Published:Updated:

கழகங்களை மிரளவைத்த கட்சித் தாவல்கள்... அதிர்ந்துபோன தலைவர்கள்! - அரசியல் அப்போ அப்படி- 9

ஜோதி விலகலால் அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா, நம்பிக்கைத் துரோகி என்று வர்ணித்து ஜோதியைக் கடுமையாகச் சாடி அறிக்கைவிட்டார். அவரைக் கட்சியைவிட்டும் நீக்கினார். இதையடுத்து ஜோதி, தி.மு.க-வில் இணைந்தார்.

அரசியலில் கொள்கை மாறுபாடுகளாலும், கருத்து வேறுபாடுகளாலும் கட்சி மாறுவதைத் தாண்டி, தேர்தல் நேரங்களில் தான் சார்ந்திருக்கும் கட்சியில் `சீட்' கிடைக்கவில்லை என்றால், கோபித்துக்கொண்டு மாற்றுக் கட்சிக்குத் தாவுவதும் சமீபகால அரசியலில் மிகவும் இயல்பான ஒன்றாகிவிட்டது. என்றாலும், சில பேருடைய வெளியேற்றமும், கட்சித் தாவலும் சம்பந்தப்பட்ட கட்சித் தலைவரையும், கட்சித் தொண்டர்களையும் அதிகமாக உலுக்கிவிடும்.

அப்படியான சிலரது வெளியேற்றத்தை முன்னாள் முதலமைச்சர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் ரொம்பவே எதிர்கொண்டுள்ளனர். தி.மு.க-வைப் பொறுத்தமட்டில், எம்.ஜி.ஆ.ர், வைகோ ஆகியோரது வெளியேற்றத்துக்குப் பல காரணங்கள் உண்டு. அது தமிழக அரசியல் வரலாற்றுப் பக்கங்களில் அனைவரும் அறிந்த ஒன்றாகவே இருப்பதால், பரபரப்பாகப் பேசப்பட்ட வேறு சிலரது வெளியேற்றங்கள் குறித்து பார்க்கலாம்.

கருணாநிதி - எம்.ஜி.ஆர்
கருணாநிதி - எம்.ஜி.ஆர்

தாவிச் சென்ற தமிழ்க்குடிமகன்

1989 - 91 வரையிலான தி.மு.க ஆட்சியில் சபாநாயகராக இருந்த தமிழ்க்குடிமகன், 2001 தேர்தலில் சீட் கொடுக்கவில்லை என்பதற்காக தி.மு.க-விலிருந்து வெளியேறி, ஜெயலலிதாவிடம் சேர்ந்தார். இது தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு மட்டுமல்லாமல், அந்தக் கட்சித் தொண்டர்களுக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. அவரது வெளியேற்றம் கட்சியில் பாதிப்பு எதையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், தமிழ்ப் பேராசிரியர், தம்மைப் போன்றே தமிழ் மீது தீராத பற்றுடையவர் என்ற அடிப்படையில், கட்சி விசுவாசி என்பதையும் தாண்டி, அவரைத் தனது ஒரு நண்பராகவே கருதினார் கருணாநிதி.

ஜெயலலிதா
ஜெயலலிதா

அதனால்தான் திமுக உறுப்பினர் என்றாலும், அரசியலில் தீவிரமாக இல்லாமல், கல்லூரிப் பணியில் இருந்தவரைக் கட்டாயப்படுத்தி அரசியலுக்கு இழுத்து, 1989 சட்டமன்றத் தேர்தலில் இளையாங்குடி தொகுதியில் 'சீட்' கொடுத்து எம்.எல்.ஏ-வாக்கியதோடு, சபாநாயகர் பதவியும் கொடுத்து அழகு பார்த்தார் கருணாநிதி.

பின்னர் 1991-ம் ஆண்டுத் தேர்தலில் மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஆனாலும், 1996-ம் தேர்தலில் மீண்டும் இளையான்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார் கருணாநிதி. வெற்றிபெற்ற அவரை தமிழ் ஆட்சிமொழி, தமிழ் பண்பாட்டுத்துறை மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சராக நியமித்தார்.

இந்தநிலையில், 2001 சட்டசபைத் தேர்தலில் தமிழ்க்குடிமகனுக்கு சட்டசபைத் தேர்தலில் இளையான்குடி தொகுதி ஒதுக்கப்படவில்லை. அந்தத் தொகுதியைத் தனது கூட்டணிக் கட்சியான மக்கள் தமிழ்தேசம் கட்சிக்கு ஒதுக்கியது திமுக. இதனால் கொதிப்படைந்த தமிழ்க்குடிமகன் அதிருப்தி அடைந்தார். அவரை சென்னைக்கு வரவழைத்த கருணாநிதி, அவருக்கு வேறு தொகுதி அல்லது திமுக ஆட்சிக்கு வந்தால் அமைச்சர் பதவிக்கு இணையான பதவி தருவதாகக் கூறினார். ஆனால், அதை ஏற்க மறுத்த தமிழ்க்குடிமகன், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, திமுகவிலிருந்தும் விலகிவிட்டார். பின்னர் உடனடியாக போயஸ் தோட்டம் சென்ற அவர், ஜெயலலிதாவைச் சந்தித்து, அதிமுக-வில் தன்னை இணைத்துக்கொண்டார். இது கருணாநிதிக்கு மட்டுமல்லாமல், திமுக தொண்டர்களிடையேயும் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியது.

பரிதி இளம்வழுதி
பரிதி இளம்வழுதி

பெயரைக் கெடுத்துக்கொண்ட பரிதி இளம்வழுதி

தமிழ்க்குடிமகனைப் போன்றே கருணாநிதியின் தீவிர விசுவாசியாக இருந்து, பின்னர் அதிமுகவுக்கு மாறி அதிர்ச்சியைக் கொடுத்த அடுத்த முக்கியப் புள்ளி என்றால், பரிதி இளம்வழுதியைக் குறிப்பிடலாம்.

தீவிர திராவிடப் பற்றாளரும், சென்னை திமுக-வின் தளகர்த்தாவாகவும் இருந்த, பிரபல பேச்சாளர் இளம்வழுதியின் மகன்தான் பரிதி இளம்வழுதி. இளம் வயது முதலே, தந்தையைப் போன்றே திமுக மேடைப் பேச்சாளராக வலம்வந்தவர். ஒருமுறை இவரது பேச்சைக் கேட்ட கருணாநிதி, பெயர் என்னவெனக் கேட்க 'காந்தி' என்றார். அந்தப் பெயரை பரிதி இளம்வழுதி என மாற்றியவர் கருணாநிதிதான். அதன் பின்பே காந்தி என்ற அவரது பெயர் பரிதி இளம்வழுதி என ஆனது. திமுக-வின் இளைஞர் அணியில் இணைந்து பணியாற்றியதால் ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்தார். 1985-ல் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வின் சத்தியவாணி முத்துவை எதிர்த்து பெரம்பூர் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் 1989 தேர்தலிலும் வெற்றி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1991-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், சுயேச்சை வேட்பாளர் மரணத்தால் எழும்பூர் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, மற்ற தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலுக்கு முன்னர், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையால் ஏற்பட்ட காங்கிரஸ் - அதிமுக கூட்டணிக்கு ஏற்பட்ட அனுதாப அலையால், திமுக படுதோல்வி அடைந்தது. துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி மட்டுமே வெற்றிபெற்றார். ஆனாலும், அவர் சட்டசபைக்குச் சென்றால் அவமானப்படுத்தப்படுவோம் எனக் கருதி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இந்தநிலையில், ஒத்திவைக்கப்பட்ட எழும்பூர் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட பரிதி இளம்வழுதி, ஒற்றை ஆளாக சட்டபைக்குச் சென்று, திமுக-வின் குரலை ஒலிக்கச் செய்தார். அப்போது பரிதி இளம்வழுதியின் சட்டசபைப் பேச்சு அதிமுக-வுக்குப் பெரும் தலைவலியாக மாறும் அளவுக்கு இருந்ததால், தமிழகம் முழுவதும் கவனம் ஈர்த்தார்.

ராஜீவ் காந்தி
ராஜீவ் காந்தி

1991-ல் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, அதிமுக உறுப்பினர்களால் தாக்கப்பட்டு அவரின் வேட்டி, சட்டை உருவப்பட்டு உள்ளாடைகளோடு சட்டமன்றத்தைவிட்டுத் தூக்கி வெளியே வீசப்பட்டார் பரிதி. அன்றிலிருந்து தனது உடையை மாற்றி, கறுப்பு பேன்ட், வெள்ளை சட்டை அணிந்து அவர் சட்டசபைக்கு வந்தது தனிக்கவனம் பெற்றது. சட்டசபையில், அவரது வாதத் திறமையை பார்த்து, ``பரிதியை அபிமன்யூ எனத் தனது கட்டுரையில் வர்ணித்து புகழாராம் சூட்டினார் கருணாநிதி.

இதன் பலனாக 1996 தேர்தல் திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்தபோது, பரிதியை சட்டமன்றத் துணை சபாநாயகராக்கினார் கருணாநிதி. மேலும், திமுக-வில் மாவட்டச் செயலாளர், துணை பொதுச்செயலாளர் பதவியும் அவருக்குக் கிடைத்தன.

2006-ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது, அவரை அமைச்சராக்கினார் கருணாநிதி. ஆனால், பின்னர் ஸ்டாலினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2013-ல் திமுகவிலிருந்து விலகி அதிமுக-வுக்குத் தாவினார்.``எந்த ஜெயலலிதாவை எதிர்த்து சட்டசபையில் ஹீரோவாக வலம்வந்தாரோ, அவரிடமே சரணடைந்து விட்டாரே..." என்ற விமர்சனங்களுடன், அவரது அரசியல் புகழ் அப்போதிருந்தே மங்கத் தொடங்கி, பின்னர் அவரே மறைந்தும் போனார்.

பாதியிலேயே கழன்றுகொண்ட வழக்கறிஞர் ஜோதி

1991 - 1996-ம் ஆண்டு வரையிலான ஜெயலலிதா ஆட்சி முடிவடைந்ததும், அடுத்து வந்த திமுக ஆட்சியில், அவர் மீது சுடுகாட்டுக் கூரை, கலர் டி.வி., செருப்பு, டான்சி, பிளசன்ட் ஸ்டே ஹோட்டல், நிலக்கரி இறக்குமதி, டிட்கோ-ஸ்பிக் பங்குகள், பிறந்தநாள் பரிசுகள், வருமான வரிக் கணக்கு, சொத்துக்குவிப்பு வழக்கு என வரிசையாக வழக்குகள் பாய்ந்தன.

ஒவ்வொரு வழக்கும் ஜெயலலிதாவுக்கு நெருக்கடியைக் கொடுத்து வந்தபோதிலும், டான்சி வழக்கு அவருக்கு ரொம்பவே அச்சுறுத்தலாக அமைந்தது. இந்தநிலையில்தான், வழக்குகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசிப்பதற்காக தனது போயஸ் கார்டன் இல்லத்தில் வழக்கறிஞர்களை வரவழைத்திருந்தார் ஜெயலலிதா. முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியனின் ஏற்பாட்டின் பேரில்தான் வழக்கறிஞர்கள் வந்திருந்தனர். ஒவ்வொரு வழக்கறிஞரும், எந்த வழக்கை எடுத்துத் தங்களால் நடத்த முடியும் என்பது குறித்து ஜெயலலிதாவிடம் விளக்கினர். அப்போது வழக்கறிஞர் ஜோதி என்பவர், தன்னால் டான்சி வழக்கை எடுத்து நடத்தி, அதில் சாதகமான தீர்ப்பைப் பெற்றுத்தர முடியும் என்றும் கூறியதைக் கேட்டு ஜெயலலிதாவின் புருவம் உயர்ந்தது.

வழக்கறிஞர் ஜோதி
வழக்கறிஞர் ஜோதி

``எப்படிச் சாத்தியம்..?" என ஜெயலலிதா கேட்டபோது, கையிலிருந்த தடிமான சட்டப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த சில வழக்குகளின் தீர்ப்பை மேற்கோள் காட்டி, அரசின் நன்னடத்தை விதிக்கும், சட்டத்துக்கும் இடையேக் வித்தியாசம் இருப்பதாக கூறினார். அவரது அந்த விளக்கம் ஜெயலலிதாவை ரொம்பவே ஈர்த்ததில், அவரது நம்பிக்கைக்குரிய வழக்கறிஞரானார் ஜோதி. அதிமுக சம்பந்தப்பட்ட வழக்குகள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும், அதிமுக பிரமுகர்களும் சம்பந்தப்பட்ட வழக்குகள், ஜெயலலிதாவின் தனிப்பட்ட வழக்குகள், ஜெயலலிதாவைச் சார்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் என 113 வழக்குகளை அவரை நம்பி ஒப்படைத்தார் ஜெயலலிதா. கூடவே அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்.பி-யாகவும் டெல்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டார் ஜோதி.

இந்தநிலையில், சொத்துக்குவிப்பு வழக்கையும் டி.டி.வி.தினகரன் சம்பந்தப்பட்ட லண்டன் ஹோட்டல் வழக்கையும் ஒன்றாகச் சேர்த்து விசாரிக்கச் சொன்னார் ஜோதி. இதற்கு ஜெயலலிதாவும் சம்மதம் தெரிவித்த நிலையில், அப்படி ஒன்றாக விசாரித்தால் தனக்குச் சிக்கல் என்பதை உணர்ந்த டி.டி.வி.தினகரன், ஜோதியை கடிந்துகொண்டதாகச் சொல்லப்பட்டது. அப்போது ஏற்பட்ட அந்த மோதலின் பின்விளைவோ என்னவோ, 12 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக வழக்கறிஞராகப் பணியாற்றிவந்த ஜோதி, 2008-ம் ஆண்டு, மார்ச் மாதம் திடீரென அதிமுக மற்றும் ஜெயலலிதா சம்பந்தப்பட்ட வழக்குகள் அனைத்திலிருந்தும் விலகுவதாக அறிவித்து, வழக்குகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களையும், கேஸ் கட்டுகளையும் பெற்றுக்கொள்ளுமாறும் ஜெயலலிதாவுக்கு கடிதம் அனுப்பினார். அவருக்கு மீண்டும் ராஜ்யசபா எம்.பி பதவி கொடுக்காததே விலகலுக்கு முக்கியக் காரணம் என அப்போது சொல்லப்பட்டது.

ஜோதி விலகலால் அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா, `நம்பிக்கைத் துரோகி’ என்று வர்ணித்து, ஜோதியைக் கடுமையாகச் சாடி அறிக்கைவிட்டார். அவரைக் கட்சியைவிட்டும் நீக்கினார். இதையடுத்து ஜோதி, திமுக-வில் இணைந்தார். ஆனாலும், அவரால் அங்கு நீண்ட நாள்கள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டார்.

இரண்டு தேர்தல்களும் இடியாக வந்த சோதனைகளும்... சாகும் வரை சாதித்த ஜெயலலிதா! அரசியல் அப்போ அப்படி-8

வைகோவுக்கு அதிர்ச்சி கொடுத்த நாஞ்சில் சம்பத்

அரசியலில் கட்சித்தாவல் என்பது சாதாரணம்தான் என்றாலும், நாஞ்சில் சம்பத்தின் கட்சித் தாவல்கள் சமூக வலைதளங்களில் மிகவும் கேலிக்குரியதாக பேசப்பட்டன. எந்தக் கட்சியில் இருந்தாலும் அந்தக் கட்சியின் 'பிரசார பீரங்கி' என்று சொல்லும் அளவுக்குச் சிறந்த மேடை பேச்சாளராகத் திகழ்ந்தவர் சம்பத். தீவிர திமுக ஆதரவு குடும்பத்தில் பிறந்த அவர், பெரியார் மற்றும் அண்ணா மீதான ஈர்ப்பினால் இளம் வயதிலேயே திமுக-வில் சேர்ந்து, அந்தக் கட்சியின் முக்கியப் பேச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அன்னைத் தமிழ் அவரது நாவில் நர்த்தனமாடும். ``நகம் நனையாமல் நத்தை எடுக்க நினைக்கிறார்கள்..."

நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத்

என எதிராளியையும் ரசிக்கவைக்கும் அளவுக்கு உவமை வார்த்தைகளை எதுகை மோனையுடன் பேசி, சொற் சிலம்பம் ஆடுவதில் வல்லவர் நாஞ்சில் சம்பத். கருணாநிதிக்கும் வைகோவுக்கும் இடையே உண்டான விரிசல் காரணமாக வைகோ திமுக-விலிருந்து வெளியேற, அவருடன் சேர்ந்து நாஞ்சில் சம்பத்தும் திமுக-விலிருந்து வெளியேறினார். அவர் சார்ந்திருக்கும் அரசியல் கட்சி நடத்திய மாநாடுகளில், நாஞ்சில் சம்பத் பேசுகிறார் என்றால், அதை ரசிப்பதற்கென்றே பெரும் ரசிகர் கூட்டம் இருக்கும். தலைவர்களுமே அவரது பேச்சுகளை ரொம்பவே ரசிப்பார்கள். அதிலும், மதிமுக மேடைகளில் அக்கட்சியின்கொள்கைபரப்புச் செயலாளராக, வைகோ போன்ற மேனரிசத்துடன் தோளில் கிடக்கும் துண்டை கையில் பிடித்தபடியே, அவர் ஆற்றும் எழுச்சிமிக்க உரைக்கு கைதட்டல் விண்ணைப் பிளக்கும்.

ஜெயலலிதா நாஞ்சில் சம்பத் சந்திப்பு
ஜெயலலிதா நாஞ்சில் சம்பத் சந்திப்பு

அதனால் கிடைத்த புகழ் வெளிச்சத்தில் ரொம்பவே மயங்கிப்போன சம்பத், ஒருகட்டத்தில் மதிமுக-வில் தன்னை வைகோவுக்கு இணையாக கருதிக்கொண்டு வலம்வரத் தொடங்கிய நிலையில்தான், 2012-ம் ஆண்டு, டிசம்பர் மாதம், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அவரது கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இது வைகோவுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.

வைகோவின் செயல்பாடுகள் குறித்தே, கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்களிடத்தில் 'கமென்ட்' அடித்ததாகவும், இது வைகோவின் காதுக்குப் போய், அதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட உரசல் சுமார் ஆறு மாத காலத்துக்கு நீடித்த நிலையில்தான், அதிமுக-வில் ஐக்கியமானார் சம்பத் என்றும் சொல்லப்படுகிறது. பின்னர் அமமுக-வில் இணைந்து, தற்போது அதிலிருந்தும் விலகி அரசியலிலிருந்தே ஒதுங்கிவிட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு