Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

ஆளுங்கட்சியிலிருந்து வெளிவந்த ஆங்கிலப் பத்திரிகை, சில காலமாக வெளிவராமல் இருந்தது. அதை மீண்டும் கொண்டுவர நினைக்கிறாராம் பெரிய இடத்து வாரிசு. பத்திரிகையை நிர்வகிக்கப் போகிறவரும் அவரேதானாம். ஆசிரியர் பொறுப்புக்கு இப்போதே போட்டி நடக்கிறது. முன்னாள் பத்திரிகையாளர், கட்சியின் சீனியர் வழக்கறிஞர் என இருவரில் ஒருவருக்கு முன்னுரிமை வழங்க முடிவெடுத்திருக்கிறாராம் வாரிசு. #ஆங்கிலத்துலயும் அரசியல் பண்ணுவோம் மொமன்ட்!

கிசுகிசு

பல ரூட்டுகளைப் பிடித்து, புதிய பொறுப்புக்கு வந்த காவல்துறை அதிகாரி, தன்னை வாழ்த்த வந்த மில்க் மினிஸ்டரிடம், “உங்க ஆசீர்வாதம் எனக்கு வேணும்” எனச் சொல்லிக் கையைப் பிடித்துக்கொண்டார். மீடியாக்காரர்கள் அதை அப்படியே வீடியோவாக்கிவிட, அது பெரிதாகப் பரவிவிடாமல் பெரும்பாடுபட்டு அடக்கியது போலீஸ் தரப்பு. இதற்கிடையில் உள்ளூர் உடன்பிறப்புகளோ, “டெரர் காட்டும் அதிகாரிகள் இருந்தாலே மில்க் மினிஸ்டர் ஆட்டிப்படைப்பார். இப்படி மட்டையா மடங்குற அதிகாரி பவருக்கு வந்திருப்பதால், இனி அமைச்சர்தான் போலீஸ் ஆணையராவே இருப்பார்” என்கிறார்கள் பழைய பராக்கிரமங்களை நினைவூட்டி. #பால்னா பொங்குறதும் பாலிட்டிக்ஸ்னா பம்முறதும் சகஜம்தானே பாஸ்!

கிசுகிசு

இலைக் கட்சியின் துணிவானவர் திடீரென நியூமராலஜிப்படி தனது பெயரில் சிறு மாற்றத்தைச் செய்தார். “சிறைக்குச் செல்லும் சிக்கலைத் தவிர்க்க, பெயரில் எழுத்து மாற்றம் செய்வதுதான் ஒரே வழி” என அவருக்கு உற்ற துணையாக இருக்கும் ஆன்மிக ஆர்வலர்கள் சொல்ல, மறுப்பின்றி உடனே ஒப்புக்கொண்டாராம். “இன்னும் இரண்டு மாதங்களைத் தாக்குப்பிடித்துவிட்டால், அதன் பிறகு எவ்வித நடவடிக்கையாலும் உங்களை முடக்க முடியாது” என்றும் உத்தரவாதம் கொடுத்து அனுப்பியிருக்கிறார்களாம். #ஸ்வாமியே சரணம்... அப்படித்தானே!

கிசுகிசு

“குடும்பத்துக்கு எதிரான நிகழ்வுகளில் ஈடுபடாதீர்கள்...” எனப் பல சீனியர்கள் எச்சரித்த பிறகும்கூட, பிரமாண்ட விழா நடத்தி, உறுப்பினர் சேர்க்கையில் தன் ஆளுமையை நிரூபித்துக் காட்டினார் அணில் அமைச்சர். நினைத்தபடியே இந்த விவகாரம் குடும்பரீதியான சிக்கலைக் கொடுக்க, “கட்சியில் சேர வந்த மகளிரை நான் இளைஞரணியில் சேர்க்கவில்லை. பொதுவான உறுப்பினராகத்தான் சேர்த்தேன்” என ஆதங்கத்தில் இருந்தவர்களுக்கு ஆளனுப்பி தன்னிலை விளக்கம் கொடுத்தாராம். “பாம்புக்குத் தலையையும், மீனுக்கு வாலையும் காட்டித் தப்பிப்பதில் அணில் அமைச்சரை அடிச்சுக்க ஆளே கிடையாது” என்கிறார்கள் அருகிலிருப்பவர்கள். #உலக நடிப்புடா சாமி!

கிசுகிசு

மாநகராட்சி, நகராட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களை, மாவட்டச் செயலாளர்களே தேர்வுசெய்து கொடுக்கும்படி சுதந்திரம் கொடுத்திருக்கிறதாம் ஆளுங்கட்சி. கூட்டணிக் கட்சிகளுக்கான ஒதுக்கீடுகளையும் மாவட்டச் செயலாளர்களே தீர்மானித்து, பிரச்னை வராதபடி பார்த்துக்கொள்ளச் சொல்லி உத்தரவாம். “தங்களுக்கு எதிரானவர்களை மாவட்டச் செயலாளர்கள் பழிதீர்த்துக்கொள்ள இது வாய்ப்பாகிவிடும்” என சீனியர்கள் சிலர் சொன்னபோதும், முதன்மையானவர் தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லையாம். #எங்க மேல அவ்வளவு நம்பிக்கையா கோப்பால்..!

கிசுகிசு

இலைக் கட்சியில் இணையதள முன்னெடுப்புகளைத் தீவிரமாகச் செய்து அசத்தியவர் சாமி பிரமுகர். பணிவானவருக்குப் பக்கபலமாக இருந்தவர், ஒருகட்டத்தில் கட்சியைவிட்டே வெளியேறினார். ஆளுங்கட்சிப் பக்கம் தாவ நினைத்தவருக்கு, ஏனோ இன்னமும் கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை. “அறிவான ஆளைப் பயன்படுத்திக்க மாட்டேங்கிறீங்களேப்பா…” என ஆன்லைன் ஆட்கள் சிலர் வருத்தப்பட, “அவர்மீதான வழக்குகளை ஸ்பீடு பண்ணாமல் இருக்கோமே, அதை நினைச்சு சந்தோஷப்படச் சொல்லுங்க” என்கிறார்களாம் ஆளும் தரப்பில். #வாயை வெச்சுக்கிட்டு சும்மாருங்க பிரதர்!

கிசுகிசு

தமிழக கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவியை, சமீபத்தில் ராஜினாமா செய்தார் ரூபா குருநாத். ‘தனிப்பட்ட காரணத்துக்காக’ என அவர் சொன்னாலும், பெரிய இடத்து வாரிசு அந்தப் பதவியை டார்கெட் வைத்ததுதான் உண்மையான காரணமாம். காவிக் கட்சியின் ஆளுமை வாரிசிடம், நம்ம ஊர் வாரிசு பேசி, தன் நாற்காலியை அடைவதற்கான நடவடிக்கைகள் தெரிந்துதான் ரூபா குருநாத் தானாக ராஜினாமா செய்தாராம். #அத்தனைக்கும் ஆசைப்படுகிறாரே!