Published:Updated:

``என் பேச்சை இப்போதாவது கேள்..!" - அண்ணாமலையிடம் அன்பாகக் கூறிய சி.பி.ஆர்

சி.பி.ஆர் - அண்ணாமலை

`` `நாங்கள் ஒவ்வொருவராகப் பார்த்து கட்சியில் சேர்த்தால், நீங்கள் தலைவராக வந்து, எல்லோரையும் ராஜினாமா செய்யவைக்கிறீர்களா’ என ஹெச்.ராஜா அண்ணா என்னிடம் கிண்டலாகக் கேட்டார்.”- அண்ணாமலை

Published:Updated:

``என் பேச்சை இப்போதாவது கேள்..!" - அண்ணாமலையிடம் அன்பாகக் கூறிய சி.பி.ஆர்

`` `நாங்கள் ஒவ்வொருவராகப் பார்த்து கட்சியில் சேர்த்தால், நீங்கள் தலைவராக வந்து, எல்லோரையும் ராஜினாமா செய்யவைக்கிறீர்களா’ என ஹெச்.ராஜா அண்ணா என்னிடம் கிண்டலாகக் கேட்டார்.”- அண்ணாமலை

சி.பி.ஆர் - அண்ணாமலை

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்கவிருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பா.ஜ.க சார்பில் சென்னை தியாகராய நகர் பசும்பொன் தேவர் திருமண மண்டபத்தில் நேற்று (பிப்ரவரி 15) பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பா.ம.க சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், புரட்சி பாரதம் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் பங்கேற்றனர். விழாவில் ஒவ்வொருவரின் பேச்சிலும் அரசியல் நெடி கலந்தே இருந்தது.

த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் பேசுகையில், ``வெற்றி மேடையாகவே இந்த மேடை அமைந்திருக்கிறது" என்று கூட்டணிக் கட்சிகளின் குரலாகவும், ``தமிழ்நாட்டின் முதன்மைக் கட்சியின் பிரதிநிதியாக அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்களுள் ஒருவரான மதிப்பிற்குரிய ஜெயக்குமார் கலந்துகொண்டிருக்கிறார்" என்று கூட்டணியில் பெரிய கட்சி யார் என்பதையும் தெளிவுப்படுத்திச் சென்றார். அவரைத் தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், ``கட்சியில் புகழ்பெற்றவராக இருப்பதைவிட, கட்சிக்கு விசுவாசமிக்கவராக இருக்க வேண்டும் என எம்.ஜி.ஆர் கூறியது எங்கள் தலைமைக் கழகத்தில் இப்போதும் இருக்கும். அதுபோல் விசுவாசத்துக்கு அடையாளமாக இருப்பவர் சி.பி.ராதாகிருஷ்ணன். என்னைப்போல எப்போதும் ஜாலியாக இருப்பார் சி.பி.ஆர். அதனால்தான் எங்களுக்கு தலையில் முடியில்லை. எனவே, இதைக் கூறியவுடன் முடி இருக்கும் அண்ணாமலை எங்கள் மேல் கோபப்பட்டுவிடக் கூடாது.

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

அண்ணா ஆரம்பித்த இயக்கம் தி.மு.க. கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிவந்ததுபோல், அண்ணா மறைவுக்குப் பிறகு ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தி.மு.க வந்தது. எம்.ஜி.ஆர் இல்லாமல் கருணாநிதி முதல்வராகி இருக்க முடியாது. தி.மு.க-வில் கிங் மேக்கராக இருந்தவர் எம்.ஜி.ஆர். அவர் இருந்தவரை கருணாநிதியால் முதலமைச்சராக வர முடியவில்லை. முன்பு தமிழர்கள் ஆலோசகர்களாகவும், நிர்வாகரீதியாகவும் டெல்லியில் ஆதிக்கம் செலுத்தினார்கள். ஆனால், மத்தியில் பல ஆண்டுகள் தி.மு.க கூட்டணியில் இருந்தபோதும் தமிழகத்திலிருந்து ஒரு ஆளுநரைக்கூட உருவாக்கவில்லை. இப்போது தமிழகத்திலிருந்து ஐந்து ஆளுநர்களை உருவாக்கிய பெருமை பா.ஜ.க-வுக்கு உண்டு. தமிழர்களை பா.ஜ.க உயர்த்தியிருக்கிறது” என்றார்.

ஜெயக்குமாருக்குப் பிறகு பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, ``சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கட்சி அடையாள அட்டை வழங்கியது ஹெச்.ராஜா அண்ணன்தான். கட்சியின் தொண்டன் எனும் அந்தஸ்தை சி.பி.ராதாகிருஷ்ணனிடமிருந்து பா.ஜ.க எடுத்துக்கொண்டிருக்கிறது. அதில் சிறிய வருத்தம் எங்களுக்கு உண்டு. கண்ணில் ஒரு துளி கண்ணீர் இருக்கவே செய்கிறது. மாவோயிஸ்ட், நக்சலைட் தாக்குதல்கள், நிலக்கரி ஊழல் நடந்த மாநிலம் ஜார்க்கண்ட். அந்த மாநிலத்துக்குப் பொருத்தமானவர் சி.பி.ராதாகிருஷ்ணன். பதவியில் இருக்கும் மூன்று ஆளுநர்கள் தமிழகத்துக்குக் கிடைத்திருக்கின்றனர்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் என இரு முக்கிய தலைவர்களின் ராஜினாமா கடிதத்தை நான் தலைவராக இருந்து பெற்றுக்கொண்டிருக்கிறேன். ‘நாங்கள் ஒவ்வொருவராகப் பார்த்து கட்சியில் சேர்த்தால் நீங்கள் தலைவராக வந்து, எல்லோரையும் ராஜினாமா செய்யவைக்கிறீர்களா’ என ஹெச்.ராஜா அண்ணா என்னிடம் கிண்டலாகக் கேட்டார். ராஜினாமா கடிதம் வாங்கும்போது சி.பி.ஆர் அண்ணாவை இருக்கையில் அமரச் சொன்னபோது அவர் அமரவில்லை. நானும் பிடிவாதமாகக் கேட்கையில், ‘என் பேச்சை இப்போதாவது கேள்’ என்று கூறினார் சி.பி.ராதாகிருஷ்ணன்” என்றார்.

சி.பி.ஆர், ஜி.கே.வாசன், அண்ணாமலை, ஜெயக்குமார்
சி.பி.ஆர், ஜி.கே.வாசன், அண்ணாமலை, ஜெயக்குமார்

அவரைத் தொடர்ந்து பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், “பா.ஜ.க தொண்டன் எனும் நிலையிலிருந்து பரிணாம வளர்ச்சியாக, அடுத்த நிலைக்குச் செல்கிறேன். இல.கணேசன், தமிழிசை, சி.பி.ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் கட்சிப் பணியை விட்டுச் செல்கின்றனரே எனப் பலர் கேட்கின்றனர். ஆனாலும் நாங்கள் சென்றாலும் தமிழக பா.ஜ.க மகத்தான் இயக்கமாக தனது பயணத்தைத் தொடரும். புதிய சிகரங்களை பா.ஜ.க தொடும். அண்ணாமலையின் தலைமை அப்படிப்பட்டதாக இருக்கிறது. அண்ணாமலை எனும் சீறிவரும் சிங்கத்தைத் தடுத்து நிறுத்தும் சக்தி எவருக்கும் இல்லை. அண்ணாமலை நேற்றுவரை தலைவராக இருந்தார், இன்று என் தம்பியாக மாறியிருக்கிறார். தூத்துக்குடியில் நான் படித்தபோது, அப்பா எனக்கு அனுப்பிய 250 ரூபாய் மணி ஆர்டர் பணத்தை, மீண்டும் திருப்பூருக்கு அனுப்பிவைத்து கட்சிக்குச் செலவிட்டேன். மயிலாப்பூர் தொகுதியைக் கூட்டணியில் கலைஞர் பா.ஜ.க-வுக்குத் தந்தார். இப்போதுபோல் அப்போது தி.மு.க தன் கூட்டணிக் கட்சிகளுக்கு 25 கோடி ரூபாய்க்கு காசோலை தரவில்லை. பா.ஜ.க தொண்டர்கள் பி.எஃப் பணத்தில் லோன் எடுத்துச் செலவிட்டனர். எதையும் எதிர்பார்க்காமல் பணியாற்றும் தொண்டர்களின் இயக்கம் பா.ஜ.க. நான் எங்கு சென்றாலும் நான் ஓர் ஆர்.எஸ்.எஸ்-காரன் என்பதைப் பெருமையாகச் சொல்வேன். உலகின் வல்லரசாய் பாரத தேசம் உயர்ந்திட வேண்டும். பஞ்சத்திலிருந்தவர்கள் உலகுக்கு அள்ளிக்கொடுக்கும் வகையில் உயரக் காரணம் பிரதமர் நரேந்திர மோடிதான்.

சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன்
சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன்

இல.கணேசன், கிருபாநிதி, ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணனுடன் இணைந்து பணியாற்றியது, திருநாவுக்கரசர், கா.சே.ராமசந்திரன், காசி முத்துமாணிக்கம் போன்றோருடன் இணைந்து பணியாற்றியதை மறக்க முடியாது. ‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...' என்பார்கள். மாற்று இயக்கத்துக்குச் சென்றாலும் அவர்களை மாறு கண் கொண்டு பார்க்கக் கூடாது. நேர்கொண்ட பார்வை மாறாமல் இருந்தால்தான் இயக்கம் மகத்தான வெற்றி பெறும். அரசியல் என்பது ஒருநாள் நிகழ்வு அல்ல, நீண்ட பயணம். ஜெயலலிதாவைப் பார்த்து வியக்கக் காரணம் நாம் சொல்வதை அவர் நொடியில் கிரகித்துக்கொள்வார். மிகப்பெரும் தோல்வியை முந்தைய நாள் இரவில் கேட்டாலும், மறுநாள் காலை முரசொலியில் கருணாநிதி உத்வேகத்தோடு எழுதுவார். கி.வீரமணி மாற்றுச் சிந்தனை கொண்டவராக இருந்தாலும்... ஒரு க்... வைத்து எனக்கு வாழ்த்துச் சொல்லியிருந்தார்.

சி.பி.ஆர் - அண்ணாமலை
சி.பி.ஆர் - அண்ணாமலை

மாற்று இயக்கத்தவர்களின் நல்ல கருத்தை நமதாக்கிக்கொள்ள வேண்டும் என்றும், மாற்றுச் சிந்தனை கொண்டோருக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் வாஜ்பாய் சொல்வார். யாரிடம் எந்தப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று கண்டறிந்து பொறுப்பை வழங்க வேண்டும் என்றார் அண்ணா. அண்ணாமலை தலைமை அதுபோல இருக்கிறது. அனைவரையும் அரவணைத்து, அனைவரிடமிருந்தும் வேலை வாங்கும் திறமை அண்ணாமலைக்கு இருக்கிறது. மற்றவர்களிடம் இல்லாத நற்குணம் அண்ணாமலைக்கு இருக்கிறதென்றால் அது யாரைப் பார்த்தாலும் அவர்களது மனதில் இடம்பிடிக்கும் வகையில் அன்பான சொல்லுக்குச் செந்தக்காரராக இருக்கிறார். நேர்மைக்குப் போராடும் மகத்தான தலைவராக அண்ணாமலை இருக்கிறார். தமிழர்கள் பெருமையை உலகறியச் செய்யும்விதமாக நான் பணியாற்ற அனைவரின் அன்பும், பிரார்த்தனையும் வேண்டும்” என்று முடித்தார்.