
ஓவியம்: சுதிர்
இன்னும் ஒரு படத்தை முடித்துவிட்டு, தீவிர அரசியலில் இறங்க முடிவெடுத்திருக்கிறாராம் மெர்சலான நடிகர். சம்பள விஷயத்தில் அநியாய கறார் காட்டுகிற பின்னணியும் இதுதானாம். அடுத்த படத்துக்கு 150 சி கேட்கும் நடிகர், நாடாளுமன்றத் தேர்தலை மனதில்வைத்து தொகுதிவாரியாக இப்போதே பசைப் பரிவர்த்தனைகளைச் செய்ய நினைக்கிறாராம். ஆட்களையும் இப்போதே தேர்வுசெய்து, நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும் வியூகங்களில் இருக்கிறதாம் நடிகர் தரப்பு. # ‘ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா..!’
டெல்டா மாவட்டத்தின் சக்தி வாய்ந்த குக்கர் கட்சிப் புள்ளியை, அசால்ட்டாக இலைக் கட்சிப் பக்கம் கொண்டுவந்துவிட்டார் பெருந்தலைவர் பெயர்கொண்ட மாஜி. அடுத்தடுத்த தேர்தல்களால் கோடிக்கணக்கில் நஷ்டத்தில் இருந்த குக்கர் கட்சிப் புள்ளி, டெல்டா மாவட்ட ட்ரீட்மென்ட் புள்ளிக்கு எதிராகக் களம் கண்டவர். ‘உங்க மொத்தக் கடனையும் நான் ஏற்கிறேன்’ என மாஜி சொல்ல, ‘கடனை நான் பார்த்துக்கிறேன். மாவட்டப் பொறுப்புக்கு ஏற்பாடு பண்ணுங்க’ என்றாராம் குக்கர் புள்ளி. ‘ட்ரீட்மென்ட் புள்ளிக்கு எதிராகச் சரியான ஆள்’ எனச் சொல்லி அதற்கும் ஓகே சொல்லி அழைத்தாராம் துணிவானவர். விரைவில் அவருக்குப் பதவி என்கிறார்கள். # தீயா வேலை செய்யணும் குமாரு!

‘அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரலாமா?’ என்கிற ஆலோசனை இல்லத் தரப்பில் தீவிரமாக நடக்கிறது. எந்த அமைச்சரையும் நீக்காமல், துறைரீதியான மாற்றங்களை மட்டும் செய்யலாம் என முதற்கட்டமாக யோசிக்கப்பட்டிருக்கிறதாம். நெருக்கடியான நேரத்தில், `மாற்றம்’ என்கிற பெயரில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என இல்லத்துக்கு நெருக்கமான சீனியர்கள் ஆலோசனை சொல்லியிருக்கிறார்களாம். ‘நல்லவேளை தப்பித்தோம்’ என்கிற கணக்கில் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள் பரபரப்புப் பட்டியலில் இருந்த அமைச்சர்கள் சிலர். #தலைக்கு வந்தது ஹெல்மெட்டோட போச்சு!
மலர்க் கட்சியின் காக்கி மாஜிக்கும், இலைக் கட்சியின் துணிவானவருக்கும் இடையே நடக்கும் மோதல், ‘திட்டமிட்ட நாடகம்’ என்கிறார்கள். சீண்டிச் சீண்டியே காக்கி மாஜியைப் பெரிய ஆளாக்க இப்படியொரு வியூகம் வகுக்கப்படுகிறதாம். சமுதாயரீதியான ஆட்கள், ‘நமக்குள் இப்படி மோதிக்கொள்ளலாமா?’ எனச் சமாதானத்துக்கு இறங்கியபோதுதான் இந்த உள்ளடி நாடகம் அம்பலமானதாம். ‘வெளியே விமர்சனம்… உள்ளே பேரன்பு’ என நடக்கும் நாடகத்தைக் கண்டு ஆடிப்போனார்களாம் சமுதாயரீதியான ஆட்கள். #அப்போ அத்தனையும் நடிப்பா கோப்பால்?!
குரல் சர்ச்சையில் அடிபட்ட அமைச்சர், அது குறித்து கொடுத்த விளக்கம் பெரிதாக எடுபடவில்லை. குரல் சர்ச்சை வெடிக்கப்போகும் விஷயம் தெரிந்தும், உளவுத்துறை அதைத் தடுக்க நினைக்காமல் கோட்டைவிட்டதும் முதன்மையானவரைக் கடுப்பாக்கியிருக்கிறது. இதற்கிடையில், ‘வெளியானது ட்ரெய்லர்தான்… இனிதான் படமே இருக்கு’ என்கிறரீதியில் சர்ச்சை குரூப் கிளப்பிவிடும் தகவல், கோட்டையையே ஆட்டிப்படைக்கிறது. ஆனால் உளவுத் தரப்பில், ‘இது வெற்று மிரட்டல்’ என முதன்மையானவருக்கு `நோட்’ வைத்திருக்கிறார்களாம். #வேட்டு வெச்சதுக்கப்புறம் நோட்டு வெச்சு இன்னா பண்றது?