Published:Updated:

கிசுகிசு - க்யாரே... செட்டிங்கா?

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

நேரடிச் சந்திப்பு நடத்தியதோடு மட்டுமல்ல, நேரம் கிடைக்கும்போதெல்லாம் உச்ச நடிகரும் சின்ன தலைவியும் போனில் பேசுவது மத்திய, மாநில உளவுத்துறையினரை உற்று கவனிக்கவைத்திருக்கிறது. சின்ன தலைவிக்கு உச்ச நடிகர் கொடுக்கும் முக்கியத்துவம் குறித்து அரசியல் வட்டாரத்தில் யூகங்கள் அலையடிக்கின்றன. ‘கட்சி விவகாரத்தில் டெல்லியின் ஆதரவைப் பெறத்தான் உச்ச நடிகர் மூலமாக முயற்சி நடக்கிறது’ என்பதை அறிந்த இலைக் கட்சியின் நிர்வாகிகள், அதை முறியடிக்க, தங்கள் பங்குக்குக் காய்நகர்த்திவருகிறார்களாம். சின்ன தலைவிமீது, உச்ச நடிகரைக் காட்டிலும் அவர் மனைவி காட்டுகிற அக்கறையும் அன்பும்தான் பலருடைய புருவங்களை உயர்த்தவைத்திருக்கின்றன. #க்யாரே... செட்டிங்கா?

கிசுகிசு - க்யாரே... செட்டிங்கா?

‘இரண்டாம் கட்டத் தலைவர்கள் எத்தகைய கருத்துகளைப் பேசவிருக்கிறார்கள் என்பது குறித்து முன்கூட்டியே என்னிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்கிறாராம் அண்ணன் தலைவர். ‘தேவையற்ற கருத்துகளைப் பேசி, சட்டரீதியான சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டால் கட்சி பொறுப்பேற்காது’ என்பதையும் நாசுக்காகச் சொல்லிவிட்டாராம். உணர்ச்சி வேகத்தில் பேசுவதை அடியோடு குறைக்கும்படியும் அன்புக்கட்டளை போட்டிருக்கிறாராம். ஆளும் தரப்பு அதிரடி நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகக் கிளம்பும் செய்திகளால்தான் தம்பிகளைத் தற்காப்புக்குத் தயாராகச் சொல்கிறாராம் அண்ணன் தலைவர். #தற்காப்புக் கலைகள் அனைத்தையும் கரைத்துக் குடித்திருப்பார்போலயே!

டெல்லி விவாதங்களில் தொடர்ந்து பரபரப்பு கிளப்பிவரும் புயல் தலைவர், ஆரோக்கியம் குறித்த மத்திய கலந்தாய்வில் பங்கேற்றார். அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இந்தியில் பேச, “எனக்கு இந்தி தெரியாது. நீங்க என்ன பேசுறீங்கன்னே புரியாமல் நான் ஏன் இந்த நிகழ்வில் கலந்துக்கணும்?” எனப் புயல் தலைவர் சீறினாராம். சட்டென எழுந்த ஹெல்த்தான அமைச்சர், ‘‘நீங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி. உங்களுக்காகவே நாங்கள் அனைவரும் ஆங்கிலத்தில் பேசுகிறோம்’’ எனச் சொல்லி அதிகாரிகளையும் ஆங்கிலத்திலேயே பேசச் சொன்னாராம். இந்த மாதிரி கலந்தாய்வுகளில் தமிழக எம்.பி-க்கள் பெரும்பாலும் கலந்துகொள்வதே கிடையாது. தனிப்பட்ட ஆர்வத்தில் பங்கேற்று, மத்திய அமைச்சரின் மனதையும் மாற்றிய புயல் தலைவருக்கு டெல்லியில் செம ரெஸ்பான்ஸ். #ஹெல்த்தியான விஷயம்!

சினிமா, கட்டப்பஞ்சாயத்து என ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்த தடாலடிப் புள்ளி அவர். எம்.ஜி.ஆருக்கே வலதுகரமாக விளங்கிய மாஜி அமைச்சரின் பேரனிடம் பணரீதியான கைமாற்று நடத்தியிருந்தாராம். பலமுறை பஞ்சாயத்து நடத்தியும், தடாலடிப் புள்ளி அசைந்து கொடுக்கவில்லையாம். சமீபத்தில் நடந்த பஞ்சாயத்தும் வழக்கம்போல் இழுத்தடிக்கப்பட, ஆத்திரமான மாஜி அமைச்சரின் பேரன், தடாலடிப் புள்ளியை ரோட்டிலே சகட்டுமேனிக்குத் தாக்கினாராம். விலக்கிவிட வந்தவர்களையும் வெளுத்தெடுத்தாராம். ‘போலீஸில் புகார் கொடுக்கலாம்’ எனத் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் தடாலடிப் புள்ளியைக் கேட்க, “போலீஸ் கேஸெல்லாம் வேணாம். நம்ம பேருக்குப் பிரச்னையாகிடும்’’ எனச் சொல்லி அமைதியாகிவிட்டாராம். #காதல் படங்களாக எடுத்தவர் மோதல் காட்சிகளில்...

கிசுகிசு - க்யாரே... செட்டிங்கா?

உட்கட்சித் தேர்தலுக்கான பொறுப்பாளர் நியமனத்திலேயே, பணிவானவருக்கும் துணிவானவருக்கும் இடையே மனவருத்தங்கள் நிலவினவாம். அதனால், பெரும்பாலான இடங்களுக்கான ஆட்களை நியமிக்கும் பொறுப்பை ட்ரீட்மென்ட் புள்ளியிடமும், மூத்த சாமி புள்ளியிடமும் ஒப்படைத்துவிட்டார்களாம். இதை வகையாகப் பயன்படுத்திக்கொண்டு, தனக்கு நெருக்கமான பலரையும் பொறுப்பாளர்களாக அறிவித்தாராம் ட்ரீட்மென்ட் புள்ளி. #நடக்குறதெல்லாம் நமக்குச் சாதகமாத்தான் இருக்கு மொமன்ட்!

விரைவில் மகுடாபிஷேகம் செய்யப்படவிருக்கும் வாரிசுப் புள்ளியை, எந்தத் துறைக்கு அமைச்சராக்கலாம் என ஆளாளுக்கு ஆலோசனை சொல்லிவருகிறார்கள். முதன்மையானவர் கடந்துவந்த பாதையைப்போல் உள்ளாட்சித்துறைக்குக் கொண்டுவரலாம் எனப் பொதுவான சீனியர் புள்ளி சொன்னாராம். இளைஞர்நலன் தொடங்கி, வேளாண்துறை வரை விவாதிக்கப்பட்ட நிலையில், “இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருக்காமல், துணை முதல்வர் பதவியின் கீழ் என்னென்ன துறைகளைக் கொண்டுவரலாம் எனத் திட்டமிடுங்கள்” எனக் குடும்பத்திலிருந்து ஒரு குரல் ஒலித்ததாம். ‘நேரடியாக உச்ச பதவி’ என்பதில் உறுதியாக இருக்கிறார்களாம் குடும்பத் தரப்பில். #மகன்களைப் பெற்ற அம்மாக்களுக்குத்தான் தெரியும்...