Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

நாடாளுமன்றத்தில் உச்சமானவர், வாரிசு அரசியலுக்கு எதிராகக் கடும் குரலை எழுப்பியது, தமிழகத்தின் முதன்மையானவரை ரொம்பவே அச்சம் கொள்ள வைத்ததாம். தான் பவரில் இருக்கும்போதே தன் வாரிசை உச்சத்துக்குக் கொண்டுவரத் துடிக்கும் முதன்மையானவர், டெல்லியின் கோபம் வேறு மாதிரியான விளைவுகளை உண்டாக்கிவிடுமோ எனக் கவலைப்படுகிறாராம். ‘நீட்’ தொடங்கி ‘சமூகநீதி’ குறித்த விஷயங்கள் வரை அடக்கி வாசிக்க ஆலோசனை நடக்கிறதாம். #இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே... அதுக்குள்ளயா?

“கட்டுத்தொகை கட்டவே பிள்ளைகள் ரொம்ப கஷ்டப்படுறாங்க” எனச் சொல்லி, உள்ளாட்சித் தேர்தலிலும் பலரிடமும் உண்டியல் குலுக்கப் பார்த்தாராம் அண்ணன் தலைவர். ‘நிதி கொடுத்தால் மிதிதான்’ என ஆளும் தரப்பு வழக்கமான அன்பளிப்புப் புள்ளிகளை அதட்டிவைக்க, அண்ணன் தலைவருக்குப் பிடிகொடுக்காமல் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டார்களாம் பலரும். அதனால்தான், ஆளும் தரப்பு மீதான கோபம் அதிகமாகி, திடீர் பிரஸ் மீட்டுக்கு அழைப்புவிடுத்து, அர்ச்சனை மழை பொழிந்து ஆத்திரத்தைத் தீர்த்தாராம். #குடல் குழம்பு சாப்புடுங்கண்ணே கொதிப்பு அடங்கும்!

காவிக் கட்சியின் கலைப்பிரிவில் முட்டல் மோதல்களுக்குக் கொஞ்சமும் குறைவில்லையாம். கலைப்பிரிவின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் ஆட்ட அம்மணி, சிலரை அதிரடியாக நீக்க... மாஜி காக்கி அவர்களை மறுபடியும் சேர்க்க... கலைப்பிரிவு கலகலத்துக்கிடக்கிறது. கலைப்பிரிவிலிருந்து பலரையும் நீக்கிய அம்மணியை விரைவில் நீக்கி, வேறு பிரிவுக்கு அனுப்ப வேலை நடக்கிறதாம். ‘அப்படி நடந்தால், அன்றைக்குத்தான் இருக்கு கச்சேரி’ எனச் சொல்லி அதிரடிக்குக் காத்திருக்கிறாராம் ஆட்ட அம்மணி. #கச்சேரி கச்சேரி களைகட்டுதம்மா!

நடுநிலைக் கட்சியின் சார்பில், ‘பத்து பேராவது வெற்றிபெறுவார்களா?’ எனக் கட்சி நிர்வாகிகளிடம் கேட்டாராம் நட்சத்திரத் தலைவர். நிர்வாகிகள் அமைதி காக்க, “சொந்தச் செல்வாக்கு கொண்டவர்களையாவது தேர்வுசெய்து நிறுத்தியிருக்கலாமே?” என ஆத்திரப்பட்டாராம். “சொந்தச் செல்வாக்கு இருந்தால், நம்ம கட்சியில எப்படி இருப்பாங்க?” எனத் தலையிலடித்துக்கொள்ளாத குறையாகப் புலம்பினார்களாம் நிர்வாகிகள். #அழுகை வரலேன்னு சொல்லலை... வராம இருந்தா நல்லாருக்கும்னுதான் சொல்றேன்!

கிசுகிசு

கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலில் கவனம் பெற்றதுபோல, நகர்ப்புறத் தேர்தலிலும் கவனிக்கத்தக்க வெற்றியைப் பெற வேண்டும் என்பதில் `மாஸ்டர்’ நடிகரின் இயக்கத் தளபதி தீவிரமாக இருக்கிறாராம். “பேர் சொல்ற அளவுக்கு ஜெயிச்சுட்டா, நம்ம சார் ஓப்பன் அரசியலுக்கு வந்துடுவார். அதனால, வரிஞ்சுகட்டி வேலை பாருங்க” என மன்ற நிர்வாகிகளை உசுப்பேற்றுகிறாராம். ‘பசை கவனிப்புகளைச் செய்யாமல், சொந்தக் காசுக்கு வேட்டுவைக்கப் பார்க்கிறாரே’ எனப் புலம்புகிறார்கள் மன்றத்தினர். #நோகாம நொங்கு திங்கணுங்களாங்ணா..?!

பள்ளி விவகார என்கொயரிக்காகக் காவிக் கட்சி சார்பில் தமிழகம் வந்த ஆக்‌ஷன் நடிகை, சின்ன தலைவியிடம், “கட்சியை ஒன்றுபடவைத்து, உங்கள் தலைமையின் கீழ்க் கொண்டுவர எல்லா முயற்சிகளையும் எடுக்கிறேன்” என உறுதி கொடுத்திருக்கிறாராம். தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இலைக் கட்சியின் சரிவுகளை ஆதாரத்துடன் எடுத்துரைத்து, டெல்லியின் மனதைக் கரைக்க ஆக்‌ஷன் நடிகை மூவ் செய்கிறாராம். இதனால் மிகுந்த நம்பிக்கையில் இருக்கிறார் சின்ன தலைவி. #எத்தைத் தின்றால்... பித்தம் தெளியும்?!

வறட்சி மாவட்டத்தில் ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலாளருக்கும், போக்கும் வரத்துமாய் இருக்கும் அமைச்சருக்கும் மோதல் தூள்பறக்கிறதாம். “மாவட்டப் பொறுப்பையே மாற்றுகிறேன்” என அமைச்சர் ஆவேசமாக, “மந்திரிப் பதவியையே மாற்றிக்காட்டுகிறேன்” என மார்தட்டுகிறாராம் மா.செ. இந்தப் பனிப்போரில், யார் வெல்லப்போகிறார்கள் என்பதை மொத்த மாவட்டமும் பட்டிமன்றமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது. #போர்... ஆமா... போர்!