Published:Updated:

யார்? - புல்லுருவி... கருங்காலி... முதல்வர் வேட்பாளர்... சூத்ரதாரி

‘தமிழக அமைச்சரவையில் ஹெச்.ராஜா இடம்பெறுவார்’ என்று குதர்க்கமாகப் பேசுகிறார்கள்.

பிரீமியம் ஸ்டோரி

அ.தி.மு.க ஆட்சி முடிவடைய இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றன. ஆட்சிக்கேனும் குறைந்தபட்சம் நான்கு மாதங்கள் உத்தரவாதம் இருக்கிறது. ஆனால், ஆட்சியை வழிநடத்தும் கட்சிக்கு அந்த உத்தரவாதமும் கேள்விக்குறியாகியிருக்கிறது. ஏற்கெனவே முடிவெடுக்கப்பட்ட ‘முதல்வர் வேட்பாளர்’ பொறுப்பையே ஆளாளுக்கு ஏலம்விட... இன்னொரு பக்கம் கட்சிக்கு உள்ளிருந்தும் வெளியேயிருந்தும் வரும் அச்சுறுத்தல்களால் அ.தி.மு.க-வின் முக்கியத் தலைவர்களே ‘கருங்காலிகள்’, ‘புல்லுருவிகள்’ என்றெல்லாம் பா.ஜ.க உள்ளிட்ட தரப்பினரை மனதில்வைத்து வசைபாடிவருகிறார்கள். “வரும் டிசம்பர் 31-ம் தேதி ரஜினியின் அரசியல் கட்சி தேதி அறிவிப்பு முடிவுக்குப் பிறகு இந்தக் காட்சிகள் இன்னும் மோசமாகும்” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

கடந்த 27.12.2020 தேதியிட்ட ஜூ.வி-யில் ‘டெல்லி கோடரி... துண்டாகும் அ.தி.மு.க? எடப்பாடியை மிரட்டிய பன்னீர்!’ என்ற தலைப்பிலான கவர் ஸ்டோரியில் ‘சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இரட்டை இலைச் சின்னத்தை முடக்க பா.ஜ.க தயாராகிவிட்டது’ என்று குறிப்பிட்டிருந்தோம். இதழ் வெளியான மூன்றாவது நாளே டிசம்பர் 26-ம் தேதி விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ‘‘எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இல்லாமல் பொதுத்தேர்தலைச் சந்திக்கப்போகிறோம். எம்.ஜி.ஆரின் வாரிசு இரட்டை இலைதான். அந்தச் சின்னத்தை முடக்க சிலர் சதித்திட்டம் தீட்டிவருகிறார்கள். இந்தத் தேர்தலில் நமக்கு வாழ்வா, சாவா என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதில் நாம் வெற்றிபெற்றேயாக வேண்டும். சில தலைவர்கள் வேண்டுமானால் நம் கட்சிக்கு துரோகம் செய்திருக்கலாம். தொண்டர்கள் யாரும் கட்சிக்கு துரோகம் செய்ய மாட்டார்கள்’’ என்று பகிரங்கமாக வெடித்தார்.

யார்? - புல்லுருவி... கருங்காலி... முதல்வர் வேட்பாளர்... சூத்ரதாரி

அமைச்சரின் இந்தப் பேச்சை அவ்வளவு எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாது. சண்முகத்துக்கு நெருக்கமானவர்களிடம் இது குறித்துப் பேசியபோது, ‘‘அம்மா இருந்தபோதே அதிரடிக்குப் பெயர் பெற்றவர் சண்முகம். அவர் எடப்பாடி அணி, பன்னீர் அணி என்றெல்லாம் பார்ப்பதில்லை. கட்சியின் தீவிர விசுவாசி அவர். அந்த ஆதங்கத்தில்தான் இப்போது வெடித்திருக்கிறார். அ.தி.மு.க-விலிருந்து ஒரு டீமை வெளியே கொண்டுவந்து, ரஜினியுடன் இணைக்கும் திட்டத்தில் பா.ஜ.க இருக்கிறது. அதற்கு முன்பாக இரட்டை இலையை முடக்கவும் திட்டமிடுகிறார்கள். இரட்டை இலைச் சின்னம் குறித்து டெல்லியில் நடந்துவரும் வழக்கில்,

அ.தி.மு.க தொடர்பான சட்ட நடவடிக்கைகளை முன்னின்று மேற்கொள்பவர் சண்முகம். இப்போது அந்த வழக்குக்குச் சிலர் உயிரூட்ட ஆரம்பித்திருக்கும் தகவல்கள் சண்முகத்தை எட்டியிருக்கின்றன. இதையடுத்துதான், அவர் இப்படிக் கொந்தளித்திருக்கிறார்’’ என்றார்கள்.

யார் கருங்காலி?

கடந்த டிசம்பர் 27-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் நடந்த அ.தி.மு.க-வின் முதல் பிரசாரக் கூட்டத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அணுகுண்டு ரகம். ‘‘கடந்த 50 ஆண்டுகளாக திராவிட இயக்கங்கள் தேசியக் கட்சிகளைத் தமிழகத்துக்குள் நுழையவிடவில்லை. இப்போது, சிலர் கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு உள்ளே நுழையப் பார்க்கிறார்கள். சில கருங்காலிகள், `திராவிட இயக்க ஆட்சியில் தமிழகத்தைச் சீரழித்துவிட்டோம்’ என்கிறார்கள். பெரியார் காலத்திலிருந்து திராவிடத்தை அழிக்க வேண்டும் என்று ஒரு சமூகம் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. தேசியக் கட்சியாக இருந்தாலும், மாநிலக் கட்சியாக இருந்தாலும் அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி; ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை’’ என்று ஜார்ஜ் கோட்டை அருகே அவர் வெடித்த பட்டாசு சத்தம் செங்கோட்டை வரை எதிரொலித்தது.

யார்? - புல்லுருவி... கருங்காலி... முதல்வர் வேட்பாளர்... சூத்ரதாரி

அதனால்தான், அன்றைய தினம் மாலையே விழுப்புரத்தில் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன், “தமிழகத்தில் வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும்’’ என்றார் அழுத்தமாக. அதாவது, ‘அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி’ என்கிற முனுசாமியின் முழக்கத்தை முளையிலேயே கிள்ளியெறியும் வகையில் அதை மறுத்திருக்கிறார் முருகன். அதேசமயம், முனுசாமிக்குப் பிறகு பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் அவரது பேச்சுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.

முனுசாமி பேசியதின் பின்னணி என்ன? அவருக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம். “கட்சித் தலைமையின் ஒப்புதலுடன்தான் முனுசாமி அப்படிப் பேசினார். ‘பா.ஜ.க ஆளுங்க எல்லைமீறிப் போறாங்க. நாம அதைக் கண்டிச்சே ஆகணும். நீங்க பேசாம இருங்க தலைவரே... நான் மேடையில சில விஷயங்களைப் பேசிக்கிறேன், அதுக்கு நீங்க எந்த ரியாக்‌ஷனும் காட்ட வேணாம்’ என்று எடப்பாடி தரப்பில் முனுசாமி அண்ணன் முன்கூட்டியே சொல்லிச் சம்மதம் வாங்கிவிட்டார். கூட்டணி தர்மங்களை எப்போதோ மீறிவிட்டது பா.ஜ.க. அமித் ஷா முன்னிலையில் நாங்கள் கூட்டணியை அறிவித்த பிறகும், ‘முதல்வர் வேட்பாளர் குறித்து டெல்லி தலைமை முடிவெடுக்கும்’ என்கிறார்கள். ‘தமிழக அமைச்சரவையில் ஹெச்.ராஜா இடம்பெறுவார்’ என்று குதர்க்கமாகப் பேசுகிறார்கள்.

யார்? - புல்லுருவி... கருங்காலி... முதல்வர் வேட்பாளர்... சூத்ரதாரி

பொதுக்கூட்டத்தில் ‘தேசியக் கட்சி’ என்று முனுசாமி குறிப்பிட்டது பா.ஜ.க-வைத்தான் என்பது அனைவருக்குமே தெரியும். ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்புக்குப் பிறகு, அ.தி.மு.க தரப்பிலுள்ள முக்கியஸ்தர்களைக் குறிவைத்து காய்நகர்த்திவருகிறது ஆடிட்டர் குருமூர்த்தி தரப்பு. ‘தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க-விடம் இரட்டை இலைச் சின்னம் இருக்காது. கூட்டணியில் பா.ஜ.க-தான் சீட்களை முடிவு செய்யும்’ என்றெல்லாம் சொல்லிவந்திருக்கிறது. இதற்கான ஆத்திரத்தைத்தான் மேடையில் கொட்டினார் முனுசாமி’’ என்றார்கள் அவர்கள்.

புல்லுருவி யார்?

முனுசாமிக்குப் பிறகு பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘‘ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சில புல்லுருவிகள் இந்த இயக்கத்தை உடைக்க நினைத்தார்கள். அதைத் தவிடு பொடியாக்கினோம்’’ என்றார். இது பற்றிப் பேசும் அரசியல் பார்வையாளர்கள், “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் ஏற்பட்ட பிளவுக்குக் காரணம் பன்னீர்செல்வம். அவரைப் பின்னாலிருந்து இயக்கியது ஆடிட்டர் குருமூர்த்திதான் என்று ஆடிட்டர் தரப்பே பின்னாளில் ஒப்புக்கொண்டிருக்கிறது. இதனால், ‘புல்லுருவிகள் என்று முதல்வர் சொன்னது பன்னீரையா, குருமூர்த்தியையா?’ என்ற விவாதம் கட்சிக்குள் எழுந்திருக்கிறது. ‘அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி’ என்று கடந்த அக்டோபர் மாதமே அறிவித்த பிறகும், அதை இதுவரை பா.ஜ.க ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதற்குக் காரணம், பா.ஜ.க தரப்பிடம் பன்னீர் கொடுத்த சில உறுதிமொழிகள்தான்” என்றார்கள். இதையெல்லாம் உறுதிப்படுத்துவது போலவே மேடையிலும், ‘‘மத்திய அரசோடு இணக்கமாகச் சென்றால்தான் மத்திய அரசின் திட்டங்களைப் பெற முடியும்” என்று பா.ஜ.க மீதான பாசத்தை வெளிப்படுத்தினார் பன்னீர்.

யார்? - புல்லுருவி... கருங்காலி... முதல்வர் வேட்பாளர்... சூத்ரதாரி

முதல்வர் வேட்பாளர் யார்?

இவ்வளவு களேபரங்களுக்கு இடையில் முதல்வர் வேட்பாளர் பொறுப்பை இன்னும் இறுதி செய்யவில்லை பா.ஜ.க. இது குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க நிர்வாகிகள் சிலர், “ஆரம்பத்தில் தமிழகத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியபோதே தமிழகத்துக்கான முகமாக நிர்மலா சீதாராமனை முன்னிறுத்தத் திட்டமிட்டது பா.ஜ.க. மீண்டும் அந்தத் திட்டத்தை கையிலெடுத்திருக்கிறது டெல்லி. மேற்கண்ட அனைத்து அரசியல் ராஜதந்திரங்களுக்கும் சூத்ரதாரியாக செயல்படுகிறார் அமித் ஷா. கடந்த முறை அவர் சென்னை வந்தபோதே தமிழகத்தில் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய தோராயமான ஒரு ஸ்கிரிப்ட் அவர் கைவசம் இருந்தது. அதை இன்னும் மெருகூட்டி, தமிழகத் தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி, தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், மாநிலத் தலைவர் எல்.முருகன் ஆகியோர் மூலம் செயல்படுத்திவருகிறது பா.ஜ.க தலைமை.

இதன் ஒரு பகுதியாகத்தான் அ.தி.மு.க தலைமைமீது அதிருப்தியில் உள்ளவர்களை ஆடிட்டர் தரப்பினர் சந்தித்துப் பேசிவருகின்றனர். அவர்களிடம், ‘பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ரஜினியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தினால், வரும் தேர்தலில் தி.மு.க தோற்றுவிடும். குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே ரஜினி முதல்வராக இருப்பார். அதன் பிறகு பா.ஜ.க சொல்லும் நபரே முதல்வராக அரியணை ஏறுவார். இதற்கு நீங்கள் ஒத்துழைத்தால், உங்களுக்கு முக்கியமான பொறுப்பு கிடைக்கும்’ என்று தூண்டில் போட்டுவருகிறது ஆடிட்டர் தரப்பு. ரஜினிக்கும் இதே தகவல் பாஸ் செய்யப்பட்டது.

யார்? - புல்லுருவி... கருங்காலி... முதல்வர் வேட்பாளர்... சூத்ரதாரி

அதன்படி, ரஜினியைக் குறிப்பிட்ட காலம் முதல்வராக அமரவைத்துவிட்டு, அதன் பிறகு நிர்மலாவை அந்தப் பதவிக்குக் கொண்டுவரும் திட்டமிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு பன்னீர் சம்பந்தமே இல்லாமல், ‘ஓர் அரசின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் என இருக்கும் நிலையில் ஏன் இரண்டரை ஆண்டுகள் ஆணும், இரண்டரை ஆண்டுகள் பெண்ணும் ஆளக் கூடாது?’ என்றொரு கருத்தைத் தெரிவித்தார். அப்போது ‘எதற்காக இப்படியெல்லாம் பன்னீர் பேசுகிறார்?’ என்று பலரும் குழப்பத்துடன் கேள்வியெழுப்பினார்கள். அதற்கான விடைதான், நிர்மலாவுக்கான முதல்வர் வேட்பாளர் பொறுப்பு. இந்த விஷயம், அப்போதே பன்னீருக்கும் தெரியும்” என்றார்கள் விரிவாக!

எடப்பாடி மூவ் என்ன?

இதற்கிடையே, டிசம்பர் 28-ம் தேதி கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, ‘தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதுவே அ.தி.மு.க-வின் நிலைப்பாடு’ என்று அழுத்தமாக எல்லோருக்கும் செய்தி சொல்லியிருக்கிறார். ஜனவரி 9-ம் தேதி

அ.தி.மு.க பொதுக்குழு நடக்கிறது. இதில் தனது செல்வாக்கை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதற்காகக் கட்சியின் விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்படவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் எடப்பாடியின் ஆதரவாளர்கள். இது பற்றி நம்மிடம் பேசியவர்கள், “தனது உட்கட்சி மற்றும் வெளிக்கட்சி எதிரிகளுக்குச் சவால்விடுவதற்காகவே ‘எம்.ஜி.ஆரின் கட்சி இது. எம்.ஜி.ஆரின் வாரிசு இரட்டை இலை’ என்று மேடையில் முழங்கினார் எடப்பாடி. பா.ஜ.க தங்களுக்கு எதிராக எந்த அஸ்திரத்தை ஏவினாலும், தொண்டர்கள் படையோடு அதைச் சமாளிக்க முடியும் என்று நம்புகிறார் எடப்பாடி. அதேசமயம், சொந்தக் கட்சியைவிட பா.ஜ.க-வுக்கு விசுவாசமாக இருக்கிறார் பன்னீர். இதனால், பன்னீர் மீது தொண்டர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். எனவே, மொத்த தொண்டர்களின் ஆதரவையும் பெற்றுவிடலாம் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார் எடப்பாடி” என்றார்கள்.

இன்னொரு பக்கம் பா.ஜ.க., இரட்டை இலைச் சின்னத்தை முடக்கும் சட்ட ஆலோசனைகளைத் தீவிரப்படுத்திக்கொண்டே, ஜனவரி முதல் வாரத்துக்குப் பிறகு தனது ரெய்டு அஸ்திரங்களையும் அதிகப்படுத்தவிருக்கிறது என்கிறார்கள் டெல்லியின் மூத்த பத்திரிகையாளர்கள் சிலர். நம்மிடம் பேசிய அவர்கள், “எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள்மீதும், மூத்த அமைச்சர்களுக்கு நெருக்கமான நபர்கள்மீதும் நடத்தப்படும் இந்தத் தாக்குதலால் எடப்பாடி தரப்பு நிலைகுலைந்து போகும். அதற்குப் பிறகு அ.தி.மு.க-வைத் தங்கள் வழிக்குக் கொண்டுவரலாம் அல்லது பன்னீர் தலைமையில் அ.தி.மு.க அணியை உருவாக்கலாம் என்று பா.ஜ.க திட்டமிட்டிருக்கிறது. ஒருவேளை ரஜினி கட்சியை அறிவித்துவிட்டால், பன்னீர் அணியை ரஜினியுடன் கூட்டணி சேர்க்க வைத்துக் களமிறக்கலாம்” என்றார்கள்.

கூட்டணியில் யார்?

அ.தி.மு.க கூட்டணியில் இப்போது பா.ஜ.க., பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் இருப்பதாக அந்தக் கட்சியினர் சொல்கிறார்கள். ஆனால், அ.தி.மு.க-வின் தேர்தல் பிரசார மேடையில் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கவில்லை. இது குறித்துப் பேசிய அ.தி.மு.க நிர்வாகிகள், ‘‘அமைச்சர்கள் அன்பழகன், தங்கமணி ஆகியோர் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வீட்டுக்கு நேரில் சென்று பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்தனர். ராமதாஸ் தரப்பிலோ, ‘எங்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் டிசம்பர் 31-ம் தேதி நடக்கவிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பற்றி ஆலோசனை செய்த பிறகே கூட்டணி குறித்துச் சொல்கிறோம்’ என்று சொல்லி விட்டார்கள். தொடர்ந்து, பா.ஜ.க தலைவர்களை மேடையேற்றலாம் என்று நினைத்து, டெல்லி தரப்பில் பேசியபோது அவர்களும் பிடிகொடுக்கவில்லை. இரண்டு கட்சிகளும் வர மறுத்த பிறகு, தே.மு.தி.க-வுக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என்று முதல்வரே சொல்லிவிட்டார்” என்றார்கள்!

அ.தி.மு.க என்ற வலிமையான கட்சியைக் கரைத்து, ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடத் தொடுக்கப்படும் தாக்குதலாகவே இதை எம்.ஜி.ஆரின் தொண்டர்கள் பார்க்கிறார்கள். டெல்லிக் கணக்கு இங்கு செல்லுபடியாகுமா என்பது தேர்தல் முடிவுகளில்தான் தெரியும்.

*******

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாறிய சூழல்

இந்தக் கட்டுரை அச்சேறிய 28-12-2020 அன்று இரவு வரை, ரஜினி கட்சி தொடங்குவது நிச்சயமான ஒன்றாகவே இருந்தது. அந்தச் சூழலில் பேசப்பட்ட அரசியல் நிலவரங்களையே நாம் கவர் ஸ்டோரி ஆக்கியிருந்தோம். மறுநாள் காலையில், தன் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, 'கட்சி தொடங்கவில்லை' என ரஜினி ட்விட்டரில் தன் அறிவிப்பை வெளியிட்டார்.

கொரோனா இரண்டாம் அலை, நேரடியாகப் பிரசார பணிகளில் ஈடுபட முடியாத நிலை ஆகியவற்றோடு தனது உடல்நிலையைக் கருதியும், தன்னை நம்பியிருக்கும் மக்கள் மன்ற நிர்வாகிகளின் நிலையைக் கருதியும் ரஜினி எடுத்துள்ள இந்த முடிவை மதிக்க வேண்டும். எதிர்பாராத இந்தத் திருப்பத்தால், தமிழகத் தேர்தலுக்கான அரசியல் கணக்குகள் மாறக்கூடும். அப்போது, இந்தக் கட்டுரையில் பேசப்படும் பல விஷயங்கள் மாறுபடும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு