Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

காவிக் கட்சியின் மாஜி காக்கி, அதிரடியான போராட்டங்களை அறிவித்து கிலி கிளப்பும் சினிமாக்கார அம்மணியைத் தூக்கிவிட்டு, அந்த இடத்துக்குத் திரைத்துறையில் சகலவிதமான தொடர்புகளையும் வைத்திருக்கும் ஒரு சினிமா புள்ளியைச் சமீபத்தில் நியமித்தார். அதற்கு நன்றி சொல்லும்விதமாக, அந்த சினிமா புள்ளி அடித்து ஒட்டிய பிரமாண்ட போஸ்டர் சென்னையையே மிரளவைத்தது. கார் பயணத்தின்போது இதைப் பார்த்த முதன்மையானவர், ‘நம்ம கட்சியிலகூட இப்படி போஸ்டர் அடிக்க ஆள் இல்லையேப்பா…’ எனச் சலித்துக்கொண்டாராம். #‘கருப்பன் குசும்பன்... கூலிங்கிளாஸ் கேக்குறான்’ மொமன்ட்!

கிசுகிசு

நடிகைக்குத் திருமணம் உறுதியானதில் இளம் தலைவருக்கு தாங்க முடியாத வருத்தமாம். ‘அந்த விஷயத்தைத்தான் தலைமுழுகிப் பல காலம் ஆச்சே…’ என நெருக்கமானவர்கள் ஆறுதல் சொன்னாலும், பழைய விஷயங்களை மறக்க முடியாமல் அவதிப்பட்டாராம். ‘அந்த ஃபேமஸ் காமெடி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியைப்போல் திருமண நாளில் திருப்பத்தை நிகழ்த்தட்டுமா?’ எனச் சில அடிவருடிகள் கேட்க, ‘அப்படியெல்லாம் செய்யக் கூடாது’ என்றவர், தன் சார்பில் அட்டகாசமான பரிசு ஒன்றை அனுப்பிவைத்து ஆறுதலடைய நினைக்கிறாராம். #ஆனந்தம் ஆனந்தம் பாடும்... மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்!

கிசுகிசு

மின் தட்டுப்பாடு குறித்து அண்ணன் தலைவர் ட்வீட் போட, அதற்கு பதிலடி கொடுக்கிறேன் என்கிற பெயரில் ‘உங்கள் சொகுசு வீட்டு மின் இணைப்பு எண் கொடுங்கள்’ என ட்வீட் போட்டார் அணில் அமைச்சர். அண்ணன் தலைவரும் பதிலுக்குப் பொளக்க, ட்விட்டர் தளத்திலேயே இருவருக்கும் விவாதம் பெரிதானது. ஒரு கட்டத்தில் அணில் அமைச்சருக்கு போன் போட்டாராம் அண்ணன் தலைவர். பலமுறை அழைத்தும் பதில் இல்லாததால், ‘தைரியம் இருந்தால் போனில் பேசவும்’ எனக் குறுந்தகவல் தட்டிவிட்டாராம் அண்ணன் தலைவர். கடைசி வரை போனை எடுக்காமல் அமைதி காத்தாராம் அணில் அமைச்சர். #லேடன்ட்ட பேசுறியா... பின்ன்ன்ன் லேடன்!

கிசுகிசு

பத்திரிகை விழா ஒன்றுக்காக சமீபத்தில் சென்னைக்கு வந்த மத்திய அமைச்சர், சர்ச்சை வீடியோவால் சங்கடத்துக்குள்ளான காவிக் கட்சியின் சீனியர் புள்ளியைச் சந்திக்க நினைத்தாராம். பல வருட நட்புக்கு மரியாதை செய்யும்விதமாக அமைச்சர் அப்படி நினைக்க, குறுக்கே விழுந்து அதற்குத் தடைபோட்டார்களாம் சில நிர்வாகிகள். ‘தேவையற்ற பரபரப்பாகிவிடும்’ என அதற்குக் காரணம் சொன்னார்களாம். ‘வீடியோ சர்ச்சையை உருவாக்கி வீழ்த்தியவர்கள், மறுபடியும் விளையாடுகிறார்களே…’ என நொந்துபோனாராம் சீனியர் புள்ளி. #யாரார்க்கு என்ன வேஷமோ இங்கே... யாரார்க்கு எந்த மேடையோ?

கிசுகிசு

ஆதீன விவகாரத்தில் அரசுத் தரப்பு அடக்கி வாசித்ததைக் கண்டித்து, வீரமான புள்ளி ஆவேச அறிக்கை வெளியிட்டார். இதைப் படித்த முதன்மையானவரின் முகம் ரொம்பவே மாறிவிட்டதாம். ‘தனிப்பட்ட வகையில் என்னிடம் பேசவேண்டியதை அறிக்கையா எழுதியிருக்காரே…’ என ஆதங்கப்பட்டாராம் முதன்மையானவர். ‘ஆன்மிக விஷயங்களில் இந்த அரசு இவ்வளவு இறங்கிப்போவதைத் தாங்க முடியாமல்தான் ஐயா அப்படியோர் அறிக்கை வெளியிட்டார்’ என விளக்கம் சொல்லி இணக்கம் ஏற்படுத்த முயற்சிகள் நடக்கின்றன. #கூட்டத்துல கட்டுச்சோத்த அவுக்கக் கூடாது பங்காளி!

கிசுகிசு

`அமைச்சர்கள், அதிகாரிகள், ஆலோசகர்கள் சொல்வதை மட்டும் கேட்டு நடக்காமல், சமூக வலைதளங்களையும் கவனியுங்கள்’ என முதன்மையானவருக்குப் பலரும் ஆலோசனை வழங்கினார்கள். இதனால், சமூக வலைதளங்களைப் பார்க்கத் தொடங்கினாராம் முதன்மையானவர். இதில்தான் சிக்கல்… வீட்டில் இருக்கும் நேரம் தொடங்கி, காரில் பயணிக்கும் நேரம் வரை சமூக வலைதளக் காணொலிகளைப் பார்ப்பதை ரொம்பவே தீவிரமாக்கிவிட்டாராம் முதன்மையானவர். சில டுபாக்கூர் யூடியூப் தளத்தின் தகவல்களைவைத்து சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்கவும் செய்கிறாராம். #மறக்காம சப்ஸ்கிரைப் பட்டனை அழுத்திட்டு... அப்படியே பெல் ஐக்கானையும் க்ளிக் பண்ணிருங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism