அரசியல்
Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- ஓவியங்கள்: சுதிர்

சங்கத் தேர்தலில் வெற்றிபெற்ற சினிமாப் புள்ளிகள், முதன்மையானவரை நேரில் சந்தித்தார்கள். 2015-ம் ஆண்டிலிருந்து இந்த வருடம் வரைக்குமான தமிழக அரசின் சினிமா விருதுகள் வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டிருப்பது குறித்து முதன்மையானவரிடம் சொல்வதுதான் சங்கத்தினரின் முக்கியக் கோரிக்கையாக இருந்ததாம். ஆனால், ‘முதன்முறையாக முதல்வரைச் சந்திக்கையில் வாழ்த்து மட்டும் பெறுங்கள். அடுத்த சந்திப்பில் கோரிக்கை வைக்கலாம்’ என அலுவலக ஆட்கள் அறிவுறுத்தினார்களாம். அதனால், சினிமா விருதுகள் உள்ளிட்ட எந்தக் கோரிக்கையையும் வைக்காமல் சம்பிரதாயச் சந்திப்பாக மட்டும் கும்பிட்டுவிட்டு வந்தார்களாம் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிர்வாகிகள். #‘கோரிக்கை வைக்கக் கூடாதுங்றதுதான் எங்க கோரிக்கை!

கிசுகிசு
கிசுகிசு

சின்ன தலைவியின் சொந்தங்கள் பல காலமாகப் பிரிந்து கிடக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் ஒருசேர ஓரிடத்துக்குக் கொண்டுவரும்விதமாக, தன் மகளின் முதல் பிறந்தநாளை பிரபல ஹோட்டலில் நடத்தினார் விவேகமான வாரிசு. அனைத்துச் சொந்தங்களையும் ஒன்றாக்கி, அத்தையின் மனதை அசத்திவிட நினைத்தார். மொத்தச் சொந்தங்களும் வந்த நிலையில், இனிஷியல் தலைவரும், மன்னார்குடி புள்ளியும் விழாவைப் புறக்கணித்தார்களாம். இதில் சின்ன தலைவிக்குக் கொஞ்சம் மனவருத்தம் என்றாலும், மற்ற சொந்தங்களோடு அளவளாவி மனதை இலகுவாக்கிக் கொண்டாராம். #‘கண்ணுல தண்ணி வெச்சுண்டா’ மொமண்ட்!

நம்புங்கள்… `ஷாக்’ அமைச்சர் இன்னமும் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டிக் கொண்டிருக்கிறாராம். மாவட்டத்தின் அத்தனைத் தொகுதிகளையும் வெற்றிபெறவைக்க பெரிய அளவுக்கான பசை தேவைப்பட, மலைக்கோட்டை நகரிலுள்ள சினிமாப் புள்ளியிடம் கடன் வாங்கியிருந்தாராம் ஷாக் அமைச்சர். அமைச்சர் பதவி அறிவிக்கப்பட்ட அடுத்த வாரத்திலேயே மொத்தக் கடனும் செட்டிலாகிவிடும் என அந்த சினிமாப் புள்ளி நினைக்க, இன்று வரை மாதா மாதம் வட்டியை மட்டும் அனுப்பி வைக்கிறாராம் `ஷாக்’ அமைச்சர். ‘இந்த மனுஷனைப் புரிஞ்சுக்கவே முடியலையேப்பா’ என அமைச்சருக்கு அருகிலிருப்பவர்களே ஆச்சர்யப்படுகிறார்கள். #‘வடக்குப்பட்டி ராமசாமி ஊ.. ஊ...’

கிசுகிசு
கிசுகிசு

பிரிந்து கிடக்கும் இலைக் கட்சியை ஒன்றாக்கிய பிறகே, நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்க காவிக் கட்சி திட்டமிடுகிறதாம். துணிவானவரும், அவருடைய ஆட்களும் டெல்லியில் சந்தித்தபோது இது குறித்த கருத்தைச் சூசமாக ‘சமுதாயரீதியிலான வாக்குகள் முக்கியம்’ எனக் குறிப்பிட்டுச் சொன்னாராம் காவிக் கட்சியின் ஆளுமைப்புள்ளி. ‘கட்சிரீதியான ஆதரவை இந்த அளவுக்கு நிரூபித்தும் காவிக் கட்சி, மீண்டும் இணைப்பு குறித்துப் பேசுவது நியாயமா?’ எனத் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்தாராம் துணிவானவர். வழக்குகள் பாயுமோ என்கிற பயத்தில் இருக்கும் பெல் மாஜிக்கள் தயங்க, மற்றவர்கள், ‘தனித்துப்போட்டியிடவும் தயாராவோம்’ என உசுப்பேற்றுகிறார்களாம். #மறுபடியும் முதல்லருந்தா?!

வெளிநாட்டுப் பயணத்துக்குத் திட்டமிடப்பட்டாலும் அதில் முதன்மையானவருக்கு அவ்வளவு ஆர்வம் இல்லையாம். கட்டுப்பாட்டை மிஞ்சும் கட்சிக்காரர்கள், டெல்லியின் கோபம், உட்கட்சிக் குளறுபடி, குடும்ப மோதல் எனப் பல விஷயங்களையும் யோசிக்கும் முதன்மையானவர், வெளிநாட்டுப் பயணத்தைத் தள்ளிப்போட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள். சமீபத்தில் கூட்டிய அமைச்சரவைக் கூட்டத்திலும் இந்த ஆதங்கத்தை இலைமறை காயாகச் சுட்டிக்காட்டினாராம் முதன்மையானவர். நம்பிக்கை கொடுக்கும் விதமாக சீனியர் நிர்வாகிகளை முதன்மையானவரோடு பேசவைக்கும் முடிவில் இறங்கியிருக்கிறது குடும்பத் தரப்பு. #அவநம்பிக்கையே அவங்களாலதான?!