Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

பொதுக்குழு கூடுவதற்குள் அனைத்து மாவட்டங்களுக்கும் பசைப் பரிவர்த்தனையை உரிய ஆட்கள் மூலமாகப் பக்காவாக நடத்தியிருக்கிறாராம் இலைக் கட்சியின் துணிவானவர். தேர்தல் நேரத்தில் நம்பகமாக நடந்துகொண்டவர்களின் மூலமாகவே இந்தப் பரிவர்த்தனையை எவ்விதச் சிக்கலுமின்றி செய்திருக்கிறார் துணிவானவர். பணிவானவருக்குச் சட்டரீதியான உறுதுணையாக விளங்கும் ஒருவரை சைலன்டாக்கும் முயற்சிகளும் நடக்கின்றனவாம். துணிவானவரின் ‘அள்ளி இறைக்கும் வித்தை’ இந்த முறையும் வொர்க்அவுட்டாகி வருகிறதாம். #கூரையில சோத்த வீசுனா ஆயிரம் காக்கா!

கிசுகிசு

இப்போது… அப்போது என அமைச்சரவை மாற்றம் இழுத்துக்கொண்டே போவதால், தன் வாரிசைப் பதவிக்குக் கொண்டுவர எடுத்த மொத்த முயற்சிகளும் வீணாகிவிட்டனவே என நொந்துகிடக்கிறாராம் டெல்லியின் மில்க் புள்ளி. கடந்த வாரத்தில், அமைச்சரவை மாற்றம் குறித்து தனிப்பட்ட சந்திப்பில் முதன்மையானவரிடம் தைரியமாக நினைவூட்டினாராம் மில்க் புள்ளி. ‘மகாராஷ்டிரா நிலைமைகளைப் பார்த்தீர்களா… இந்த நேரத்தில் எந்த அமைச்சரையும் பகைத்துக்கொள்ள முடியாது’ என்றாராம் முதன்மையானவர். ‘மகாராஷ்டிராவுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்னங்க சம்பந்தம்?’ எனத் தலையில் அடித்துக்கொண்டு திரும்பினாராம் மில்க் புள்ளி. #‘கம்பிகட்டுற கதையெல்லாம் சொல்றாங்க’ மொமன்ட்!

கிசுகிசு

இலைக் கட்சியின் பணிவானவர் தர்ம யுத்தம் நடத்திய காலத்தில் யார் பேச்சையெல்லாம் கேட்டு நடந்தாரோ, அதே ஆட்களின் அட்வைஸ்படிதான் இப்போதும் இயங்குகிறாராம். ‘இந்த ஆட்களுக்கு இப்போது டெல்லியில் செல்வாக்கு இல்லை’ என நெருக்கமானவர்கள் சொல்ல, அதைக் கேட்க மறுக்கிறாராம் பணிவானவர். ‘சீக்கிரமே டெல்லிக்குப் போய் பிரதமரைச் சந்திப்பேன். என் ரூட் சரியானதுதான் என்று அப்போது தெரியும்’ என்கிறாராம் பணிவானவர். காவிக் கட்சிக்கு நெருக்கமான அரசியல் ஆலோசகர் சொன்ன பரிகார விஷயங்களையும் பணிவானவர் செய்யத் தொடங்கியிருக்கிறாராம். #செல்லும் வழி எங்கெங்கும் பள்ளம் வரலாம்!

கிசுகிசு

பெரும்பாலும் உட்கட்சி மோதலுக்குள் மாட்டிக்கொள்ளாமல், அனைவரையும் அனுசரித்து அரசியல் செய்பவர் கோட்டை மாவட்டத்தின் ரூல்ஸ் அமைச்சர். ஆனால் தற்போது நடக்கும் உட்கட்சித் தேர்தலில், தனது ஆதரவாளர்களைப் பதவிக்குக் கொண்டுவர சகலவிதமான உள்ளடி வேலைகளையும் அரங்கேற்றுகிறாராம். பக்கத்து மாவட்டப் பொறுப்பாளரையும் கையில் போட்டுக்கொண்டு, எல்லை தாண்டிய அக்கப்போரையும் நிகழ்த்துகிறாராம். ரூல்ஸ் அமைச்சருக்கு எதிராக, கட்சித் தலைமைக்கு வண்டி வண்டியாகப் புகார் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். #உள்ளடி இல்லாத உட்கட்சித் தேர்தலா?!

கிசுகிசு

இலைக் கட்சியின் அலுவலகத்தில் மகா சக்தியாக விளங்கும் நபர் துணிவானவர், பணிவானவர் என இரு பக்கமும் பதில் சொல்ல முடியாமல் அல்லாடுகிறாராம். பணிவானவர் அடிக்கடி கடிதம் அனுப்ப, அதை வாங்குவதா வேண்டாமா எனக் குழம்புகிறார் அந்த ‘மகா’ புள்ளி. இரு கடிதங்களை வாங்கியதற்காகத் துணிவானவர் அவரைத் துளைத்தெடுத்துவிட்டாராம். ‘நாளைக்கு அவங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்துடுவாங்க. என்னைய மாதிரி ஆட்களுக்குத்தான் திண்டாட்டம்’ என நொந்து புலம்புகிறார் மகா புள்ளி. பொதுக்குழு கூடும் வரை பணிவானவர் தரப்பிலிருந்து போன் வந்தால்கூட எடுக்கக் கூடாது எனக் கறார் காட்டப்பட்டிருக்கிறதாம். #இந்த நிலைமை எதிரிக்கும் வரக் கூடாது கோப்பால்!