சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசை பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. பீகாரைச் சேர்ந்த 10 அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைத்துக்கொண்டு பிரதமர் மோடியைச் சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தியிருக்கிறார், பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.
கடந்த ஆண்டு, நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக இருந்தது. கொரோனா பெருந்தொற்று காரணமாக அந்தக் கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில், `சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்போவதில்லை’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கூறியது. அதற்கு பீகாரைச் சேர்ந்த கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. வளர்ச்சிப் பணிகளைச் சிறப்பாக முன்னெடுப்பதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்று நிதிஷ் குமார் உள்ளிட்ட தலைவர்கள் கூறினர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பீகார் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தநிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி உட்பட அந்த மாநிலத்தைச் சேர்ந்த 10 கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் மோடியைச் சந்தித்து, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். எந்தெந்தப் பிரிவினர் அரசின் திட்டங்களால் பலனடையாமல் இருக்கிறார்கள் என்பது சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம்தான் தெரியவரும். அதைத் தெரிந்துகொள்வது, வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர்கள் பிரதமரிடம் எடுத்துரைத்ததாக முதல்வர் கூறினார்.
தற்போது, சாரிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் வலியுறுத்தியிருக்கிறார். இந்தக் கோரிக்கைக்கு ஆதரவாகப் பல தலைவர்களும் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது என்ற நிலைப்பாட்டில் மத்திய பா.ஜ.க அரசு இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க-வின் மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்.
``சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கூறியிருக்கிறது. கல்விரீதியாகவும், சமூகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் எந்தெந்தச் சாதிகள் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன என்பதை அறிந்து இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. இட ஒதுக்கீடு வந்த பிறகு, யார் யார் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள் என்பதை மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்று வந்துவிட்டது.

இந்தநிலையில், சாதிரீதியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, குறிப்பிட்ட சில சாதிகளை சதவிகித அடிப்படையில் கொண்டுவரும்போது, அது சில பிரச்னைகளை உருவாக்கலாம். உதாரணமாக, குறிப்பிட்ட ஒரு சாதி, குறிப்பிட்ட ஓர் இடத்தில் அல்லது ஒரு மாவட்டத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கக்கூடும். ஆனால், அதே சாதி வேறொரு மாவட்டத்தில் பொருளாதாரரீதியாக, கல்விரீதியாக, சமூகரீதியாக முன்னேறியிருக்கலாம். அப்படியிருக்கும்போது, அதில் சிக்கல் வருகிறது.
இன்னும் தெளிவாகப் பார்க்க வேண்டுமென்றால், குறிப்பிட்ட ஒரு சமுதாயம் விருதுநகர் மாவட்டத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. அதே சமுதாயம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கல்விரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும், சமூகரீதியாகவும் முன்னேறியிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். கோயம்புத்தூரிலுள்ள அந்தச் சமுதாயம் மட்டுமே சாதிரீதியான இட ஒதுக்கீட்டால் பலம் பெற்றால்? இதை மட்டுமே காரணமாக நான் சொல்லவில்லை. இதுபோல பல்வேறு அம்சங்களையும் ஆராய வேண்டியிருக்கிறது. எனவே, சாதிரீதியான கணக்கெடுப்பு இப்போது வேண்டாம் என்று மத்திய அரசு நினைக்கிறது” என்றார் நாராயணன் திருப்பதி.
இது குறித்து திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளரான பேராசிரியர் சுப.வீரபாண்டியனிடம் பேசினோம்.
``1822-ம் ஆண்டு ஆளுநராக இருந்த மன்றோ, மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒன்றை எடுக்க வேண்டும் என்று பிரித்தானிய அரசுக்கு முதன்முதலில் எழுதினார். ‘நாம் இந்த நாட்டை ஆள்கிறோம். ஆனால், இந்த நாட்டின் மக்கள் பற்றி அறிந்திருக்கிறோமா என்று தெரியவில்லை. எனவே, இந்த நாட்டின் மக்கள் என்ன வழியினராக இருக்கிறார்கள், என்ன தொழில் செய்கிறார்கள், என்ன படித்திருக்கிறார்கள் என்று எல்லா அம்சங்கள் பற்றியும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’ அந்தக் கடிதத்தில் மன்றோ எழுதினார்.
ஆங்கிலத்தில் `சென்சஸ்’ என்று சொல்கிறோம். அது தவறான மொழிபெயர்ப்பு. அது வெறும் கணக்கெடுப்பு அல்ல. இப்போது நல்ல தமிழ்ச் சொல்லில், `குடிமதிப்பு’ என்று சொல்லப்படுகிறது. குடிமக்களை மதிப்பிடுவது. அப்படி மதிப்பிடுகிற பழக்கம், 1861-ல் தொடங்குவதாக இருந்தது. சிப்பாய் கலகத்தின் காரணமாக, அதை ஆங்கிலேயே அரசு தள்ளிப்போட்டு, 1871-ல்தான் முதன்முதலாக மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.

அப்போது, அந்தக் கணக்கெடுப்பு அதிகாரியாக இருந்த கார்டியஸ் என்பவர், `இங்கு ஒரு சிறு பகுதியினர் மட்டுமே அரசின் சலுகைகள் அனைத்தையும் அனுபவிப்பதுபோல இந்தக் கணக்கெடுப்பு சொல்கிறது. மேலும் ஆழமாக அது குறித்து விரிவுசெய்ய வேண்டும்’ என்று எழுதுகிறார். 1881-ம் ஆண்டு, 1891-ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் வெறும் நான்கு வர்ணங்களாக மட்டுமே மக்கள் பிரிக்கப்பட்டார்கள்... பிராமணர், வைசியர், சத்ரியர், சூத்திரர் என்று. பஞ்சமர்களை, `வர்ணத்துக்குள் வராதவர்கள்’ என்று குறிப்பிடுகிறார்கள்.
1901-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது அதிகாரியாக இருந்த பிரான்சிஸ் எழுதியுள்ள குறிப்பு முக்கியமானது. `இந்தியா என்கிற நாடு நம் நாட்டைப் போன்றது அல்ல. இங்கு அனைத்தையும் சாதி என்கிற அமைப்பே முடிவுசெய்கிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையில், பெயரில், உணவில், உடையில், இன்னும் சுருக்கமாகச் சொன்னால் வாழ்வின் ஒவ்வோர் அசைவிலும் சாதி இருக்கிறது. ஒவ்வோர் அசைவையும் சாதியே தீர்மானிக்கிறது. இந்தச் சாதி அடுக்கின் மேல் தளத்தில் இருக்கும் பிராமணர்கள் மூன்று சதவிகிதம் முதல் நான்கு சதவிகிதம் இருக்கிறார்கள். ஆனால், அவர்களே அரசுப் பதவிகளில் 80 சதவிகிதத்துக்கும் மேலாக வகிக்கிறார்கள். இது ஒரு சமத்துவமற்ற நிலையாக இருக்கிறது. இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் பயனாக, அது சரிசெய்யப்பட வேண்டும்’ என்று பிரான்சிஸ் எழுதுகிறார்.
அதன் அடிப்படையில்தான், இட ஒதுக்கீடு என்பது தொடங்கியது. 1921-வரை சாதிவாரி கணக்கெடுப்பாகவே சென்சஸ் இருந்தது. 1942-ல் இரண்டாம் உலகப்போர் காரணமாக கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை. அதன் பிறகு, இந்தியா விடுதலை பெற்ற பிறகு, 1951-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு தொடங்கி இன்றுவரை எடுக்கப்பட்ட எந்த கணக்கெடுப்பும் சாதிவாரி கணக்கெடுப்பாக இல்லை.
சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கும்போதுதான் உண்மையிலேயே ஒவ்வொரு சமூகத்தினரும் எவ்வளவு விழுக்காடு இருக்கிறார்கள் என்ற உண்மை தெரியவரும். அதுவரை ஒவ்வொருவரும் தங்கள் சாதியின் எண்ணிக்கையைக் கூட்டித்தான் சொல்வார்கள். சரியான எண்ணிக்கையை அறிந்துகொண்ட பிறகுதான் ஒரு சமநிலையைக் கொண்டுவருவதற்கான முயற்சியை மேற்கொள்ள முடியும்.

என் கருத்து என்னவென்றால், வகுப்புவாரி உரிமை. அதாவது, 100 விழுக்காடு இடங்களுமே வகுப்புவாரி அடிப்படையில் ஒதுக்கிக் கொடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு சாதிக்கும் இவ்வளவு என்பது நடைமுறை சாத்தியம் அற்றது. எனவே, 6,000-க்கும் மேற்பட்ட சாதிகள் இருக்கும் இந்த நாட்டில், அனைத்துச் சாதிகளையும் ஐந்தாறு தொகுப்புகளாகப் பிரிக்க வேண்டும். சமூக வாழ்நிலை, கல்வி, பொருளாதாரம் என்ற அடிப்படையில் இணையாக இருக்கும் சாதிகளை ஒருங்கிணைத்து ஐந்தாறு தொகுப்புகளாக உருவாக்கப்பட வேண்டும். அதன் பிறகு, குறிப்பிட்ட ஒரு தொகுப்பு 20 விழுக்காடு என்றால், அந்த தொகுப்புக்கு 19 விழுக்காடு ஒதுக்கப்பட வேண்டும். ஒரு விழுக்காட்டை எடுத்துவைத்துவிட வேண்டும். 20-க்கு ஒரு விழுக்காடு என்று எடுத்துவைத்தால், ஐந்து விழுக்காடு மீதமாகும். அந்த ஐந்து விழுக்காடு, மூன்று பிரிவினருக்கு வழங்கப்பட வேண்டும்.
அதாவது, சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்வோர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், திருநம்பியர், மிகவும் பேராற்றல் உடையவர்கள் ஆகியோருக்கு அந்த ஐந்து விழுக்காடு வழங்கப்பட வேண்டும். காலப்போக்கில், அந்த ஐந்து விழுக்காடு மிகுதியாகிக்கொண்டே வர வேண்டும். அதே நேரம், 95 விழுக்காடு குறைந்துகொண்டே வர வேண்டும். இப்படி ஒரு திட்டம்தான் ஒரு சமநிலை சமுதாயத்தை உருவாக்கும். இதற்கு நெடுங்காலம் ஆகலாம். ஆனால் இப்போது தொடக்கமாவது வர வேண்டும். தொடங்கவே இல்லையென்றால் அது ஒருநாளும் முடியாது.

அதற்கான முதல்படி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது. இது தொடர்பாக மத்திய அரசுக்குக் கூடுதல் அழுத்தம் வந்துகொண்டிருக்கிறது. இட ஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டில்தான் முதலில் தொடங்கியது. இன்றைக்கு இந்தியா முழுவதும் அந்தக் கோரிக்கை வலுப்பெற்றிருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும்” என்றார் சுப.வீரபாண்டியன்.