Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

கட்சிப் பதவி பறிக்கப்பட்ட தம்பி எம்.எல்.ஏ., வாரிசுப்புள்ளிக்கு மிக நெருக்கமானவராம். எந்த நேரத்திலும் தொடர்புகொண்டு பேசுகிற அளவுக்கு வாரிசுப்புள்ளியும் நெருக்கம் பாராட்டக்கூடியவராம். பதவிப் பறிப்புக்குப் பிறகு, வாரிசுப்புள்ளி தன்னோடு பேசாமல் போய்விடுவாரோ என அஞ்சினாராம் தம்பி எம்.எல்.ஏ. ஆனால், பழையபடி வாரிசுப்புள்ளி அதே அன்பைத் தம்பி எம்.எல்.ஏ-மீது காட்ட, பலருக்கும் ஆச்சர்யம். பதவி போனாலும் பாசம் நிலைத்ததில் தம்பி எம்.எல்.ஏ-வுக்கு ரொம்பவே நிம்மதியாம். #இது போதும் எனக்கு... இது போதுமே!

கிசுகிசு

ஆரம்பத்தில் பவன்காரர் அன்பு பாராட்டியதில், ரொம்பவே நெகிழ்ந்துபோயிருந்தாராம் முதன்மையானவர். ஆனால், டெல்லியின் சொல்லுக்குத் தக்கபடி பவன்காரரின் செயல்பாடுகள் டெரராக அமைய, முதன்மையானவருக்குச் சந்தேகம் வலுத்திருக்கிறது. முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகள் மூலமாக, கூடுதல் தலைவலியைக் கொடுக்க பவன்காரர் ஆலோசிப்பதாகவும் அடுத்தகட்டத் தகவல் வந்திருக்கிறதாம். பவன்காரரின் கான்டாக்டில் இருக்கும் அதிகாரிகள் பட்டியல் அலசப்படுகிறதாம். #நெகிழ்ச்சி... மிரட்சி... புரட்சி!

கிசுகிசு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், ஸ்வீட் பாக்ஸ் விநியோகத்துக்கான பொறுப்பை இனிஷியல் அமைச்சரிடம் ஒப்படைத்திருக்கிறார்களாம் ஆளும் தரப்பில். ‘மாவட்டரீதியான செலவுகளைத் தாண்டி, மற்ற விநியோகங்களுக்கு அமைச்சரை அணுகலாம்’ எனச் சொல்லப்பட்டிருக்கிறதாம். வெற்றியை மொத்தமாக அறுவடை செய்ய இந்த வியூகமாம். #வெற்றி வேல்... வீர வேல்!

கிசுகிசு

“சில காலத்துக்கு என் பெயர் பெரிதாக எதிலும் அடிபடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்” எனக் கட்சி நிர்வாகிகளிடம் அன்புக் கோரிக்கை வைத்திருக்கிறாராம் குட்கா மாஜி. போஸ்டர், பேனர், விளம்பரம் என எதிலும் தன் பெயரோ, படமோ இடம்பெறக் கூடாது எனச் சொல்லியிருக்கிறாராம். நெருக்கமான நிருபர்களிடம், “எனக்குச் சாதகமான செய்திகளைக்கூட பிரசுரிக்க வேண்டாம்” என்கிறாராம். பப்ளிசிட்டி மன்னனாக இருந்த மாஜி, எதற்கு இந்த அளவுக்குப் பம்முகிறார் எனப் புரியாமல் திண்டாடுகிறார்கள் இலைக் கட்சி நிர்வாகிகள். #இந்தச் சேதியைச் சொல்லித்தானே பாஸ் ஆகணும்!

கிசுகிசு

பரோட்டா புகழ் நடிகர், மாஜி காக்கி அதிகாரிக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில், காவல்துறையின் சுணக்கத்தை வெளுத்தெடுத்துவிட்டது உயர் நீதிமன்றம். மாஜி காக்கி அதிகாரிக்கு ஆதரவாக, காக்கி அதிகாரிகள் செய்த உள்ளடி வேலைகளை விசாரித்த நீதிமன்றம், ‘வழக்கை மத்தியக் குற்றப்பிரிவு விசாரிக்க வேண்டும்’ என உத்தரவு பிறப்பித்தது. விசாரணையின் ஆரம்பகட்டத்திலேயே இருவரும் சுமுகமாகப் போகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். நடிகர் இறங்கிவந்தபோதும், மாஜி காக்கி அதிகாரி ‘தனக்கு எதிராக யாரும் எதுவும் செய்ய முடியாது’ எனச் சொல்லி ஒதுங்கினாராம். இப்போது அதிகாரிகளே நினைத்தாலும் மாஜியைக் காப்பாற்ற முடியாத நிலையாம். #ஷோல்டரை இறக்குங்க பாஸ்னு சொன்னா யார் கேக்குறா?!

கிசுகிசு

மாங்கனி மாவட்டத்தில், பெரிய பதவியை வென்றே தீர வேண்டும் எனச் சொல்லி, கட்சி நிர்வாகிகளுக்கு அள்ளிக்கொடுத்திருக்கிறாராம் இலைக் கட்சியின் துணிவானவர். ஆளும் தரப்பில் ‘குயின்’ பெண்மணியைப் பெரிய பதவிக்குக் கொண்டுவர, கிட்டத்தட்ட முடிவெடுத்துவிட்டார்களாம். அதனால், அந்தப் பெண்மணியின் வார்டில் இலைக் கட்சியினர் அநியாயத்துக்கு ஸ்வீட் மழை பொழிகிறார்களாம். அதேநேரம் ஆளும் தரப்பில், ‘என்னுடைய சொந்த வார்டாக எண்ணி வரிந்துகட்டிப் பணியாற்றுங்கள்’ என அப்பகுதி நிர்வாகிகளுக்குக் குறுந்தகவல் அனுப்பி, அனல் பறக்கவைத்திருக்கிறாராம் வாரிசுப்புள்ளி. #ஒரு பக்கம் மழை... ஒரு பக்கம் அனல்... பாவம் மக்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism