அரசியல்
அலசல்
Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

இந்தி எதிர்ப்பு விவகாரத்தில் டெல்லியை ரொம்பவே சீண்டுவதுபோல் ஆக்ட் காட்டிக்கொண்டிருக்கும் தமிழகத்தின் சில எம்.பி-க்கள், காவிக் கட்சி ஆட்களை அணுகி, வேண்டிய விஷயங்களைச் சாதித்துக்கொண்டிருப்பவர்கள்தானாம். தமிழகத் தலைமைக்குத் தெரியாமல் டெல்லியில் காவிக் கட்சி ஆட்களைச் சந்தித்துப் பேசுகிற அளவுக்கு இணக்கம் பாராட்டுகிற இவர்கள், தமிழகத்தில் அவர்களைக் கண்டித்து காரசாரம் காட்டுவதுதான் பலரையும் திகைக்க வைத்திருக்கிறது. காவிக் கட்சி ஆட்களோடு நெருக்கம் காட்டும் எம்.பி-க்கள் குறித்து மில்க் புள்ளி மூலமாக விசாரணை தொடங்கியிருக்கிறது. #உலக நடிப்புடா சாமி!

கிசுகிசு

தேவர் ஜயந்தி விழாவுக்கு பிரதமர் தமிழகம் வர விரும்பியதாகவும், பாதுகாப்பு காரணங்களைச் சொல்லி தமிழக அரசு அதைத் தவிர்க்கச் சொன்னதாகவும் பரபரப்பு கிளம்பியது. இரு தரப்பும் நடந்தது குறித்து விளக்காத நிலையில், இந்த விவகாரத்தில் அனுமானச் செய்திகள் மட்டுமே அலையடிக்கின்றன. இதற்கிடையில் ‘பிரதமர், தேவர் ஜயந்திக்கு வரவில்லை’ என்கிற செய்தியைக் கசியவிட்டு, காவிக் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை முக்குலத்து மக்கள் மத்தியில் ஏற்படுத்தியதாக, தமிழக உளவுத்துறைமீது உக்கிரத்தில் இருக்கிறது டெல்லி. ‘இந்த விவகாரத்தில் நாங்கள் எதுவும் செய்யவில்லை’ என்று தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறதாம் தமிழக உளவுத்துறை. #அதெல்லாம் சரி... அவரு வர்றாரா... இல்லையா?

கிசுகிசு

கதர்க் கட்சியின் தமிழகத் தலைவர் பதவி மாறப்போவதாக, வருடக் கணக்கில் வதந்தி பரவிக்கொண்டேயிருக்கிறது. உண்மையில், தற்போதைய தலைவரை மாற்றுகிற எண்ணமே டெல்லியின் வாரிசுக்கு இல்லையாம். ஆளும் தரப்பை அனுசரிப்பதிலும், முக்கியச் செய்திகளை கவனத்துக்குக் கொண்டுவருவதிலும் தற்போதைய தலைவரின் அணுகுமுறை வாரிசுக்கு திருப்தியைக் கொடுக்கிறதாம். ஆனாலும், வசூல் மோசடிகளைப் புகாராக்கி, ‘இதற்கெல்லாம் முடிவுகட்டும்விதமாகப் புது ரத்தமாய் இளம் ஆட்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்’ என வாரிசுக்குக் கோரிக்கைகள் பறந்தவண்ணம்தான் இருக்கின்றன. #அப்ப டக்ளஸ் ஓனர் இல்லையா?

கிசுகிசு

நாட்டின் உச்சப் பதவியிலிருக்கும் பெண்மணி சீக்கிரமே தமிழகத்துக்கு வரப்போகிறாராம். தென் மாவட்டத்தின் பெண் தெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபட அவருக்கு வேண்டுதல் இருக்கிறதாம். அதனால், இப்போதே பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்துகிறார்கள். ‘முதன்மையானவரைச் சந்திக்கிற ஐடியா இருக்கிறதா?’ என்று தமிழகத் தரப்பில் கேட்கப்பட, ‘கோயில் விசிட் மட்டும்தான்’ என பதில் வந்திருக்கிறதாம். #என்னங்க பொசுக்குனு இப்பிடிச் சொல்லிட்டீங்க?!

கிசுகிசு

இலைக் கட்சியில் ‘சாமி’யானவர் தன் இருப்பைக் காட்ட, ஏதோவொரு வகையில் தன்னைப் பற்றிச் செய்திகள் வரும்படி பார்த்துக்கொண்டேயிருக்கிறார். துணிவானவரின் செயல்பாடு அதிருப்தி அளிப்பதாகச் செய்தியைக் கசியவிடும் ‘சாமி’ புள்ளி, ‘பணிவானவர் பக்கம் போக மாட்டேன்’ என விளக்கம் கொடுக்கிறார். அவரைப் பற்றிய பரபரப்பு கிளம்புகிறபோதெல்லாம் அமைதிப்படுத்தச் சொல்லி ஸ்வீட் பாக்ஸுகளோடு ஆட்களை அனுப்புகிறாராம் துணிவானவர். ‘சாமி’ புள்ளியின் கைங்கர்யத்தைச் சொல்லிச் சொல்லிச் சிரிக்கிறார்கள் இலைக் கட்சி நிர்வாகிகள். #கருப்பன் குசும்பன்... கூலிங் கிளாஸுக்கு அடிபோடுறான்!