Published:Updated:

`அரசே செய்திருந்தால்... மற்றவர்கள் ஏன் செய்யப்போகிறார்கள்?’- தடை உத்தரவுக்கு வலுக்கும் கண்டனம்

தமிழக அரசு
தமிழக அரசு

குடும்ப வன்முறை, தற்கொலை போன்றவை நடப்பதற்குப் பொருளாதாரம் உணவு இன்மையும் முக்கியக் காரணம். ஆகவே அமைப்புகள் கொடுக்கும் உதவி என்பது இத்தகைய அவலங்கள் நடப்பதை தடுக்கும் நடவடிக்கை என்பதையும் கவனப்படுத்த விரும்புகிறோம்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதனால், தற்போது அமலில் உள்ள ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் எனப் பல மாநில முதல்வர்களும் பிரதமருக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே, ஏற்கெனவே உள்ள அத்தியாவசியப் பொருள்களுக்கான தட்டுப்பாடு அதிகமாக வாய்ப்புள்ளது. குறிப்பாக ஏழைகள் பலரும் அன்றாட உணவுக்கே கஷ்டப்பட்டு வருகின்றனர். இவர்களுக்குத் தன்னார்வலர்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர்.

இத்தகையச் சூழலில், ``சமைத்த உணவுகள், நிவாரணப்பொருள்களை வழங்குவதால் தனிநபர் இடைவெளி பாதிக்கிறது. எனவே, ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தன்னார்வலர்கள் தனியாக நிவாரணப்பொருள்கள் வழங்க தடை விதிக்கப்படுகிறது” எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழகத்தின் முக்கியத் தலைவர் உட்பட பலரும் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின் ( தி.மு.க மற்றும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்) :

தானும் செய்யமாட்டேன், மற்றவர்களும் செய்யக் கூடாது என்பது இந்த ஆட்சியின் வஞ்சகம். கூட்டம் சேர்வதை ஒழுங்குபடுத்தலாம். உதவியே செய்யக்கூடாது என்று எப்படி உத்தரவிட முடியும்? மக்களின் கண்ணீர் துடைக்கத் தமிழ் மக்களின் கரங்கள் நீளும்போது, அதைத் தடுக்க எவராலும் இயலாது; தடுக்க நினைப்பது சர்வாதிகாரத்தனம்! கருணையில்லா ஆட்சி கடிந்தொழிக!’ என்ற வள்ளலார் வார்த்தைகளால் எச்சரிக்கை செய்கிறேன்.

`போன் பண்ணுங்க, மளிகைப் பொருள் வீடு தேடி வரும்!’ -வேலூர் மக்களுக்கு உதவ 1,552 தன்னார்வலர்கள் #corona

வைகோ ( ம.தி.மு.க பொதுச்செயலாளர் ) :

கொரோனா நாசகார நோய் மனித உயிர்களை உலகெங்கும் பலிவாங்கி வருகிறது. இதைத் தடுப்பதற்கோ, முழுமையாகக் குணப்படுத்துவதற்கோ உரிய மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கோடானு கோடி மக்கள் விவரிக்க முடியாத துன்பத்துக்கு ஆளாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், அமைப்புச் சாரா தொழிலாளர்கள், அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்று பரிதவித்து நிற்பதை எண்ணினால் இதயமே வெடிக்கிறது.

இந்நிலையில், அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், மனிதநேயம் உள்ளோர் பிறர் துன்பத்தில் பங்கெடுக்க விளைவோர் ஆங்காங்கு முறையாகப் பொருள்களையும் உணவையும் வழங்கி வருகின்றனர். தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளாமலேயே மனிதாபிமான உதவிகள் செய்து வருகின்றனர். தமிழக அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையைத்தான் அவர்கள் செய்து வருகின்றனர். இத்தகைய உதவிகள் செய்வோரைக் கண்டு தமிழக அரசு மகிழ்ந்து பாராட்ட வேண்டும்.

வைகோ
வைகோ

ஆனால், ``தனிப்பட்டவர்களோ, தனிப்பட்ட அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்குப் பொருளோ, பணமோ, உணவோ கொடுக்கக்கூடாது. அப்படிக் கொடுப்பதாக இருந்தால் தமிழக அரசிடம்தான் தர வேண்டும்’’ என்று இடிஅமீன் கட்டளையைப் பிறப்பித்து இருக்கிறது. இது மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும்.

பொதுமக்களுக்குக் கொரோனா உதவிகளை பிறர் செய்த இடத்தில் எங்காவது ஒரு பிரச்னை ஏற்பட்டதா? குழப்பம் ஏற்பட்டதா? தள்ளுமுள்ளு ஏற்பட்டதா? ஒன்றுமே கிடையாது. மிக முறையாக விநியோகிக்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இதனால் பயன்பெறுகிறார்கள். சந்தைகள், கடைகளில் பொருள்களை மக்கள் விலைக்கு வாங்குகின்ற இடத்தில்தான் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. தமிழக அரசின் அறிவிப்பு, கோடானு கோடி தமிழர்களின் நெஞ்சில் நெருப்பு வைப்பதாகும். மக்கள் பொறுமை ஒரு கட்டத்துக்கு மேல் கட்டுப்படுத்த முடியாது. அதை உணர்ந்து உடனடியாக இந்த அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.

என்ன நடக்கிறது... யார் தடுக்கிறார்கள்?! -`கொரோனா' அரசியலால் கொதிக்கும் ஸ்டாலின் - எடப்பாடி

டிடிவி தினகரன் ( அ.ம.மு.க பொதுச்செயலாளர் ) :

கொரோனா பெருந்தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் அரசியல் கட்சிகளும், தன்னார்வ சேவை அமைப்புகளும் அரசுக்கு எல்லா வகையிலும் பக்கபலமாகவே இருந்து வருகின்றன. ஆனால், 20 நாள்களாக ஊரடங்கு தொடர்வதால் பல இடங்களில் அன்றாட வருமானத்தை நம்பியிருந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை, எளிய மக்கள் பலரும் உணவுக்காகவும், உணவுப் பொருல்களுக்காகவும் தத்தளித்து வரும் செய்திகள் வந்தபடியே இருக்கின்றன. அதனால்தான் அவர்களுக்கு உதவ மற்றவர்கள் முன்வருகிறார்கள்.

ஒடிசா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் செய்வதைப் போன்று அரசே சமுதாய உணவகங்களை ஏற்படுத்தி பசித்த வயிறுகளுக்கு உணவிட்டிருந்தால், மற்றவர்கள் ஏன் அதைச் செய்யப் போகிறார்கள்? நோயைத் தடுக்க களத்தில் நின்று உழைப்பவர்களுக்கு முகக் கவசங்களையும், தற்காப்பு மருத்துவ உபகரணங்களையும் அரசே வழங்கியிருந்தால் மற்றவர்கள் ஏன் அவர்களுக்குக் கொடுக்கப்போகிறார்கள்?

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

கோவிட் -19 நோயைக் கண்டறிவதற்கான மருத்துவ உபகரணத்தைக் கூட சரியான நேரத்தில் வாங்க முடியாமல், நோயின் தாக்கம் அதிகமான பிறகு என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கும் அரசு நிர்வாகம், அடிப்படைத் தேவையான உணவு மற்றும் உணவுப்பொருள்களை நல்ல உள்ளம் கொண்டவர்கள் பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவதைத் தடுப்பது எந்த வகையில் நியாயம்? இந்த இக்கட்டான நேரத்தில் தனிமனித விலகல் மிக முக்கியமானது என்பதால் கூட்டம் சேருவதைத் தடுப்பதற்குரிய வழிமுறைகளைத்தான் செயல்படுத்த வேண்டும். அதற்கு பதிலாக மாவட்ட ஆட்சியரகங்களில் கொண்டுபோய் மொத்தமாக கொடுக்க வேண்டும் என்றால், அந்தப் பொருள்கள் அந்தந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களுக்குச் சரியான நேரத்தில் சென்று சேராது என்பதை உணர வேண்டும்.

சென்னை போன்ற பெரிய நகரங்களிலும் இது நடைமுறை சாத்தியம் இல்லாதது. அதுமட்டுமல்லாமல், தமக்குப் பக்கத்தில் துன்பத்தோடு தவிப்பவர்களுக்கு யாருமே உதவக்கூடாது என்று சட்டத்தைக் காட்டி மிரட்டுவது துளியும் மனித நேயமற்ற செயலாகும்.

`நிவாரணம் வழங்கும்போது தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டியவை!’ - மருத்துவரின் அறிவுறுத்தல்

கதிர் ( செயல் இயக்குநர், எவிடென்ஸ் ) :

நம் தமிழகத்தில் வறுமை கோட்டுக்குக் கீழே உள்ள மக்கள், குடிசைப் பகுதியில் வசிப்பவர்கள், கூலிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் போன்ற மக்கள் மிகுதியாக வசிக்கின்றனர். தமிழக அரசு ஒரு குடும்பத்திற்குக் கொடுத்த ரூ.1000 / போதுமானதாக இல்லை. மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது. இதனால் பசி பட்டினியால் துன்பப் படுகின்றனர். குடும்ப வன்முறை, தற்கொலை போன்றவை நடப்பதற்குப் பொருளாதாரம் உணவு இன்மையும் முக்கியக் காரணம். ஆகவே அமைப்புகள் கொடுக்கும் உதவி என்பது இத்தகைய அவலங்கள் நடப்பதை தடுக்கும் நடவடிக்கை என்பதையும் கவனப்படுத்த விரும்புகிறோம்.

எவிடென்ஸ் கதிர்
எவிடென்ஸ் கதிர்

இந்த நிலையில் அமைப்புகள் கொடுக்கக் கூடிய உதவிகளை மக்களிடத்தில் கொண்டு செல்ல அரசு உறுதுணையாக இருக்க வேண்டும். தன்னார்வ அமைப்புகளை ஊக்குவிக்க வேண்டும். அவர்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற தடை இல்லை. சில விதிமுறைகளை உருவாக்கி மக்களுக்கு அமைப்பின் மூலம் கொண்டு சேர்ப்பதுதான் மக்கள் நல அரசின் உயர்ந்த கொள்கையாகும். ஆகவே, தமிழக அரசு தனது உத்தரவினைத் திரும்பப் பெற வேண்டும். கொரோனா தொற்று குறித்து ஆய்வு நடத்தும் தமிழக அரசு, பட்டினியோடு இருக்கும் மக்கள் குறித்தும் ஆய்வு நடத்திப் பாருங்கள். கொரோனாவை விடக் கொடிய அவலம் நடப்பதைக் கண்டறியலாம்.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு அறிவித்த ரூ.1,000 நிவாரணம் பெற காத்திருக்கும் பொதுமக்கள்! #Curfew

இந்தநிலையில், இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் கொடுத்திருக்கிறது. அதில், தன்னார்வலர்கள் யாருக்கும் தடை விதிக்கவில்லை என்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படவே அறிவுறுத்தியிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. மேலும், கொரோனா பரவலைத் தடுக்கத்தான் இந்தக் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு