பிரீமியம் ஸ்டோரி

பவன் புள்ளியின் திடீர் டெல்லி பயணம், ஆளும் தரப்பை ரொம்பவே யோசிக்கவைத்திருக்கிறது. எதிர்க்கட்சியும் காவிக்கட்சியும் பவனுக்கே நேரில் போய் புகார்க் கடிதங்கள் கொடுத்திருக்கும் நிலையில், பவன் புள்ளி அவற்றைவைத்து எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க முடியும் என முதன்மையானவர் சட்டப் புள்ளிகளுடன் ஆலோசனை நடத்தினாராம். இதற்கிடையில் டெல்லி சோர்ஸுகள், ‘அச்சப்பட ஒன்றுமில்லை’ எனத் தகவல் அனுப்ப, அதன் பிறகே நிம்மதி திரும்பியதாம். #அப்ப எல்லாம் வெறும் பில்டப்தானா?!

கிசுகிசு

பம்பரக் கட்சியில் வாரிசை முன்னிறுத்தக் கோரி, பல காலமாக வலியுறுத்தியவர்களே திடீரென கலகக்குரல் கிளப்புவது புயல் தலைவருக்குக் கடுமையான குழப்பத்தை உருவாக்கியிருக்கிறது. கட்சியை உடைக்க நினைக்கும் சிலர், திட்டமிட்டு சிலரைத் தூண்டிவிடுகிறார்களோ என நினைக்கிறாராம். மிக நெருக்கடியான சூழலிலும் யாருடைய சூழ்ச்சியிலும் சிக்காமல், உற்ற துணையாக நிற்கும் ஈரோட்டுப் புள்ளிதான் புயல் தலைவருக்கு இப்போதிருக்கும் ஒரே ஆறுதலாம். #கண்ணக்கட்டுது மை சன்!

ஆளுங்கட்சிப் புள்ளிகள் பலரோடும் இணக்கமான சூழலில் இருந்தும், எப்படித் தனக்கு எதிரான ரெய்டு நடவடிக்கைகள் நடக்கின்றன என மண்டைகாய்கிறாராம் குட்கா மாஜி. ‘இவை பெயரளவிலான நடவடிக்கைதான்… குட்கா வழக்கைக் கையிலெடுத்தால் அடுத்த நொடியே உங்களை உள்ளே வைத்துவிட முடியும். இப்போதும் உங்களை நாங்கள் காப்பாற்றிக்கொண்டுதான் இருக்கிறோம்’ என்கிறார்களாம் ஆளும் தரப்பில் நெருக்கமாக இருப்பவர்கள். ‘நாடகமா, நடவடிக்கையா?’ எனத் தெரியாமல் திண்டாடுகிறார் மாஜி. #குட்கா... தலைசுற்ற வைக்கும்!

கிசுகிசு

சமூக வலைதளங்களில், மதத் துவேஷத்தைத் தூண்டும் வகையில் செயல்பட்டதாகக் காவிக்கட்சியின் திருமணப் புள்ளியைக் கைதுசெய்தார்கள். டெல்லி வரை செல்வாக்கு இருந்தும், எப்படி நடந்தது இந்த நடவடிக்கை எனக் காவிக்கட்சிக்குள் ஏகக் கடமுடா. இதற்கு பதிலடியாகத்தான் கட்சியில் இருக்கும் நடிகையை ஆளும் தரப்புக்கு எதிரான புகாரோடு போலீஸை அணுகவைத்தார்களாம். ஆதாரபூர்வமான புகாரில் ஆளும் தரப்பினரைக் கைதுசெய்யாவிட்டால், பாரபட்ச நடவடிக்கை எனப் பாயத் தயாராகிறார்களாம். #வலைதள வாய்க்கா தகராறுகள்!

குணமாகித் திரும்பியிருக்கும் மாநகர காக்கி அதிகாரி, தனக்கு எதிரான உள்ளடி யுத்தத்தைத் தனது மகன் மூலமாகத் தவிடுபொடியாக்கியிருக்கிறாராம். இவருடைய மகன், ஆளும் தரப்பின் மருமகனை நேரில் சந்தித்து நிறைய விஷயங்களைப் பேசினாராம். இருவரும் ஏற்கெனவே நண்பர்களாம். ஆனாலும், காக்கி அதிகாரியின் மகன் இதுகாலம் வரை எந்த உதவியும் கேட்டது கிடையாதாம். மனம்விட்டுப் பேசியதன் பலனாக இப்போதைக்கு காக்கி அதிகாரியின் சீட்டுக்குச் சிக்கல் இருக்காது என்கிறார்கள். #மகனிருக்க பயமேன்!

சிறைக்குள் இருக்கும் ஆளுங்கட்சியின் டெல்லி புள்ளி, ஆதங்கத்தில் புலம்புகிறாராம். அரசுரீதியான எந்தச் சலுகையும் அவருக்குக் கிடைக்காதது ஒருபுறம்… கட்சிரீதியான ஆட்கள்கூட அவருக்குத் துணையாக வரவில்லையாம். ‘தலைமை போட்ட ரகசிய உத்தரவு’ எனச் சொல்லி நீதிமன்றம், சிறை என எந்தப் பக்கமும் எட்டிக்கூடப் பார்க்காமல் கட்சிக்காரர்கள் ஒதுங்கிக்கொண்டார்களாம். #அலோ... யார்னா இருக்கீங்களா... பயம்மாக்கீது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு