Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

டெல்டா மாவட்ட ஆளுங்கட்சியை, தன் விரல் நுனியில்வைத்து இயக்குகிறாராம் அன்பான அமைச்சர். ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டங்களை கவனித்த சீனியர் பெல் அமைச்சர்போல், மொத்தப் பகுதிகளையும் கட்டிக் காக்க வேண்டும் என்பதுதான் அன்பான அமைச்சரின் ஆசையாம். அதனால், உட்கட்சித் தேர்தலில் தன் ஆதரவாளர்களை வெல்லவைத்து, மொத்தக் கட்டுப்பாட்டையும் தன் கஸ்டடிக்குக் கொண்டுவரத் தீவிரமாக இருக்கிறாராம். ‘குட்டி பதினாறடி பாயும் என்பது சரியாத்தான் இருக்கு…’ என்கிறார்கள் அமைச்சரின் அப்பா காலத்து ஆட்கள். #இப்பிடியே புகழ்ந்து ஏத்திவிடுங்க..!

கிசுகிசு

தமிழ்நாட்டில் இலைக் கட்சிக்கு ஆலோசகராக இருந்த சர்ச்சைப்புள்ளி, கதர்க் கட்சியின் தேசியச் செயல் திட்டக்குழுவில் இடம்பிடித்திருப்பது பலரையும் வியக்கவைத்திருக்கிறது. சூரியக் கட்சிக்கு ஆலோசகராக இருந்தவர் கதர்க் கட்சியை நெருங்கிய சூழலில், அதைத் தவிடுபொடியாக்கிவிட்டு இவர் இடம்பிடித்ததுதான் ஆச்சர்யம். இத்தனைக்கும் அறிவிப்பு வரும் வரை அவர் குறித்த எந்தத் தகவலும் கசியாமல் பார்த்துக்கொண்டதையும் வியந்து பேசுகிறது டெல்லி வட்டாரம். பல அசைன்மென்ட்டுகளோடு களமிறங்கியிருக்கும் சர்ச்சைப்புள்ளி, கதர்க் கட்சித் தலைவியிடம் மூன்று மாத அவகாசம் கேட்டிருக்கிறாராம். #மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா?!

கிசுகிசு

பார்த்துப் படிக்கும் வழக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டார் முதன்மையானவர். சிறு சிறு குறிப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு, தந்தை பாணியில் பேச, வீட்டில் தீவிரமாகப் பயிற்சி மேற்கொள்கிறாராம். சமீபகால விழாக்களில் மைக் முன் சரளமாக முதன்மையானவர் பேசுவதன் ரகசியம் இதுதானாம். பேசவேண்டிய விஷயங்களை ரெடி செய்து கொடுப்பவர்கள், வீட்டுக்குப் போய் ஒத்திகை நிகழ்வையும் உடனிருந்து கவனிக்கிறார்களாம். #உளங்கவர் ஓவியமே... உற்சாகக் காவியமே... ஓடை நறுமலரே... ம்... ம்... போதும் போதும்!

கிசுகிசு

டெல்லியில் தங்களின் கட்சி அலுவலகத்தைத் திறக்க ரெடியாகிவருகிறது இலைக் கட்சி. இந்த விழாவில் பிரதமரோடு மத்திய அமைச்சர்கள் பலரையும் பங்கேற்கவைத்து, ஆளுங்கட்சி நடத்திய விழாவைவிட சிறப்பான விழாவாக நடத்திவிட நினைக்கிறாராம் துணிவானவர். அவரை முந்திக்கொண்டு டெல்லியிலுள்ள தன் வாரிசு மூலமாக பிரதமர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டாராம் இலைக் கட்சியின் பணிவானவர். ‘இருவரும் சேர்ந்தே வாருங்கள்’ என டெல்லி தலைமை சொல்ல, பணிவும் துணிவும் பரஸ்பர முடிவுக்கு வந்திருக்கிறார்களாம். #கை குடுங்க... சிரிங்க... கட்டிப்பிடிங்க!

கிசுகிசு

கதர்க் கட்சி இளையவரின் ஆதரவு தனக்கு இருப்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் பிரகாசமான எம்.பி. தமிழ்நாடு கதர்க் கட்சியின் தலைவர் பதவி தனக்குக் கிடைக்கும் என பிரகாசமான எம்.பி நம்பிய நிலையில், டெல்லி தலைமை அறிவித்த பாத யாத்திரைக்குழுவில் தனக்கு இடம் கிடைத்ததைப் பெரிய அங்கீகாரமாக நினைக்கிறாராம். இதே வேகத்தில் தமிழ்நாடு தலைவர் பதவியைக் கைப்பற்றவும் வியூகங்கள் நடக்கிறதாம். #ஆடி போய் ஆவணி வந்தா...

கிசுகிசு

அமைச்சரவையில் மாற்றம் நிகழப்போவதாகச் செய்திகள் கசிந்துகொண்டேயிருப்பதால், கான்ட்ராக்ட், கமிஷன் உள்ளிட்ட விஷயங்களில் ரொம்பவே அடக்கி வாசிக்கிறார்கள் அமைச்சர்கள். மீசை மற்றும் பயண அமைச்சர்களின் துறைரீதியான மாற்றம் நிச்சயமாம். நீக்கப் பட்டியலில், ஆக்டிவ்வாக இல்லாத மூன்று பேர் இருப்பதாகக் காதைக் கடிக்கிறார்கள் விஷயப்புள்ளிகள். ஆனால், சமூகரீதியான ஒதுக்கீட்டில் வேறு ஆட்களை அவர்களுக்கு மாற்றாகக் கொண்டுவர முடியாத நிலையாம். அதனால் தங்கள் தலை நிச்சயம் தப்பிவிடும் என நம்புகிறார்களாம் அந்த மூன்று அமைச்சர்களும். டெல்டாவுக்கான ஒதுக்கீட்டில், மில்க் புள்ளியின் மகனுக்கு மகுடம் கிடைக்க வாய்ப்பாம். #‘பருத்தி மூட்டைகள்’ மொமன்ட்தானே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism