Published:Updated:

கெஜ்ரிவால் சென்னை விசிட்: ஸ்டாலின் இணக்கமும்... காங்கிரஸ் பார்வையும்! - ஓர் அலசல்

கெஜ்ரிவால் - ஸ்டாலின்

சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் நடந்த இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

கெஜ்ரிவால் சென்னை விசிட்: ஸ்டாலின் இணக்கமும்... காங்கிரஸ் பார்வையும்! - ஓர் அலசல்

சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் நடந்த இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

Published:Updated:
கெஜ்ரிவால் - ஸ்டாலின்

டெல்லியும் தமிழ்நாடும் ஒரே நேர்க்கோட்டில் வருவதென்பது சாதாரணமாக நடக்கும் விஷயமல்ல. ஆனால், செப்டம்பர் 5-ம் தேதி அந்த அதிசயம் நடந்தேறியிருக்கிறது. சென்னையில் நடைபெற்ற 'புதுமைப்பெண்' திட்டத் தொடக்கவிழாவில் பங்கேற்று, புதிய அரசியல் அத்தியாயத்துக்கு முன்னுரை எழுதியிருக்கிறார் டெல்லியின் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால். 'ஆட்சிரீதியாக மட்டுமே இந்த நிகழ்வு நடந்திருக்கிறது. இதில் அரசியல் ஏதுமில்லை' என தி.மு.க-வினர் சமூக வலைதளங்களில் விளக்கப் பதிவுகளை செய்தாலும், 'இரு கட்சியின் தலைவர்கள் சந்தித்துக் கொள்ளும்போது, அரசியல் பேசாமல் இருப்பதுகூட ஒரு அரசியல்தான்' என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு, மாதம்தோறும் உதவித்தொகையாக 1,000 ரூபாய் வழங்கும் 'புதுமைப் பெண்' திட்டத்தை, செப்டம்பர் 5-ம் தேதி தொடங்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின். சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் நடந்த இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றது பலரது கவனத்தையும் ஈர்த்தது. டெல்லி அரசுப் பள்ளிகள் மாடலில், 26 தகைசால் பள்ளிகள், 15 மாதிரி பள்ளிகள் தொடங்கிவைக்கப்பட்டன. விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "அரவிந்த் கெஜ்ரிவால் சிறந்த போராளி. அவர்மீது இன்று பலரது கவனமும் குவிந்திருக்கிறது. டெல்லியில் மட்டுமல்லாமல், பஞ்சாப்பிலும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது அவரது கட்சி. அவரை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்" என்று ஏகத்துக்கும் கெஜ்ரிவாலைப் புகழ்ந்தார். தன் பேச்சின்போது, பதில் புகழுரைக்கு அரவிந்த் கெஜ்ரிவாலும் தயங்கவில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"புதுமைப் பெண் திட்டம் புரட்சிக்கரமான திட்டம். கடந்த ஏப்ரல் மாதம், டெல்லி பள்ளிகளை முதல்வர் ஸ்டாலின் வந்து பார்த்தார். அதே மாடலில் பள்ளிகளை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டுமென்கிற விருப்பத்தையும் சொன்னார். அப்படி அமைப்பதற்கு மூன்றாண்டு காலமாகும் என நான் நினைத்திருந்தேன். ஆனால், ஆறே மாதத்தில் தகைசால் பள்ளிகள் கொண்டு வந்துவிட்டார் ஸ்டாலின்" என்று புகழ்ந்தார் அரவிந்த் கெஜ்ரிவால். திட்டங்களைத் தொடங்கிவைத்த கையோடு, கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கும் விசிட் செய்தார் கெஜ்ரிவால். அரசு முறை நிகழ்ச்சிகளில் மட்டுமே இரு தலைவர்களும் கலந்துகொண்ட நிலையில், பேசாத அரசியலும் ஒளிந்திருக்கிறது என்கிறார்கள் கதர்க் கட்சிக்காரர்கள்.

கெஜ்ரிவால் - ஸ்டாலின்
கெஜ்ரிவால் - ஸ்டாலின்

நம்மிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர், "டெல்லியில் பா.ஜ.க - ஆம் ஆத்மி கட்சி இடையேயான மோதல் வலுத்திருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், டெல்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாமீது மதுபான ஊழல் புகாரில் வழக்கு பதிந்திருக்கிறது சி.பி.ஐ. பதிலடியாக, குஜராத்தில் பா.ஜ.க-வுக்கு எதிரான பிரசாரத்தை ஆம் ஆத்மி கட்சி தீவிரப்படுத்தியிருக்கிறது. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக, தன்னை ஆம் ஆத்மி கட்சி முன்னிறுத்திக் கொள்ளும் நிலையில், அந்தக் கட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வேலையை தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஏன் செய்கிறார் என்பதுதான் கேள்வி.

'தி.மு.க கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கழற்றிவிடப்பட வேண்டும்' என்பதுதான் பா.ஜ.க-வின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதை நிறைவேற்றும் விதமாகத்தான் 'புதுமைப் பெண்' திட்ட தொடக்க நிகழ்வும் அமைந்திருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டதே காங்கிரஸ் எதிர்ப்பில்தான். அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசின் கொள்கைகளைத் தீவிரமாக எதிர்த்தார் கெஜ்ரிவால். 2013-ல் நடந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி அரியணையையும் பிடித்தார். காங்கிரஸ் எதிர்ப்பில் வளர்ந்த கெஜ்ரிவாலைத்தான், 'சிறந்த போராளி. போராடி வெற்றிப் பெற்றவர்' என புகழாரம் சூட்டுகிறார் ஸ்டாலின். யாரை எதிர்த்து கெஜ்ரிவால் போராடினார் என்பதை ஸ்டாலின் வேண்டுமானால் மறந்திருக்கலாம், ஆனால் காங்கிரஸ்காரர்கள் அதை மறக்கவில்லை. கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் முக்கியத்துவம் அளித்திருப்பது காங்கிரஸ் கட்சி தொண்டர்களை வெறுப்பேற்றியிருக்கிறது. இந்த வெறுப்பு, கூட்டணிக்குள் பிளவை ஏற்படுத்தினால், அதனால் லாபமடையப் போவது பா.ஜ.க தான். காங்கிரஸ் கட்சியைக் கழற்றிவிட்டுவிட்டு, ஆம் ஆத்மியுடன் கூட்டணிப் போட்டுக்கொண்டு 2024 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க தி.மு.க-வும் தயங்காது" என்றனர் சூடாக.

பினராயி விஜயன் - ஸ்டாலின்
பினராயி விஜயன் - ஸ்டாலின்

தி.மு.க தரப்பிலிருந்து நம்மிடம் பேசியவர்கள், "கெஜ்ரிவால் - ஸ்டாலின் நட்பு என்பது அரசு ரீதியிலானது. சமீபத்தில் கேரளா சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின், தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றார். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அந்த மாநில முதல்வர் பினராயி விஜயனுடன் நட்பு பாராட்டினார். கேரளாவில் கம்யூனிஸ்டுகளும் காங்கிரஸ் கட்சியினரும் எதிரும் புதிருமாக இருக்கிறார்கள். அதற்காக, அண்டை மாநில முதல்வருடன் ஸ்டாலினால் பேசாமல் இருக்க முடியுமா? இதைவைத்து, 'கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சியை ஸ்டாலின் கழற்றிவிடப் போகிறார்' என்பது எவ்வளவு அபத்தமோ, அதுபோலத்தான் கெஜ்ரிவாலை முன்னிறுத்தி செய்யப்படும் அரசியலும். 'இந்தக் கூட்டணி சிதைந்து போகாது' என்பதை முதல்வர் ஸ்டாலின் பலமுறை கூறியிருக்கிறார். அதை மீண்டும் மீண்டும் தெளிவுப்படுத்த வேண்டிய அவசியம் தி.மு.க-வுக்குக் கிடையாது" என்றனர்.

கெஜ்ரிவாலை முன்னிறுத்தி செய்யப்படும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பார்க்கிறது தி.மு.க. முற்றுப்புள்ளி விழுமா, அல்லது தொடருமா என்பது, தி.மு.க - காங்கிரஸ் உறவுநிலையில் தெரிந்துவிடும்.