Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

நான்கு ராஜ்யசபா சீட்டுகளுக்கு யார் யார் என்கிற போட்டி ஆளுங்கட்சிக்குள் தீவிரமாக நடக்கிறது. முதன்மையானவர், இல்லத்தரப்பு, மருமகன், வாரிசு என நால்வருக்கும் ஒவ்வொரு சீட் எனப் பங்கு பிரிக்கப்பட்டிருக்கிறதாம். இதனால், நால்வரையும் அணுகி நற்பெயர் பெறப் போராடுகிறார்கள் நிர்வாகிகள் பலரும். அதேநேரம், ‘நாலு சீட்டையும் குடும்பமே பங்கு போட்டுக்கிட்டா, கட்சிங்கிறது பேருக்கு மட்டும்தானா?’ என்கிற கேள்வியும் சீனியர்கள் மத்தியில் பெரிதாக எதிரொலிக்கிறது. இந்தப் போட்டிக்குள் நுழைந்து சேதாரமாகிவிடக் கூடாது எனக் கூட்டணிக் கட்சிகள் அநியாயத்துக்கு அமைதிகாக்கின்றன. #அந்த நா...லு பேருக்கு நன்றி!

சர்வதேசப் போதைப்பொருள்கள் சென்னைக்குள் எப்படியெல்லாம் ஊடுருவுகின்றன என்பதை, சமீபத்தில் ரிலீஸான பெரிய நடிகரின் ஸ்ட்ராங்க் படத்தில் தெளிவாகக் காட்டியிருந்தார் தீரமான இயக்குநர். “இந்த போதை நெட்வொர்க், சென்னையில் உண்மையாகவே இயங்குகிறதா இல்லை கற்பனை கதையா?” எனக் கேட்டாராம் முதன்மையானவர். பெரும்பாலும் நிஜ சம்பவங்களை மட்டுமே படமாக்கும் பாணி கொண்டவர் அந்த இயக்குநர் என்பதால், ‘விசாரித்துச் சொல்கிறோம் சார்…’ என்றார்களாம் அதிகாரிகள் தரப்பில். சென்னையில் போதை நெட்வொர்க் இயங்காதபடி முதல்வர் நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கும் நிலையில், இயக்குநரிடமிருந்தே விசாரணையைத் தொடங்கவிருக்கிறார்களாம். #நேர்கொண்ட விசாரணை!

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், யாருக்கும் ‘பசை’யைக் காட்டாமல் கமுக்கமாக இருந்துகொண்டார் இலைக் கட்சியின் துணிவானவர். சின்ன தலைவியின் பக்கம் ஆதரவு அலைபோல் தோற்றம் தெரியக் காரணமே இந்தக் கஞ்சத்தனம்தான் என்கிறார்கள். இது குறித்து ஆதங்கப்பட்ட கொங்கு நிர்வாகிகளிடம், “ஒற்றைத் தலைமையாக என்னை உட்கார வையுங்கள்… தேர்தல் செலவுகளை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றாராம் துணிவானவர். இந்தத் தகவல் பணிவானவர் கவனத்துக்குச் சொல்லப்பட, “செலவு பண்ண அந்தம்மாவும் தயாராத்தான் இருக்காங்க. இவர் பண்றேன்னு சொல்றதைவிட பல மடங்கு அவங்க பண்ணுவாங்க. அப்போ அந்தம்மாவோட தலைமையை ஏற்றுக்கொள்வோமா?” என்று திருப்பிக் கேட்டாராம் பணிவானவர். #லேடன்ட்ட பேசுறியா..? பின்ன்ன்ன்ன் லேடன்!

கிசுகிசு

கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தித் தரக் கோரி, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தைச் சந்தித்து, விவசாயச் சங்க நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தி வந்தார்கள். ஆனாலும், வேளாண் பட்ஜெட்டில் கரும்பு கொள்முதலுக்கான நிர்ணய விலையை உயர்த்தி அறிவிப்பு வரவில்லை. இது குறித்து ஆதங்கப்பட்ட விவசாயிகளிடம், “நான் சொல்லவேண்டியவர்கிட்ட சொல்லிட்டேன். ஆனாலும் நடக்கலையே…” என்றாராம் அமைச்சர். இதைவைத்து, “கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தித் தருவோம்னு தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுத்துட்டு, இப்படி யார் யாரையோ கைகாட்டிக் காரணம் சொல்வது நியாயமா?” என விவசாயச் சங்கங்களின் வாட்ஸ்அப் குரூப்களில் வறுத்தெடுக்கிறார்கள். இந்த வாட்ஸ்அப் குரூப்பில் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர், அதிகாரிகள் எனப் பலரும் இருக்கிறார்களாம். #கரும்பு விலை கசக்குது பாஸ்!

வெளிநாட்டுப் பயணத்தில் முதன்மையானவரைக் காட்டிலும் அதிக தொழிலதிபர்களைச் சந்தித்துப் பேசியவர் மருமகன்தானாம். அந்த நாட்டில் பெரிதாகக் கோலோச்சிவரும் இரண்டெழுத்து நிறுவனத்தின் உரிமையாளருடன் நீண்ட நேரம் பேசிய மருமகன், சென்னையில் தொடங்கப்படவிருக்கும் பல தொழில் வாய்ப்புகளை அவருக்கு முடித்துக்கொடுக்க நினைக்கிறாராம். ‘அரசுக்கும் வருவாய்… நமக்கும் நட்பு…’ என மருமகன் சொன்ன டீல் முதன்மையானவர் தரப்பிலும் ஓகே செய்யப்பட்டுவிட்டதாம். #ஆடு மேய்ச்ச மாதிரியும் ஆச்சு... அண்ணனுக்குப் பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு!

‘சின்ன தலைவியின் பயணங்களுக்குக் கட்சிக்காரர்கள் யாரும் ஒத்துழைப்பு வழங்கக் கூடாது’ எனக் கறார் உத்தரவு போட்டாராம் இனிஷியல் புள்ளி. மலைக்கோட்டை நகரின் மன்னர் குடும்பப் பெண்மணி அந்தக் கட்டுப்பாட்டையும் தாண்டிப் போய், சின்ன தலைவியைச் சந்தித்திருக்கிறார். நீண்ட நேரம் பேசியும், இனிஷியல் புள்ளி போட்ட ஆஃப் தி ரெக்கார்ட் ஆர்டர் குறித்து ஒரு வார்த்தைகூட அந்தப் பெண்மணி சொல்லவில்லையாம். “கட்சிக் கட்டுப்பாட்டை மீறினாலும், யாரையும் காட்டிக்கொடுக்காமல் நீங்க நடந்துக்கிறவிதம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நம்ம செல்வாக்கை நம்ம குடும்பத்தினரே குலைக்கிற நிலையை நீங்க சொல்லாமலேயே நான் உணர்ந்திருக்கேன்” என்றாராம் சின்ன தலைவி. கண்கலங்கி விடைபெற்றிருக்கிறார் மன்னர் குடும்பப் பெண்மணி. #இந்த மெகா சீரியலுக்கு ஒரு எண்டே இல்லியா?!