Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

இலைக் கட்சியில் ஒற்றைத் தலைமை கோஷத்தைத் துணிவானவர் திடீரென எழுப்பக் காரணம், ஜனாதிபதி தேர்தல்தானாம். பெரும்பான்மை எம்.எல்.ஏ., எம்.பி-க்களைக் கைவசம் வைத்திருக்கும் தன்னையே காவிக் கட்சியின் தலைமை அனுசரிக்கும் என உறுதியாக நம்புகிறார் துணிவானவர். ‘இந்த நேரத்தில் சாதித்துக்கொண்டால்தான் உண்டு’ என்கிற கணக்கோடுதான் அதிரடியை அரங்கேற்றினாராம். இதே விஷயத்தை டெல்லி கவனத்துக்குக் கொண்டுபோயிருக்கும் பணிவானவர், ‘உங்களையே மிரட்டி காரியம் சாதிக்கப் பார்க்கிறார்’ எனப் போட்டுக் கொடுத்திருக்கிறாராம். #‘என் தலைவன் மேல கைய வெச்சுரு பாப்போம்’ மொமன்ட்!

கிசுகிசு

இவ்வளவு நெருக்கடியான நிலையிலும், பசையைக் கண்ணில் காட்ட அறவே மறுக்கிறாராம் பணிவானவர். நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி, இலைக் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் சிலர் தங்களை கவனிக்கச் சொன்னார்களாம். இது குறித்து மீடியேட்டர்கள் பேச, பணிவானவர் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லையாம். “போஸ்டர் அடிச்சதுக்கே பணம் கொடுக்கலைன்னு புலம்பிக்கிட்டு இருக்காங்க… இவரா ஆளை இழுக்க அள்ளிவிடப்போறார்?” எனப் பணிவானவரின் பக்கத்தில் இருப்பவர்களே பொருமுகிறார்கள். பணிவானவரின் வாரிசுகளும் அதே பாணியில் கஞ்சத்தனம் காட்டுவதுதான் பலரையும் கடுப்பாக்கியிருக்கிறதாம். #உழக்கரிசி அன்னதானம்... விடிய விடிய மேளதாளம்!

கிசுகிசு

இலைக் கட்சியில் பணிவானவர் பக்கம் போகாமல், சாதிய பாசத்தை உடைத்து, முக்குலத்து ஆட்களை மடைமாற்றி, துணிவானவர் பக்கம் சேர்த்தவர் குட்கா மாஜிதானாம். அந்த வேலைகளுக்கான மொத்தப் பொறுப்பையும் இரண்டு மாதங்களுக்கு முன்பே அவரிடம் ஒப்படைத்திருந்தாராம் துணிவானவர். எல்லோரையும் தன்வசமாக்கிய குட்கா மாஜியால், டெல்டா மாவட்டத்தின் ட்ரீட்மென்ட் புள்ளியை மட்டும் அசைக்க முடியவில்லையாம். அதையும் தாண்டி குட்கா மாஜி முயல, “இந்த மாதிரி தரகு வேலையெல்லாம் வேற யார்கிட்டயாவது வெச்சுக்கங்க…” என்றாராம் ட்ரீட்மென்ட் புள்ளி. #சீனி சக்கரை சித்தப்பா... ஏட்டில் எழுதி நக்கப்பா!

கிசுகிசு

இலைக் கட்சிக்குள் பெரும் போரே நடந்துகொண்டிருக்கும் நிலையில், சின்ன தலைவி அநியாயத்துக்கு அமைதி காக்கிறார். “இருவரில் ஒருவர் முட்டி மோதி வரட்டும். பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்கிறாராம் நெருக்கமானவர்களிடம். “எனக்கு அநீதி நடந்தபோது வேடிக்கை பார்த்தவர்கள் இன்றைக்கு அநீதிக்கு ஆளாகிறார்கள்” எனப் பணிவானவரை இடித்துரைக்கவும் சின்ன தலைவி தவறவில்லையாம். கட்சிக்குள் இன்றளவும் தனக்கு நெருக்கமாக இருக்கும் சில சீனியர் புள்ளிகளிடம் முழு விவரங்களையும் முன்கூட்டியே கேட்டுத் தெரிந்துகொள்கிறாராம் சின்ன தலைவி. #இத்து விழுகிற எலுமிச்சம்பழத்துக்கு... பத்து பேரு பதுங்கி வந்தாங்களாம்!

கிசுகிசு

உயரிய குடிமகன் பதவிக்கு எப்படியும் தன்னை முன்னிறுத்துவார்கள் என மிகுந்த நம்பிக்கையோடு இருந்தார் காரமான துணையானவர். தன்னைப் பரிசீலித்தால் தி.மு.க-வின் ஆதரவையும் பெற்றுத்தருவதாகக் காவிக் கட்சியின் முன்னணி ஆட்களிடமும் சொல்லியிருந்தார். ஆனாலும், அவரைப் புறந்தள்ளி வேறு ஆளை அறிவித்துவிட்டது காவிக் கட்சி. காரமான துணையானவர் தரப்பு, தமிழ்நாட்டில் சேர்த்துவைத்திருக்கும் சொத்துகளும், லாபி வேலைகளும்தான் அவருக்கு வில்லங்கமாகிவிட்டனவாம். #மைலாங்கி மைலாங்கி பூ எங்கே வெச்சே..? வாடாம வதங்காம அடுப்புல வெச்சேன்!

கிசுகிசு

சமீபத்தில் காவிக் கட்சியின் காக்கி மாஜிக்கு எதிராக, கடுமையாகக் கொந்தளித்தார் மில்க் மினிஸ்டர். “வழக்கு போட்டு உள்ளே தள்ளவும் தயங்க மாட்டோம்” என்றும் கொக்கரித்தார். இது காக்கி மாஜியை அதிரவைத்ததோ இல்லையோ… சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகளை மிடறு விழுங்கவைத்துவிட்டதாம். “துறையில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், காக்கி மாஜியை வேறு இவர் கிளப்பிவிடுறாரே…” என அமைச்சரை நோக்கி ஆதங்கப்படுகிறார்களாம் அதிகாரிகள். #வெளியில சொன்னாளாம் வெரதம்னு... கையில நாறுச்சாம் கருவாடு!