Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியம் : சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியம் : சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

இலைக் கட்சியில் பணிவானவர் பக்கம் இருக்கும் திருச்சியைச் சேர்ந்த சீனியர் புள்ளியைத் தங்கள் பக்கம் இழுக்க நினைக்கிறது காவிக் கட்சி. சாதிரீதியான செல்வாக்கை திருச்சி தொடங்கி டெல்டா மாவட்டங்கள் வரை வைத்திருக்கும் அந்த சீனியரை வளைத்துப் போட்டால், நிச்சயம் நாடாளுமன்றத் தேர்தலில் குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகளை அள்ள முடியும் எனக் காவிக் கட்சித் தலைவருக்கு யாரோ ஐடியா கொடுத்தார்களாம். அதற்குக் காவிக் கட்சித் தலைவர் சொன்ன பதில்தான் ஹைலைட். “அவர் என்ன… அவர் அங்கம் வகிக்கும் மொத்த அணியே நம்ம கட்சிக்குத்தானே வரப்போகுது” என்றாராம். பணிவானவரையும் அவர் பக்கம் இருக்கும் மற்றவர்களையும் மொத்தமாகக் கட்சிக்குக் கொண்டுவர பக்காவாகக் காய்நகர்த்திவருகிறாராம் காவிக் கட்சியின் தலைவர். ‘நாம வாலைக் குறிவெச்சா அவர் உடம்பையே குறிவெக்கிறாரே…’ என்கிறார்கள் காவிக் கட்சியின் இளந்தலைகள். #ஆடு இலையை மேய்ந்த கதை!

தேர்தலில் கவனம் பெறுகிற அளவுக்கு வெற்றி பெறாவிட்டாலும், படரீதியான வெற்றி நடுநிலைக் கட்சி நிர்வாகிகளைத் துள்ளவைத்தது. ஆனாலும், கட்சியின் நிர்வாகிகளைச் சந்திக்கவோ, கலந்து பேசவோ நடுநிலைத் தலைவர் நேரம் ஒதுக்குவதே இல்லையாம். போனில் யாருடனும் பேசுவது கிடையாதாம். நேரிலும், போனிலும் அணுக முடியாத அவஸ்தைகளைச் சொல்ல நினைத்த நேரத்தில், நடுநிலைத் தலைவர் வெளிநாட்டுக்குப் பறந்துவிட்டார். அதனால், கட்சி குறித்த மொத்த ஆதங்கத்தையும் இமெயிலில் தட்டிவிட்டு, பதிலுக்காகத் தவம் கிடக்கிறார்கள் முக்கிய நிர்வாகிகள். #ஒ... பாட்டாவே பாடிட்டீங்களா?!

கிசுகிசு

திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்துக்கு, வரும் 11-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தற்போதைய தலைவராக இருக்கும் பாக்யராஜை சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் அனைவரும் வானளாவப் புகழ்ந்து தள்ளினார்களாம். அதனால், போட்டியின்றி அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருப்பதாகப் பேசப்பட்டது. ஆனால், இப்போது திடீரென எஸ்.ஏ.சந்திரசேகர் போட்டிக்கு குதிக்க, பாக்யராஜ் தரப்பு விக்கித்து நிற்கிறது. பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு பாக்யராஜுக்கு இருந்தாலும், ஆளும் தரப்பின் ஆதரவு யாருக்கு அமையும் என்பது கணிக்க முடியாததாக இருக்கிறது. ஆளும் தரப்பின் வாரிசு ரூட்டில் ஆதரவு பெறவும் வேலைகள் நடக்கின்றன. கதைத் திருட்டு விவகாரத்தில் நியாயத்தின் பக்கம் பாக்யராஜ் உறுதியாக நின்றதால், அவரால் பாதிக்கப்பட்ட முன்னணி இயக்குநர்கள் ஆளும் தரப்பு ஆதரவுடன் அவரை வீழ்த்த ரெடியாவதாகச் சொல்கிறார்கள். #வேட்டிய மடிச்சுக்கட்டு..!

‘சின்ன தலைவியை நேரில் சந்திப்பேன்’ எனப் பணிவானவர் கொடுத்த பேட்டி, துணிவானவரை ரொம்பவே யோசிக்கவைத்திருக்கிறது. சின்ன தலைவியைப் பணிவானவர் சந்தித்தால், அது சமுதாயரீதியான பெரிய ஒருங்கிணைப்பை உருவாக்கிவிட வாய்ப்பிருப்பதாக நினைக்கிறாராம் துணிவானவர். அத்தகைய சந்திப்பு அமைந்துவிடாமல் தடுக்கத்தான், தென் மண்டல மாஜியைத் தூண்டிவிட்டு சின்ன தலைவி குறித்து புகழ்ந்து பேசச் சொன்னாராம். ‘மகாராணி மாதிரி இருந்த சின்ன தலைவியைச் சிறைக்கு அனுப்பியதே பணிவானவர்தான்’ என்று தென் மண்டல மாஜி பாய்ந்த பின்னணி இதுதானாம். அனைத்து ராஜ தந்திரங்களையும் கரைத்துக் குடித்தவராகத் துணிவானவர் நாளுக்கு நாள் அரங்கேற்றும் நடவடிக்கைகள், இலைக் கட்சி நிர்வாகிகளைத் திகைக்கவைக்கின்றனவாம். #‘ராக்கி பாய்’ மொமன்ட்!

ஆளும் வாரிசுக்கான பரிவட்ட ஏற்பாடுகள் தள்ளிக்கொண்டேபோகின்றன. ஆனாலும், வாரிசு அதை நினைத்துத் துளியும் கவலைப்படவில்லை. இல்லத்து அம்மணிக்குத்தான் அவ்வளவு ஆதங்கமாம். ‘இப்போதே பொறுப்பு கொடுத்து அடுத்தகட்டத்துக்குத் தயார் பண்ண வேண்டும். யாரோ சொல்லும் கருத்துக்காக ஏன் நாம் தயங்க வேண்டும்?’ என இல்லத்துக்குள்ளேயே போர்க்குரல் கிளம்புகிறது. ஆனாலும், முதன்மையானவர் அசையவில்லையாம். ‘சரியான நேரம் வரட்டும்… நான் சொல்றேன்’ என்பதுதான் அவருடைய பதிலாக இருக்கிறதாம். #ஆடி போய் ஆவணி வந்தா... வந்தா..? புரட்டாசி வரும்!