Published:Updated:

எம்.ஜி.ஆரின் வளர்ப்பு... கலைஞரின் தொண்டன்! அமைச்சர் துரைமுருகனின் அரசியல் பயணம்...

துரைமுருகன்
துரைமுருகன்

"நீங்கள் எனக்கு உதவி செய்திருக்கலாம். ஆனால், என்னுடைய தலைவர்  கலைஞர்தான்" என்று துரைமுருகன் எம்.ஜி.ஆருடன் செல்ல மறுத்து கருணாநிதி பக்கம் உறுதியுடன் நின்றார்.

வழக்கறிஞர், அரசியல்வாதி, பேச்சாளர் எனப் பன்முகத் திறன் கொண்டவராக விளங்கும் துரைமுருகன், நான்காவது முறையாக தமிழக அமைச்சராகியிருக்கிறார். திமுக-வின் பொதுச்செயலாளராகவும் இருக்கும் அவர், சட்டப்படிப்பு மற்றும் முதுகலைப் பட்டம் பயின்றவர். தொழில்முறையில் வழக்கறிஞரான துரைமுருகன், அமைச்சராகப் பதவி வகித்த துறைகளில் ஆழ்ந்த அறிவு உடையவர். இன்றைய திமுக-வில்அதிக அனுபவமுள்ள மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகன்,  சட்டமன்றஉறுப்பினராகவும் நீண்டகால அனுபவம் உடையவர். காட்பாடியை அடுத்துள்ள காங்குப்பம் என்ற கிராமத்தில், 1938-ம் ஆண்டு, ஜூலை 1-ம் தேதி பிறந்தவர் துரைமுருகன். தந்தை துரைசாமி,  தாயார் தவசி அம்மாள். அரசியல் பின்னணியோ, பரம்பரைச் செல்வாக்கோ இல்லாத, பள்ளிப்படிப்பைக்கூட முடிக்க முடியாத அளவுக்கு  இளமையில் வறுமை வாட்டிய குடும்பச்சூழலில் வளர்ந்தவர் துரைமுருகன். கல்லூரி காலத்தில் படிக்க வசதியற்ற துரைமுருகனுக்கு பணம் கொடுத்து உதவியவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் தனிக் கட்சி தொடங்கியபோது துரைமுருகனையும்  தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால், "நீங்கள் எனக்கு உதவி செய்திருக்கலாம். ஆனால், என்னுடைய தலைவர்  கலைஞர்தான்" என்று துரைமுருகன் எம்.ஜி.ஆருடன் செல்ல மறுத்து கருணாநிதி பக்கம் உறுதியுடன் நின்றார். அதுமட்டுமல்லாமல் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில், அவருக்கு எதிராக சட்டசபை விவாதங்களில் அனல் கக்கியவர்.

துரைமுருகன்
துரைமுருகன்
balasubramanian

இவையெல்லாம்தான் பிற்காலத்தில் இவரை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மிக நெருக்கமானவராக்கி, கட்சியிலும் ஆட்சியிலும் முக்கியப் பதவிகளில் கோலோச்ச வைத்தன. வைகோ பிரிந்த காலத்தில், கருணாநிதிக்குத் துணையாக நின்றதில் கருணாநிதிக்கு இன்னும் நெருக்கமாகிப்போனார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரின் மூத்த சகோதரர் மு.க.அழகிரி, கனிமொழி என கருணாநிதி குடும்பத்துக்கு மிக நெருக்கமானவர். தி.மு.க சார்பில், காட்பாடியில் முதன்முறையாக 33-வது வயதில் அவர், 1971-ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1977, 1980-ம் ஆண்டுகளில், இவர் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் மீண்டும்1984, 1989, 1991, 1996, 2001, 2006, 2011, 2016 மற்றும்  தற்போது 2021-ம் ஆண்டுகளில் இந்தத் தொகுதியில் போட்டியிட்ட அவர், 1984 மற்றும் 1991 ஆண்டு தேர்தல்களில் மட்டும் தோல்வியடைந்தார். மேடைப்பேச்சுகளில் இவருக்கு சிரிக்கவைக்கவும் தெரியும், அழ வைக்கவும் தெரியும். அடுத்தவரை நையாண்டி பண்ணுவதில் அலாதியான கற்பனைத் திறனும் உண்டு துரைமுருகனுக்கு. இவரது நகைச்சுவையான கருத்துகள், சைகைகள், முகபாவனைகள் போன்றவை, அனல்பறக்கும் விவாதங்களில்கூட சட்டசபையைக்  கலகலப்பாக மாற்றிவிடும். நகைச்சுவையான இவரது கமென்ட்டுக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவே சில சமயங்களில் குலுங்கிக் குலுங்கி சிரித்ததும் உண்டு. நீண்ட காலம் திமுக மாணவர் அணியில் அங்கம்வகித்தவர், பின்னர் தலைமைக் கழக முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்  என உயர்ந்து, தற்போது பொதுச்செயலாளர் எனக் கட்சியின் உயரிய பொறுப்பையும் வகிக்கிறார். தற்போது அவருக்கு நீர்வளத்துறை அமைச்சர்  பதவியும் கிடைத்துள்ளது. சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம், மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவைத் தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் ஆகிய துறைகள் இவரது கட்டுப்பாட்டில் வருகின்றன.

அடுத்த கட்டுரைக்கு