Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

‘மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தினால்தான் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியும்’ என முதன்மையானவரிடம் சொன்னாராம் அணில் அமைச்சர். தாம் தூம் என முதன்மையானவர் கோபப்பட, ‘மாற்று வழிகளை யோசிக்கிறேன் சார்…’ என்றபடி திரும்பினாராம் அணில். கட்சிரீதியான குற்றச்சாட்டுகளை மடைமாற்றவே கரன்ட் விவகாரத்தைக் கையிலெடுத்து, முதன்மையானவரை மூடு மாற்றினாராம். கொங்கு மண்டலத்தைத் தன் பிடிக்குள் கொண்டுவர எல்லா ஏற்பாடுகளையும் செய்யும் அணிலார் குறித்து, அறிவாலயத்துக்கு மலை மலையாகப் புகார்கள் குவிகின்றனவாம். பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், நியாயமான குற்றச்சாட்டுகளும் ஏராளம் என்கிறார்கள். முதன்மையானவர் கவனம் வரை அவை போன நிலையில், மின் கட்டண விவகாரத்தை வலிய சொல்லி வாங்கிக் கட்டிக்கொண்டாராம் அணிலார். “கட்சி விவகாரத்துக்காகத் திட்டு வாங்கலை… கரன்ட் விஷயத்துக் காகத்தான் திட்டு வாங்கினேன்” என நட்பு வட்டாரத்தில் பீற்றிக்கொள்ளவும் அணில் அமைச்சர் தவறவில்லையாம். #இதெல்லாம் ஒரு பெருமையா?!

கிசுகிசு

இலைக் கட்சியின் பணிவானவர் இன்னமும் சாக்கை அவிழ்க்காமல், சாக்குப்போக்குச் சொல்லியே நாள்களை நகர்த்துகிறாராம். அவர் பக்கம் தாவிய எம்.எல்.ஏ-வுக்கும்கூட வாயிலேயே வடை சுட்டவர், வந்துபோனதற்கான பசையைக்கூடக் கண்ணில் காட்டவில்லையாம். சின்ன தலைவி அடுத்து ஏதாவது கரிசனம் காட்டுவார், அதை வைத்து நிலைமையைச் சமாளிக்கலாம் என நினைக்கிறாராம் பணிவு. ஆனால், அவர்களோ காளை மாட்டில் பால் கறக்கிற ஆட்கள். அதனால், அங்கிருந்தும் வார்த்தைகள் மட்டும்தான் வருகின்றனவாம். இப்படியான பசை ஆதங்கத்தில் இருக்கும் பலரில், மலைக்கோட்டை மாஜியும் ஒருவர். அவரை முதல் ஆளாகத் தங்கள் பக்கம் இழுக்க வியூகம் வகுத்துவருகிறது துணிவுத் தரப்பு. #கையில காசு... வாயில தோசை!

கிசுகிசு

திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ளாமல், கேரளா பக்கம் போய்விட்டார் முதன்மையானவர். இதனாலேயே விழாவில் பங்கேற்காமல் பல முன்னணி நட்சத்திரங்களும் எஸ்கேப் ஆகிவிட்டார்கள். ஆகையால், விழா அவ்வளவு சிறப்பாக நடைபெறவில்லை. முதன்மையானவர் கவனத்துக்கு இந்த விஷயம் பகிரப்பட, அவரும் பெரிதாக ரியாக்ட் செய்யவில்லையாம். தேர்வுப் பட்டியலில் இருந்த பலருடைய பெயர்களில் முதன்மை யானவருக்கு உடன்பாடு இல்லையாம். இலைக் கட்சி ஆட்சியில் இருந்தபோது தேர்வான ஆட்களுக்கு விருது கொடுப்பதில் முதன்மையானவருக்கும் விருப்பம் இல்லையாம். அதனால்தான் திட்டமிட்டு சொதப்பப்பட்டதாம் அந்த விழா. #வேண்டா வெறுப்பா பிள்ளை பெத்து, காண்டாமிருகம்னு பேரு வெச்சாங்களாம்!

கிசுகிசு

நாடாளுமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணியைத் தாங்கள் கட்டமைப்பதாகவும், அதில் பழக்கட்சி இடம்பெற வேண்டும் எனவும் தோட்டத்து தலைவருக்குத் தகவல் அனுப்பினாராம் மாஜி காக்கி. இது சரிப்படாது எனத் தெரிந்தும் மாஜி காக்கியிடம் மறுப்பைக் காட்டிக்கொள்ளாமல், ‘நல்லபடி அமையுங்கள். நாங்கள் ரெடி’ எனச் சொன்னாராம் தோட்டத்து தலைவர். ஆளும் கூட்டணியை நோக்கி இடம்பெயர நாள் நட்சத்திரம் பார்த்துவரும் தோட்டத்து தலைவர், வலியப் போனால் சீட் குறைந்துவிடுமே என்றுதான் யோசிக்கிறாராம். சீட் டிமாண்டை ஏற்றிக்கொள்ளவே காவிக் கட்சியின் அழைப்பையும் ஒரு பகடையாக உருட்டுகிறாராம். #‘அவனவன் எடுக்குற முடிவு நமக்குச் சாதகமாத்தான் இருக்கு’ மொமன்ட்!

கிசுகிசு

இலைக் கட்சியில் பணிவானவர், துணிவானவர் என இரு பக்கமும் போகாமல், மௌனம் காக்கிறார் டெல்டா மாவட்டத்து பெல் மாஜி. தங்களுக்கு ஆதரவாகப் பேசும்படி துணிவுத் தரப்பு வேண்டிக்கொள்ள, அதற்கு பெல் மாஜி பதிலே சொல்லவில்லையாம். அதேநேரம் பணிவுத் தரப்பிலிருந்து வரும் அழைப்புகளையும் எடுப்பது கிடையாதாம். ‘யார் பக்கம்தான் இவர்?’ என விசாரணை நடக்க, சின்ன தலைவியிடம் அடிக்கடி போனில் பேசுகிற அளவுக்கு மாஜி வேறு ரூட்டில் செல்வது இப்போதுதான் தெரியவந்ததாம். ஆளை அமுக்க அடுத்தகட்ட வியூகங்களை வகுக்கத் தொடங்கியிருக்கிறது துணிவுத் தரப்பு. #Money ஒசை கேட்டு எழுந்து... நெஞ்சில் ஆசை கோடி சுமந்து!