Published:Updated:

30 ஆண்டு மோடி நட்பு முதல் எமர்ஜென்சி கைது வரை! - `அசைக்க முடியாத' அருண் ஜெட்லி

சத்யா கோபாலன்

பிரதமர் மோடியும் அருண் ஜெட்லியும் 30 வருட நண்பர்கள். அதனாலேயே மோடியின் அமைச்சரவையில் இவருக்கு மிக முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டன.

Arun Jaitley
Arun Jaitley

கண்டிப்பான முகம், கூர்மையான பார்வை, நிமிர்ந்த நடை, திறன்மிக்க சொற்பொழிவாளர், தன்னுடைய செயலால் அனைவரையும் அதிரவைக்கக்கூடியவர், இவை அனைத்துக்கும் சொந்தக்காரர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி.

Arun Jaitley
Arun Jaitley

1952-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி டெல்லியில் பிறந்தவர் அருண் ஜெட்லி. இவரின் தந்தையும் வழக்கறிஞர் என்பதால் இவரும் அதே துறையைத் தேர்வு செய்தார். 1973-ம் ஆண்டு பி.காம் முடித்தார். 1977-ம் ஆண்டு சட்டக்கல்வியை நிறைவு செய்தார். இவை இரண்டும் டெல்லி பல்கலைக்கழகத்திலேயே அவருடைய கல்லூரிக் காலம் நிறைவடைந்தது. கல்லூரியில் படித்த காலத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ் மற்றும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (Akhil Bharatiya Vidyarthi Parishad) ஆகிய அமைப்புகளில் உறுப்பினராக இருந்துள்ளார்.

இதையடுத்து 1974-ம் ஆண்டு நடந்த கல்லூரி தேர்தலில் வெற்றி பெற்று மாணவர் சங்கத்தின் தலைவரானார். 1975-ம் ஆண்டு இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சி நடவடிக்கையால் அரசியல் தலைவர்கள் பழிவாங்கப்பட்டனர். அரசின் முடிவை எதிர்த்துப் போராடினார் ஜெட்லி. இதற்காகக் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து 1980-ம் ஆண்டு பா.ஜ.க-வில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியலையும் வழக்கறிஞர் தொழிலையும் சமமாகக் கையாண்டு வந்தார். 1989-90-ம் ஆண்டுகளில் ஸ்வீடன் நாட்டு ஆயுத உற்பத்தி தொடர்பான ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார், அப்போது ஸ்வீடனில் பணியாற்றிய பல அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் இவர் மீது புகார் கூறப்பட்டது.

Arun Jaitley
Arun Jaitley

1991-ம் ஆண்டு முதல் பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்களில் ஒருவராகப் பார்க்கப்பட்டார். பின்னர் 1999-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வின் தேசிய செய்தித் தொடர்பாளராக சில மாதங்கள் பணியாற்றினார். அந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. அப்போது வாஜ்பாய் ஆட்சியில் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் அமைச்சரானார். பின்னர் 2000-ம் ஆண்டு குஜராத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், மத்திய சட்டத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அதன் பிறகு, 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினரானார். 2014-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட்டவர், காங்கிரஸின் அமரீந்தர் சிங்கிடம் தோற்றுப்போனார். ஆனாலும், அதே ஆண்டு குஜராத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016-ம் ஆண்டு மோடி அமைச்சரவையில் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து சில மாதங்கள் பாதுகாப்புத் துறையையும் கூடுதலாகக் கவனித்து வந்தார்.

Arun Jaitley
Arun Jaitley

இவர் நிதியமைச்சராக இருந்த காலத்தில்தான் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி போன்றவை கொண்டுவரப்பட்டன. இவர் நிதித்துறை அமைச்சராக இருந்த 5 ஆண்டுகளில் அந்தத் துறையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்தார். பிரதமர் மோடியும் அருண் ஜெட்லியும் 30 வருட நண்பர்கள். அதனாலேயே மோடியின் அமைச்சரவையில் இவருக்கு மிக முக்கிய பொறுப்புகள் அவருக்கு வழங்கப்பட்டன.

அருண் ஜெட்லி மத்திய அமைச்சராக இருந்தபோதே சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து, வெளிநாடுகளிலும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார். இதையடுத்து ஜெட்லி வகித்துவந்த நிதித்துறையை ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கூடுதலாகக் கவனித்துவந்தார்.

Arun Jaitley
Arun Jaitley

சிறுநீரக பிரச்னைக்காகத் தொடர் சிகிச்சையில் இருந்தவர், கடந்த சில வாரங்களாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 9-ம் தேதி உடல்நிலை மிகவும் மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று பிற்பகல் 12.07 மணிக்கு உயிரிழந்துவிட்டார்.