’ எனச் சொல்லிவிட்டாராம். கடைசி முயற்சியாக ‘அன்பளிப்பாக 10 சி’ என்றார்களாம். ‘இந்த அளவுக்கு வற்புறுத்துறீங்க, அதனால வர்றேன்…’ எனச் சொல்லி அன்பளிப்பைப் பெற்றுக்கொண்டு டெல்லிக்குப் போய்வந்தாராம் உச்ச நடிகர். #நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது... ஆனா கொடுக்கிறதைக் கொடுத்துட்டா கரெக்டா வருவேன்!

சமீபத்தில் தண்டனைக்கு ஆளான அம்மணிதான், முதன்மையானவரின் இல்லத்தரசிக்குக் கோயில் பிரசாதங்களைக் கொண்டுவந்து கொடுக்கும் பணியைச் செய்தவராம். ‘அந்தம்மாவையே கடவுள் காப்பாற்றாமல் விட்டுட்டானே...’ என இல்லத்தரசிக்கு ஏக வருத்தமாம். சட்டத்துக்கு உட்பட்டு தன்னாலான உதவிகளைச் செய்து கொடுப்பதாக அம்மணி தரப்புக்கு உத்தரவாதம் கொடுத்திருக்கிறாராம் இல்லத்தரசி. #தெய்வம் இருப்பது எங்கே... அது அங்கே... வேறெங்கே!?

காவிக் கட்சியின் மாஜி காக்கி அதிகாரி, சமீபத்தில் பவன் புள்ளியைச் சந்தித்துப் பேசினார். ஆளும் அரசு குறித்த எந்தக் குற்றச்சாட்டாக இருந்தாலும், போனிலேயே தன் கவனத்துக்குக் கொண்டுவரும்படி சொன்னாராம் பவன்காரர். ஆளும் அரசுக்கு எதிரான காவிக் கட்சியின் நடவடிக்கைகளைப் பாராட்டவும் செய்தவர், எந்த நேரத்திலும் எந்த உதவிக்காகவும் தன்னைத் தொடர்புகொள்ளலாம் என்றும் சொன்னாராம். விவரிக்க முடியாத அளவுக்கு காக்கி மாஜிக்கு உற்சாகமாம். #இனி, சின்ராச கையில பிடிக்க முடியாது!

உள்ளாட்சித் தேர்தல் களத்தில் முதன்முறையாகக் குதித்த, தன் மன்றத்தினர் வாங்கிய வாக்கு விவரங்களை வார்டுவாரியாக அனுப்பச் சொல்லி வாங்கிப் பார்த்தாராம் மெர்சலான நடிகர். தனிநபர் செல்வாக்குள்ள மன்ற நிர்வாகிகளை அடையாளம் காணத்தான் இந்த ஏற்பாடாம். “நீங்கள் பரப்புரைக்கு வந்திருந்தால், பல பேர் வென்றிருப்பார்கள்” எனத் தலைமை நிர்வாகிகள் சொல்ல, “அப்படிச் செய்திருந்தால் அது எனக்கான வெற்றியாக இருந்திருக்கும்… மன்றத்தினரின் செல்வாக்கை அறியத்தான் நான் விரும்பினேன்” என்றாராம் நடிகர். #கப்பு முக்கியம் பிகிலு!

கிசுகிசு

தனித்துப் போட்டியிட்டு மண்ணைக் கவ்விய, தடாலடிக் கட்சியின் தோட்டத்துத் தலைவர் மிகுந்த மனவருத்தத்தில் இருக்கிறாராம். ‘சில இடங்களையும் ஒதுக்கி, செலவுக்குப் பசை ஏற்பாடுகளையும் பார்த்துக்கொள்வதாகச் சொன்ன, இலைக் கட்சியின் பேச்சுவார்த்தையைத் தவிர்த்தது தவறு’ என இப்போது உணர்கிறாராம். இதற்கிடையில் தோற்றுப்போன நிர்வாகிகள் தோட்டம் தேடிவந்து புலம்ப, “நாம இல்லாம ஜெயிக்க முடியாதுன்னு இலைக் கட்சிக்கு இப்போ புரிஞ்சிருக்குமில்லை…” என்றாராம். #குப்புற விழுந்துட்டோம்... ஆனா, மீசையில மண் ஒட்டலை!

ஜாதகரீதியான அனுக்கிரங்கள் சரியாக அமைந்தும், டெல்லியின் சிக்னல் இன்னமும் கிடைக்காத வருத்தத்தில் இருக்கிறார் சின்ன தலைவி. அதனால்தான், தமிழகம் தழுவிய பயணத் திட்டம் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறதாம். டெல்லியைச் சரிக்கட்டி தங்கள் பக்கம் திருப்பக்கூடிய வலுவான மீடியேட்டர் தேவை என உணர்ந்திருக்கும் சின்ன தலைவி, மறைந்த அரசியல் ராஜதந்திரியின் சகோதரர்கள் இருவரையும் இதற்கான வேலையில் இறக்கியிருக்கிறாராம். #ஒன்பது கிரகங்களிலும் உச்சம் பெறணும்னா என்ன செய்யணும்?