Published:Updated:

சேகர்பாபு: அதிரடி அரசியலுக்குச் சொந்தக்காரர்; அறநிலையத்துறை அமைச்சர்!-துறை ஒதுக்கப்பட்டதன் பின்னணி!

சேகர்பாபு
சேகர்பாபு

தொகுதிப் பிரச்னைகளைத் தீர்ப்பதிலும், கட்சியினரை மட்டுமல்லாமல் அதிகாரிகளை வேலை வாங்குவதிலும் அலாதித் திறமை இவருக்கு உண்டு. எந்தக் கட்சியில் இருந்தாலும், தொகுதியில் இவருக்கென்று தனி விசுவாசிகள் உண்டு.

அதிரடி அரசியலுக்குச் சொந்தக்காரர், தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பி.கே.சேகர் பாபு. அதிமுக-வின் அவைத் தலைவரான மதுசூதனனின் உறவினர் என்பதிலிருந்தே சேகர்பாபுவின் அதிரடி அரசியல் எப்படியிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஒருகாலத்தில் அதிமுக-வின் வடசென்னை அடையாளமாக விளங்கியவர். பொது இடங்களில் ஜெயலலிதா இவரைப் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தார். 2001 மற்றும் 2006 சட்டமன்றத் தேர்தல்களில் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில், அதிமுக உறுப்பினராக போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், கட்சித் தலைமையோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2011 ஜனவரியில் திமுக-வில் இணைந்தார் சேகர் பாபு. கட்சித் தலைமையின் மன ஓட்டத்தைச் சொல்லாமலேயே புரிந்துகொண்டு செயல்படுத்துவதில் சமர்த்தர். சிறந்த களப்பணியாளர். தொகுதிப் பிரச்னைகளைத் தீர்ப்பதிலும், கட்சியினரை மட்டுமல்லாமல் அதிகாரிகளை வேலை வாங்குவதிலும் அலாதி திறமை இவருக்கு உண்டு. எந்தக் கட்சியில் இருந்தாலும், தொகுதியில் இவருக்கென்று தனி விசுவாசிகள் உண்டு.

சேகர் பாபு
சேகர் பாபு

அதனால்தான், அபாரமான களப்பணி, கட்சிப் பணியில் காட்டும் சுறுசுறுப்பு போன்றவற்றால் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்ட நிலையில், நினைத்த மாத்திரத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசும் அளவுக்குத் தன் செல்வாக்கை உயர்த்திக்கொண்டவர். கடந்த 10 ஆண்டுக்காலம் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதிலும், தனது தொகுதியில் தொண்டர்களைத் தொய்வடையவிடாமல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். திமுக-வின் கோட்டை என வர்ணிக்கப்படும் சென்னை, துறைமுகம் தொகுதியில், 2011-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வில் இணைந்த பழ.கருப்பையா வெற்றிபெற்று, திமுக-வின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளிவைத்தார். ஆனால், 2016-ல் நடந்த தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட சேகர் பாபு வெற்றி பெற்று, துறைமுகம் தொகுதியை மீண்டும் திமுக வசமாக்கினார். தற்போது மீண்டும் 2021 தேர்தலில் துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளராக வெற்றிபெற்ற நிலையில், அவரது திறமைக்குப் பரிசாக அறநிலையத்துறை அமைச்சர் பதவியை வழங்கியிருக்கிறார் கட்சித் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின். 'இந்து சமய அறநிலையத்துறையை கலைத்துவிட்டு, கோயில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும்' என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டுவரும் நிலையில், இது தொடர்பான பிரச்னைகளை எதிர்கொள்ள சேகர்பாபு போன்ற அதிரடியான நபரே சரியானவர் என்ற எண்ணத்திலேயே, அவரிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு