Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

மணல் மாஃபியாவாக மறுபடியும் காலெடுத்துவைத்திருக்கும் புதுக்கோட்டை புள்ளி, தன் சொந்த ஊரிலுள்ள அரசுப் பள்ளிக்கு லட்சக்கணக்கில் நன்கொடைகளை அள்ளிக்கொடுத்து ஸ்மார்ட் ஸ்கூலாக மாற்றினாராம். அதன் திறப்புவிழாவையும் பிரமாண்டமாக நடத்துவதற்குத் திட்டமிட்டாராம். ஆனால் அதற்குள் முந்திக்கொண்ட அதிகாரிகள், பெயரளவில் திறப்புவிழாவை நடத்தினார்களாம். மணல் புள்ளியின் மகுடிக்கு மயங்க வேண்டாம் எனக் கற்பிக்கும் துறையின் அமைச்சர் போட்ட கறார் உத்தரவுதான் அதிகாரிகளைத் தடாலடியாகச் செயல்படவைத்ததாம். இத்தனைக்கும் சீனியர் அமைச்சரின் செல்லப்பிள்ளையாக வலம்வருபவர் அந்த மணல் புள்ளி. #ஸ்மார்ட் அரசியல்!

கிசுகிசு

சமீபத்தில் நடந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றத்தில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை இழுத்தடித்த நவரச நடிகரின் பெயர்கொண்ட அதிகாரியும் ஒருவர். டெண்டர் தொடங்கி சைக்கிள்கள் பள்ளிக்கு அனுப்பப்படுவது வரை திட்டமிட்டு தாமதம் செய்த அந்த அதிகாரி, அதற்குக் காரணம் ‘உச்ச அதிகாரி’ எனச் சொன்னாராம். ஆனால், சைக்கிள் திட்டத்தின் தாமதத்தை விசாரித்து அதிகாரிகளை வறுத்தெடுத்து ஸ்பீடு பண்ணியதே உச்ச அதிகாரிதானாம். நவரச அதிகாரியின் சித்து விளையாட்டு அம்பலமான நிலையில்தான் அதிரடியாக அவரைத் தூக்கியடித்தார்களாம். அதிகாரிகளுக்குள் நடக்கும் பனிப்போரில், ஓர் அணிக்கு மிக உகந்தவராகச் செயல்படுவதும் நவரச அதிகாரியின் மீதான முக்கியக் குற்றச்சாட்டு. #சைக்கிள் கேப்புல சாரட் வண்டியே ஓட்டுறாரே?!

கிசுகிசு

சின்ன தலைவியோடு கைகோத்து, சமுதாய ஒருங்கிணைப்பை உருவாக்கினால் மட்டுமே அரசியலில் தாக்குப்பிடிக்க முடியும் என நினைக்கிறாராம் இலைக் கட்சியின் பணிவானவர். தன் மனக்கிடக்கையை உடன்பிறந்த மன்னர் தம்பியிடமே சொல்லி, சின்ன தலைவி கவனத்துக்குக் கொண்டுசேர்க்கச் சொன்னாராம். தகவல் போய் ஒரு வாரம் ஆகியும் எந்த பதிலும் வரவில்லையாம். பணிவானவர், சின்ன தலைவியைத் தனி ரூட்டில் சந்திக்க முயன்ற விவகாரம் இனிஷியல் புள்ளிக்குத் தெரியவர, அவர் போட்ட முட்டுக்கட்டைதான் சங்கமத்தைத் தள்ளிப்போட்டிருக்கிறதாம். எதுவாக இருந்தாலும் தன் ரூட்டிலேயே நடக்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறாராம் இனிஷியல் புள்ளி. “டெல்லியை நான் சரி பண்ணிவிட்டேன். எம்.பி தேர்தலில் நான்கு சீட் தருவதாகச் சொல்லிவிட்டார்கள். நீங்களே சங்கமித்தாலும் நான் தனியாக நின்று நான்கு இடங்களில் போட்டியிடுவேன்” என அள்ளிவிட்டு சின்ன தலைவியை அமைதியாக்கி வைத்திருக்கிறாராம் அவர். #எங்கிட்டுப் போனாலும் முட்டுச்சந்தா இருக்கே?!

கிசுகிசு

இலைக் கட்சியின் மைக் விரும்பி மாஜிக்கு எதிராகப் பேசும் வகையில், அச்சில் ஏற்ற முடியாத ஆபாசக் கருத்துகளை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்தார் மில்க் மினிஸ்டர். “ஓர் அமைச்சர் இப்படிப் பேசலாமா?” என ஆன்லைன் முழுக்க அந்த வீடியோ வைரல் ஆனது. விஷயம் முதன்மையானவர் கவனத்துக்குப் போக, மில்க் மினிஸ்டருக்கு செம டோஸ் விழுந்ததாம். “இந்த வயசுல இப்படிப் பேசலாமா?” என இல்லத் தரப்பிலிருந்தும் எதிர்ப்பு எகிறியதாம். இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கத் தயாராகும் மைக் விரும்பி மாஜி, மில்க் மினிஸ்டரின் பழைய ‘ஏற்பாடு’ வேலைகள் குறித்து விசாரித்துவருகிறாராம். # ‘நான் அவனைக் கேவலமா பேசுவேன்... அவன் என்னை ரொம்பக் கேவலமா பேசுவான்’ மொமன்ட்!

கிசுகிசு

நீர்நிலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியின் தாய் வீடுகளை நீதிமன்ற உத்தரவுப்படி இடிக்க முடிவானது. ஆனாலும், பவர்ஃபுல் இடத்தில் இருக்கும் அதிகாரியைப் பகைத்துக்கொள்வதுபோல் ஆகிவிடுமே என அஞ்சியிருக்கிறார்கள். ஆக்கிரமிப்பு விஷயம் குறித்து முதன்மையானவர் கவனத்துக்குத் தகவல் சொல்லப்பட்டதாம். ‘தவறு இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுங்கள்’ எனக் கறாராகச் சொல்லிவிட்டாராம். விவகாரம் தீவிரமாகிவிட்டது தெரிந்து, வீடுகள் இடிபடுவதைத் தடுக்க பவர்ஃபுல் அதிகாரி எந்த முயற்சியும் எடுக்காமல் அமைதிகாத்தாராம். “அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்...” எனத் தன் இல்லத்து ஆட்களையும் கேட்டுக்கொண்டாராம். #அபூர்வமா இருக்கே!