அரசியல்
Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

இலைக் கட்சியின் துணிவானவரும், டெல்லியின் சாலைப்புள்ளியும் தொடர்ந்து நெருக்கத்தில் இருக்கிறார்களாம். கிடப்பில் போடப்பட்ட எட்டுவழிச் சாலைத் திட்டத்தை மீண்டும் கையிலெடுத்து நிறைவேற்றியே ஆக வேண்டும் எனப் பணிவானவர் சொல்ல, விரைவிலேயே அதற்கான வேலைகளை ஆரம்பிக்க உத்தரவாதம் கொடுத்திருக்கிறாராம் டெல்லியின் சாலைப்புள்ளி. தமிழக அரசின் ஒப்புதலைப் பெற, சாலைப்புள்ளி எத்தகைய அஸ்திரத்தை எடுக்கப்போகிறார் என்பதுதான் புதிர். #செல்லும் வழியெங்கெங்கும் பள்ளம் வரலாம்!

கிசுகிசு

சாதிப்பெயரில் கட்சியைத் தொடங்கி நடத்தினாலும், பெரும்பாலும் சாதிப் பாகுபாடு பார்க்காத நடிகர் அவர் என்கிறார்கள். அரசியல் நடவடிக்கைகளைச் சற்றே அமைதியாக்கிவிட்டு, தீவிரமாக சினிமா பக்கம் இறங்கிவிட்ட அவரிடம், “இனி அரசியல் நடவடிக்கைகள் அவ்வளவுதானா?” என நிர்வாகிகள் கேட்க, “அடுத்த மாசம் ஒரு படம் தொடங்கப்போறேன். ஆயிரம் மேடைகள் போட்டுப் பேச வேண்டிய அரசியலை அந்தப் படத்தில் பேசப்போறேன். அப்படியோர் அரசியல் பட்டாசுப் படம்…” என்றாராம் நடிகர். கரன்ட் அரசியலைக் கலாய்க்கும்விதமாகத் துணிச்சலோடு கதை செய்திருக்கிறார்களாம். #சினிமாதான் நம்மளைக் காப்பாத்தும்டா சிதம்பரம்!

கிசுகிசு

பெரிய மாநிலத்தில் தேர்தலை எதிர்கொள்ளும் வாரிசுத் தலைவர், தமிழகத்தின் ஆளும் தலைவர்மீது ரொம்பவே வருத்தத்தில் இருக்கிறாராம். “இரண்டு நாள்கள் எங்களுக்கு ஆதரவாக இங்கு வந்து பரப்புரை செய்து தர முடியுமா?” எனக் கேட்டாராம் வாரிசுத் தலைவர். “கதர்க் கட்சியினர் சங்கடப்படுவார்களே…” எனத் தமிழகத்தின் தலைவர் இழுக்க, “உங்களின் புகைப்படத்தையாவது நாங்கள் பயன்படுத்திக்கொள்ளலாமா?” என்றாராம் வாரிசு. அதற்கும் தமிழகத் தலைவர் சம்மதம் சொல்லவில்லையாம். “கதர்க் கட்சிக்கு நீங்கள் இவ்வளவு மரியாதை செய்கிறீர்கள். ஆனால், அவர்கள் அதையெல்லாம் நினைத்துப் பார்க்க மாட்டார்கள்” எனச் சொல்லி வேதனையை வெளிக்காட்டினாராம் வாரிசு. #‘பயப்படுறியா குமாரு’ மொமன்ட்!

கிசுகிசு

விசில் கட்சிப் பக்கம்போன சாமி புள்ளிக்கு ஆரம்பத்தில் நல்ல மரியாதை இருந்தாலும், அதன் பிறகு இனிஷியல் புள்ளியை அணுகுவதே சிரமமாகிவிட்டதாம். போனிலும் தொடர்புகொள்ள முடியாத நிலையாம். இனிஷியல் புள்ளியின் உதவியாளருக்கு போன் பண்ணி சகட்டுமேனிக்குத் தன் சங்கடத்தைச் சொல்லிவிட்டுத்தான் கட்சியைவிட்டுக் கழன்றாராம் சாமி புள்ளி. #போன் அட்டெண்ட் பண்ணாதோர் முன்னேற்றக் கழகம்!

கிசுகிசு

‘கட்டுமானப் பணிகளை, பாரம்பர்யமாகச் செய்யும் நிறுவனங்களுக்குத் தொடர்ந்து கொடுக்க வேண்டாம்’ எனப் பெரிய இடத்து குடும்பப்புள்ளி உத்தரவு போட்டிருக்கிறாராம். “இரண்டாயிரம் ஸ்வீட் பாக்ஸ் டார்கெட்” எனச் சொல்லி, கட்டுமானப் பணிகளுக்குப் புதிய நிறுவனத்தைக் கைகாட்டுகிறாராம் அந்தப் புள்ளி. ‘அப்பா… சாமி…’ எனக் கெஞ்சும் நிறுவனத்துக்கு நெருக்கடி மேல் நெருக்கடி கொடுத்து, கட்டுமானப் பணிகளைக் கனவிலும் நினைக்காதபடி துரத்துகிறார்களாம். பல வருடங்களாகக் கட்டுமானப் பணிகளில் இருக்கும் இதர நிறுவனங்களை இலைக் கட்சியின் ஆதரவு நிறுவனங்களாக முதன்மையானவரிடம் சொல்லிப் புறந்தள்ள வைத்திருக்கிறார்களாம். #இவ்வளவு ஸ்வீட் சாப்பிடுறது நல்லதில்லை!

கிசுகிசு

‘கிராமப் பஞ்சாயத்துக்கான பொருள்களை, குறிப்பிட்ட நிறுவனத் தயாரிப்புகளாகத்தான் தேர்வுசெய்ய வேண்டும்’ என்றும், `ஆளும் தரப்பு சிபாரிசு செய்யும் கடைகளில்தான் அவற்றை வாங்க வேண்டும்’ என்றும் திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதாம். கிராமப் பஞ்சாயத்துகளில் தலையீடு செய்யக் கூடாது என முதன்மையானவர் உத்தரவிட்டிருக்கும் நிலையில், இந்த ஆஃப் தி ரெக்கார்ட் ஆர்டருக்குப் பின்னால் இருப்பது யார் எனப் பெரிய குழப்பம் நிலவுகிறது. ஆட்சியை ஆட்டுவிக்கும் நிழல் சக்திகள்தான் இந்தப் பேரத்தின் பின்னணியில் இருக்கிறார்களாம். #‘விடியல்’ வந்தவுடனே ‘நிழலும்’ வந்துருச்சுபோல!