Published:Updated:

இரான் தளபதி சுலைமானி கொலை... ட்ரம்ப்பை வறுத்தெடுக்கும் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்கள்!

டொனால்ட் ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில் இரான் ராணுவத் தளபதி சுலைமானி அமெரிக்க ராணுவத்தால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இரான் ராணுவத்தின் தளபதியும், சக்தி வாய்ந்த தலைவருமான காசிம் சுலைமானி பாக்தாத் விமான நிலையத்துக்கு வெளியே அமெரிக்கப் படைகளின் ட்ரோன் தாக்குதலால் கொலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்கா அதிபருக்கு இது மிகப்பெரிய வெற்றியாகவும் இரானுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது. மூன்றாம் உலகப் போருக்கான விதையை ட்ரம்ப் விதைத்துவிட்டார் எனப் பரவலாகப் பேசப்படுகிறது. மத்திய கிழக்கில் இது மேலும் பதற்றத்தை அதிகரிக்கவே செய்யும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

இரான் பாதுகாப்புப் படைகளின் உச்சபட்ச தளபதி கொலை செய்யப்பட்டிருப்பது இரானுக்கு மிகப்பெரும் இழப்பாக உள்ளது. ``இது இரான் இறையாண்மையின் மீதான அமெரிக்காவின் தாக்குதல், சுலைமானியின் படுகொலைக்கு நிச்சயம் பழி தீர்ப்போம்” என இரான் எச்சரித்துள்ளது. ஐ.நா உட்பட பல சர்வதேச நாடுகளும் இதைக் கண்டித்ததோடு இரண்டு தரப்பும் பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.

சுலைமானி
சுலைமானி

சர்வதேச தரப்பில் மட்டுமல்லாது அமெரிக்காவுக்குள்ளுமே ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. நவம்பர் மாதம் அமெரிக்கா ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் முன்னணியில் இருக்கக்கூடிய பலரும் இதைக் கண்டித்துள்ளனர்.

எதிர்க்கட்சியான ஜனநாயக் கட்சியின் சார்பாக ஜனாதிபதி போட்டியில் முன்னணியில் இருக்கக்கூடியவர்களான பெர்னி சாண்டர்ஸ், ஜோ பிடேன், எலிசபெத் வாரேன், துளசி கப்பர்ட் போன்றோர் மட்டுமல்லாது ஆளும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜோ வால்ஷ் மற்றும் வில்லியம் வெல்ட் ஆகியோருமே கூட ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கையைக் கண்டித்துள்ளனர். இரான் உடன் பதற்றத்தை இது மேலும் அதிகரிக்கவே செய்யும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பெர்னி சாண்டர்ஸ்:

2020 ஜனாதிபதி தேர்தலுக்குப் பிரதான வேட்பாளராகக் கருதப்படக்கூடிய பெர்னி சாண்டர்ஸ், ட்ரம்ப்பின் நடவடிக்கையைக் கண்டித்துள்ளார். மேலும் அவர், ``இராக் யுத்தத்தில் அமெரிக்கா இறங்கியதே நவீன கால அமெரிக்கா வரலாற்றில் மிகப்பெரிய தவறு. அதுபோல இரானுடன் யுத்தத்தில் இறங்கி மீண்டும் அதே தவற்றைச் செய்ய அனுமதிக்க மாட்டேன்" எனத் தெரிவித்துள்ளார். இரான் மீது அமெரிக்கா போரில் ஈடுபடக்கூடாது என அமெரிக்கா நாடாளுமன்றத்தில் தீர்மானமும் கொண்டு வரப்படவுள்ளது.

இரான் மீதான போரைத் தடுக்க நாடாளுமன்றத்தில் இவர் கொண்டு வந்த தீர்மானத்தில், ``சர்வதேச உறவுகளில் போர் என்பது கடைசி ஆயுதமாகத்தான் இருக்க வேண்டும். பருவநிலை நெருக்கடி போன்ற தலையாய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டிய நேரத்தில் யுத்தம் என்பது அவசியமற்றது. அப்படியே யுத்தம் என்றாலும் உழைக்கும் வர்க்கத்தின் பிள்ளைகள்தான் அதில் சண்டையிட்டு உயிர்விட வேண்டும். எந்த கோடீஸ்வரரின் பிள்ளைகளும் சாக மாட்டார்கள்" என்று கூறியுள்ளார்.

பெர்னி சாண்டர்ஸ் - எலிசபெத் வாரன்
பெர்னி சாண்டர்ஸ் - எலிசபெத் வாரன்

எலிசபெத் வாரன்:

``ட்ரம்ப் தன்னுடைய சொந்த நலனுக்காக அமெரிக்காவின் ராஜாங்க உறவுகளை சிதைத்துக் கொள்கிறார். ஆரம்பம் முதலே இரானுடன் போர் தொடங்க ட்ரம்ப் குறியாக இருக்கிறார். அமெரிக்க மக்கள் இதை ஆதரிக்க மாட்டார்கள். ட்ரம்ப்பின் நடவடிக்கை மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கர்களின் உயிரை ஆபத்தில் சிக்க வைத்துள்ளது. அமெரிக்கர்கள் விழித்துக்கொள்ள வேண்டும். இதற்கு மேலும் மத்திய கிழக்கில் யுத்தமொன்று நடைபெறக் கூடாது" என்றுள்ளார்.

ஜோ பிடென்:

``சுலைமானியின் மரணத்துக்கு அமெரிக்கர்கள் யாரும் வருந்த மாட்டார்கள். ஆனால், ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரிக்கவே செய்யும். இரான் நிச்சயம் பதிலடி கொடுக்கும். மத்திய கிழக்கில் புதியதொரு மோதலின் தொடக்கப்புள்ளியில் நாம் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் அமெரிக்காவின் பாதுகாப்பைத் தவறான திசையை நோக்கி ட்ரம்ப் நகர்த்திக்கொண்டிருக்கிறார்" என்றுள்ளார்.

ஜோ பிடென் - துளசி கப்பர்ட்
ஜோ பிடென் - துளசி கப்பர்ட்

துளசி கப்பர்ட்:

``ட்ரம்ப் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே ஒரு போர் செயலை செய்திருக்கிறார். இது அரசியலமைப்பை மீறிய செயலாகும். ட்ரம்ப்பின் செயல்கள் இரான் உடன் நேரடியான யுத்தத்தைத் தொடங்கிவிடும். அது ஆப்கானிஸ்தான், சிரியா, இராக் யுத்தங்களை விடவும் மிகப்பெரிய இழப்பையும் பேரழிவையுமே உருவாக்கும். போர் தொடர்பான அதிபரின் அதிகாரத்தை நாடாளுமன்றம் குறைக்க வேண்டும்" என்றுள்ளார்.

`நேற்று செய்ததை முன்னரே செய்திருக்க வேண்டும்!’- காசிம் சுலைமானி கொல்லப்பட்டது தொடர்பாக ட்ரம்ப்

ஜோ வால்ஷ்:

ஆளும் கட்சியான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜோ வால்ஷ், ``3,500 அமெரிக்க வீரர்கள் மத்திய கிழக்கிற்கு விரைகின்றனர். ஆனால், அமெரிக்கப் படைகள் மத்திய கிழக்கிலிருந்து திரும்பியிருக்க வேண்டும். அதிபர் நாட்டு மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். ட்ரம்ப்பை நம்ப முடியாது. அவர் எப்போதும் பொய்களை மட்டுமே பேசிவருகிறார். அவர் தகுதியற்றவர்" என்றுள்ளார்.

ஜோ வால்ஷ் - வில்லியம் வெல்ட்
ஜோ வால்ஷ் - வில்லியம் வெல்ட்

வில்லியம் வெல்ட்:

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த வில்லியம் வெல்ட் , ``சரியோ, தவறோ அமெரிக்கா முன்பெப்போதும் இல்லாத அளவுக்கு இரான் உடனான போர் பதற்றத்தின் விளிம்பில் இருக்கிறது. இந்தப் புள்ளிக்கு எவ்வாறு வந்துள்ளோம் என்பது வேறு விவாதம். இது அடுத்து எதைநோக்கி நகரும் என்கிற கேள்விக்கு விடைகாண தெளிவான மற்றும் ஸ்திரமான தலைமை வேண்டும்" என்றுள்ளார்.

முன்னணி ஜனாதிபதி வேட்பாளர்களிடத்தில் மாறுபட்ட கருத்துகள் நிலவுவது உள்நாட்டு அரசியலில் ட்ரம்ப்புக்கு பாதகமான நிலையை உருவாக்கியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு