Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

முதன்மையானவரின் துபாய் மற்றும் டெல்லி பயணங்களின் பின்னணியை, கொஞ்சமும் அஞ்சாமல் உடைத்துப் பேசினார் இலைக் கட்சியின் துணிவானவர். “துபாய் பயணத்துக்குப் பின்னணி சொன்னது சரி, டெல்லி பயணத்தைப் பற்றியும் விமர்சித்தது ஏன்?” எனத் துணிவானவரைப் போட்டுத் துருவியெடுத்துவிட்டார்களாம். “மரியாதை நிமித்தச் சந்திப்புக்கு மலினமான காரணத்தைக் கற்பித்து எங்களையும் சேர்த்து அசிங்கப்படுத்தலாமா?” எனக் காவிக் கட்சியின் டெல்லி ஆட்கள் ‘காச்மூச்’ காட்ட, துணிவானவருக்கு வியர்த்துக் கொட்டிவிட்டதாம். ‘கட்சிக்குள் பல பிரச்னைகள் நடக்கும் நேரத்தில், டெல்லியைப் பகைத்துக்கொள்வதுபோலாகிவிட்டதே’ என நெருக்கமானவர்களிடம் கலங்கினாராம் துணிவானவர். #கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டமோ!?

கிசுகிசு

துறைரீதியாகப் பந்தாடப்பட்ட அமைச்சருக்கு, விரைவில் முதன்மையானவரை நேரில் சந்திக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகச் சொல்லியிருக்கிறாராம் மருமகன். அமைச்சரவையிலிருந்தே முதன்மையானவர் தூக்கத் துணிந்த நிலையில், தான் தலையிட்டுப் பதவி மாற்றத்தைச் செய்யவைத்ததாகவும் சொன்னாராம். ‘வருத்தத்தைத் தூக்கிப்போட்டுவிட்டு வழக்கமான பணிகளைத் தொடருங்கள்’ என மருமகன் பூஸ்ட் கொடுத்த பிறகு, புதுத் துறையின் பணிகளைப் புதுத் தெம்போடு பார்க்கத் தொடங்கியிருக்கிறார் அமைச்சர். #ம்... ஹார்லிக்ஸ் போன்விட்டாகூட குடுங்க!

கிசுகிசு

சின்ன தலைவிக்கும், இனிஷியல் புள்ளிக்குமான பனிப்போர் தீவிரமாகிவருகிறது. தங்கள் பக்கம் இணக்கம் காட்டத் தொடங்கியிருக்கும் இலைக் கட்சியின் பணிவானவரை, யார் கன்ட்ரோலில் எடுப்பது எனப் போட்டி நடக்கிறதாம். ஆனால், இருவரிடமும் எதையும் காட்டிக்கொள்ளாமல் நல்லபடி பேசிவருகிறார் பணிவானவர். இதற்கிடையில் பணிவானவரின் தம்பியோ, “இவர் ஒதுங்கியிருந்தால் எல்லாரும் சேர்ந்திருவாங்க” என இனிஷியல் புள்ளிக்கு எதிராக வெளிப்படையாகவே சொல்லத் தொடங்கியிருக்கிறாராம். # ‘படத்த எப்ப சார் போடுவீங்க’ மொமன்ட்!

கிசுகிசு

ஞானமான தயாரிப்பாளருக்கு எதிராக, வருத்தப்படாத நடிகர் கோர்ட்டில் வழக்கு போட்டிருக்கிறார். இது ஒருபுறமிருக்க, அரசியல் குடும்பத்திடம் பெரிய தொகையை முன்பு வாங்கிய தயாரிப்பாளர், அதைத் திருப்பிக் கொடுக்கவே இல்லையாம். அரசியல்ரீதியான அழுத்தங்களுக்கும் தயாரிப்பாளர் அசைந்து கொடுக்கவில்லையாம். நடிகரின் விவகாரம் இப்போது சூடுபிடித்திருப்பதால் அரசியல் குடும்பத் தாரும் புகார், வழக்கு எனப் போகலாம் என நினைத்தார்களாம். ‘அப்படிப் போனா நமக்குத்தான் சிக்கல்’ என வழக்கறிஞர்கள் சொல்ல, பெரிய குடும்பம் சைலன்ட்டாகி விட்டதாம். #யாருக்கோ தேள் கொட்டுனா மாதிரி!

டெல்லியில் கட்சி அலுவலகத் திறப்பு நிகழ்வில் தீவிரமாக இருந்தபோதும், சென்னையில் மயங்கி விழுந்த அண்ணன் தலைவரின் நலன் குறித்து விசாரித்துக்கொண்டேயிருந்தாராம் முதன்மையானவர். வாரிசு மூலமாக ஆறுதல் சொல்லச் சொன்னாராம். அண்ணன் தலைவருடன் போனில் பேச விரும்பாமல், தனக்கு நெருக்கமான ஒரு பத்திரிகையாளரைப் பேசவைத்தாராம் வாரிசு. ‘மருத்துவமனையிலிருந்து அண்ணன் தலைவர் வீடு திரும்பினார்’ என வாரிசு தகவல் சொன்ன பிறகே விசாரிப்பை நிறுத்தினாராம் முதன்மையானவர். #அரசியலுக்குள் ஈரம்!

கிசுகிசு

டெல்லிக்குப் போன தமிழக முதல்வர், காவிக் கட்சித் தலைவர்களுடன் கைகுலுக்கியது குறித்து, கதர்க் கட்சித் தலைவிக்கு வருத்தம் இல்லையாம். ஆனால், தங்களுக்கு ஆகாதவர் எனத் தெரிந்தும் டெல்லியை ஆளும் தலைவருடன் தமிழக முதல்வர் ரொம்பவே நெருக்கம் பாராட்டியதுதான், கடும் கோபத்தைக் கிளப்பிவிட்டதாம். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மூன்றாவது அணியை அமைக்க நடக்கிற முயற்சியோ என்கிற அளவுக்குச் சந்தேகப்பட்டாராம் கதர்க் கட்சித் தலைவி. விரைவில் டெல்லி தலைவர் தமிழகத்துக்கு வர வாய்ப்பிருப்பதாகக் கசிகிற செய்திகளும் தலைவியைச் சுணக்கத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. #அப்ப நான்தான் அவுட்டா?!