Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

சின்ன தலைவிக்கு நிழலாக இருக்கும் விவேகமான வாரிசு, பிரகாச சேனலை மிஞ்சி இசைத்துறையின் ஜாம்பவானைத் தங்கள் சேனல் பக்கம் இழுத்து வந்தார். நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் பார்த்து வியந்துபோன சின்ன தலைவி, விவேகமான வாரிசுக்குக் கூடுதல் பொறுப்புகளைக் கொடுக்கப்போகிறாராம். தொலைக்காட்சியில் பிரமாண்ட நிகழ்ச்சிகளை நடத்துவது தொடங்கி படங்களைத் தயாரிப்பது வரையிலான பணிகளை விவேகமான வாரிசு விரைவில் தொடங்கவிருக்கிறாராம். #வாரிசுகள்னாலே பிரமாண்டம்தானே... நடக்கட்டும்!

கிசுகிசு

சட்டரீதியான சாதகத்தைப் பெற்ற பிறகும், தன் பக்கம் ஆட்கள் பெரிதாகத் திரளாதது இலைக் கட்சியின் பணிவானவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறதாம். ‘பசையைக் கண்ணில் காட்டினால்தான் தலைவா நம்ம பக்கம் கூட்டம் வரும்’ எனக் கூட இருப்பவர்கள் வெளிப்படை யாகப் போட்டு உடைக்க, பட்டுவாடா பணிகளுக்காகவே ஒருவரைத் தனியாக நியமித்துவிட்டாராம் பணிவானவர். அடுத்தடுத்து மாஜிக்கள் இருவரைத் தங்கள் பக்கம் இழுத்து துணிவானவருக்கு கிலி கொடுக்க ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கின்றனவாம். இதற்கிடையில் தன் ஆதரவாளர்களைக் கைக்குள் வைத்துக்கொள்ள, மூன்றாவது முறையாகப் பட்டுவாடா நடத்திக்கொண்டிருக்கிறார் துணிவானவர். டெல்லியைச் சரிக்கட்ட மீடியேட்டர்களுக்கு மலைக்கவைக்கும் பெரும் பசையைக் கொடுத்திருக்கிறாராம் துணிவானவர். ‘அவர் மழையா பொழியுறார்… அண்ணன் இப்பதான் அவுக்கவே ஆரம்பிச்சுருக்கார்’ என நக்கலடிக்கிறார்கள் பணிவானவரின் பக்கம் இருப்பவர்கள். #காசேதான் கடவுளப்பா... அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமப்பா!

கிசுகிசு

ஆம்னி பேருந்துகள் இஷ்டத்துக்கு டிக்கெட் விலையை உயர்த்தி லாபம் பார்ப்பது குறித்து ஆளும் தரப்புக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. உரிய துறையின் அமைச்சரும், ‘நடவடிக்கை நிச்சயம்’ என உறுதி கூறுகிறார். ஆனாலும், ஆம்னி பஸ் நிறுவனங்கள் தாங்கள் வைத்ததுதான் விலை என்பதில் தீர்க்கமாக இருக்கின்றன. ஆளும் தரப்பின் இல்லத்து ஆட்களைச் சரிக்கட்டி வைத்திருப்பதாக இதற்குச் சொல்லப்படும் காரணம்தான் உரிய துறையின் அமைச்சரை ஆக்‌ஷன் எடுக்கவிடாமல் தடுக்கிறதாம். ‘இல்லத்து ஆட்கள் பெயரைச் சொல்லி இன்னும் என்னவெல்லாம் பண்றாங்களோ…’ எனக் குமுறுகிறார்கள் அமைச்சருக்கு நெருக்கமானவர்கள். #புது ரூட்டால்ல இருக்கு?!

கிசுகிசு

குட்கா விவகாரத்தில் எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், ஆளும் தரப்பு பக்கம் மீண்டும் நூல்விடத் தொடங்கியிருக்கிறார் கோட்டை மாவட்டத்து மாஜி. இலைக் கட்சியில் நடக்கும் மோதலைச் சகிக்காமல் கட்சி மாறுவதாக அதற்குக் காரணமும் சொல்லலாம் என வியூகம் வகுத்து, ஆளும் தரப்பை அணுகினாராம். பசை விவகாரங்களை, தான் பார்த்துக்கொள்வதாகவும் சொன்னாராம். ஆனாலும், மாஜிக்கு கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை. ஆளும் தரப்பில் ஐக்கியமாகி, அமைச்சராகவும் வலம்வரும் அணில் புள்ளியைப் பகை மறந்து அணுகி அடுத்தகட்ட முயற்சிகளைத் தொடரவிருக்கிறாராம் அந்த மாஜி. #பசை மிக நட்பது நட்பு!

கிசுகிசு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலேயே ஆளும் தரப்பையும், கதர்க் கட்சியையும் பிரிக்க வியூகங்கள் தொடங்கிவிட்டனவாம். யார் வாயையாவது கிளறி, ஆளும் அரசுக்கு எதிராகப் பேசவைக்க முயற்சிகள் நடக்கின்றனவாம். தமிழகத்தில் துணிவானவருக்கு அட்வைஸராக இருந்தவர்தான், இப்போது கதர்க் கட்சியின் அட்வைஸராக டெல்லியில் இருக்கிறார். டெல்லி மீடியேட்டர்களின் பிரிப்பு வேலையை, கதர்க் கட்சியின் வாரிசுக்குச் சொல்லி உஷார்படுத்தியிருக்கிறார் அந்த அட்வைஸர். தமிழகத்தின் முதன்மையானவருக்கு போன் போட்டு கதர்க் கட்சியின் வாரிசும் இந்த விஷயத்தைப் பகிர்ந்துகொண்டாராம். விளைவு, இரு கட்சிகளின் நிர்வாகிகளுக்கும் வாய்ப்பூட்டு எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறதாம். #வாயை மூடிப் பேசவும்!