Published:Updated:

ஸ்டாலின் அமைச்சரவையில், அன்றைய ஜெயலலிதா விசுவாசி..! - யார் இந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்?

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

ஜெயலலிதாவை ஆதரித்த 32 எம்.எல்.ஏ-க்களை விருதுநகருக்குக் கொண்டு வந்து, தனது ஸ்பின்னிங் மில்லில் தங்கவைத்து பாதுகாத்ததில், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக மாறினார்.

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எனும் சாத்தூர் ராமச்சந்திரன், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள கோபாலபுரம் கிராமத்தில் 1949-ம் ஆண்டு, ஆகஸ்ட் 8-ல் பிறந்தவர். எட்டாம் வகுப்புக்கு மேல் படிப்பு வராததால், சித்தப்பாவுக்குத் துணையாக விருதுநகரில் பஞ்சு வியாபாரத்தை கவனிக்கத் தொடங்கினார் ராமச்சந்திரன். தீவிர எம்.ஜி.ஆர் ரசிகரான இவர், தனது ஊரில் 'தங்கக் கலசம் எம்.ஜி.ஆர்.ரசிகர் மன்றம்' என்ற அமைப்பைத் தொடங்கி, எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றச் செயலாளர் பதவிவரை உயர்ந்தார். முறுக்கு மீசை... தடாலடிப் பேச்சு... ஆட்கள் படைசூழ வலம்வந்தவர், எம்.ஜி.ஆர் நினைவில் கொள்ளத்தக்க அளவுக்குப் பிரபலம் ஆனார். அரசியல் மாற்றங்களால் தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் விலகிய சில மாதங்களில், திண்டுக்கல் இடைத்தேர்தல் நடந்தது. அந்தத் தொகுதியில் திமுக-வினரைச் சமாளிக்க எம்.ஜி.ஆரால் அங்கு அனுப்பிவைக்கப்பட்டவர். காரியத்தைக் கச்சிதமாக நிறைவேற்றியதால், எம்.ஜி.ஆரிடம் இவரது செல்வாக்கு இன்னும் உயர்ந்தது. அதன் பிறகு, அரசியலில் ஏறுமுகம்தான்.

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

முதன்முதலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். எம்.ஜி.ஆர் ஆட்சியில் கூட்டுறவு, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை அமைச்சராகப் பதவிவகித்தார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று கட்சி இரண்டாகப் பிரிந்தபோது, இவர் ஜெ. அணியில் இருந்தார். ஜெயலலிதாவை ஆதரித்த 32 எம்.எல்.ஏ-க்களை விருதுநகருக்குக் கொண்டுவந்து, தனது ஸ்பின்னிங் மில்லில் தங்கவைத்து பாதுகாத்ததில், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக மாறினார். பின்னர் ஜெயலலிதாவுடனான கருத்து வேறுபாட்டால், சில ஆண்டு காலம்  அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த சாத்தூரார், பின்னர் திமுக-வில் இணைந்தார். கருணாநிதி அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராகவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் கைத்தறித்துறை அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. சாத்தூர் தொகுதியில் ஆறு முறை, விளாத்திகுளத்தில் ஒரு முறை மற்றும் அருப்புக்கோட்டைத் தொகுதியில் 2016, 2021-ல் இரண்டு முறை வெற்றிபெற்று,  ஒன்பது முறை எல்.எல்.ஏ-வான ராமச்சந்திரன், ஆறாவது முறையாக அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். ஸ்டாலினின் அமைச்சரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு