Published:Updated:

``நாம் தமிழர் சுவரொட்டியைத் தடுக்கவே 'சிங்கார சென்னை'த் திட்டம்!'' - சீமான் சொல்லும் விளக்கம்

சீமான்
சீமான்

``சாலைகளெல்லாம் சவக்குழிபோல கேடுகெட்டத்தனமாக இருக்கின்றனவே... அதெல்லாம் சிங்காரச் சென்னையில்தான் வருகின்றனவா... நெகிழி, குழைமம் சேர்ந்த குப்பைகளெல்லாம் மலைபோல் தேங்கிக் கிடக்கின்றனவே... இவையும்கூட சிங்காரச் சென்னையின் அழகில்தான் வருகின்றனவா?''- சீமான்.

திருச்சியில், `100 கோடி ரூபாய் செலவில் பெரியார் சிலை அமைக்க, தமிழக அரசு அனுமதி' என்ற செய்தியைத் தொடர்ந்து, தமிழக அரசியலிலும் சமூக வலைதளங்களிலும் பல்வேறு காரசார விமர்சனங்கள் கலந்துகட்டின.

`நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் தமிழக அரசு, இப்படி 100 கோடி ரூபாயை சிலைவைக்கச் செலவு செய்யலாமா' என்ற கரிசனத்தோடு பலரும் விமர்சித்தனர். `நாம் தமிழர் கட்சி'யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், இது குறித்துக் கடும் கோபத்துடன் கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தம்பிகளும், தி.மு.க ஆதரவாளர்களும் இணையம் வழியே வார்த்தைகளால் மோதிக்கொண்டனர். ஆனால், 100 கோடி ரூபாய் செலவில், திருச்சியில் பெரியார் சிலையை அமைக்கவிருப்பது `பெரியார் சுயமரியாதை பிரசார அறக்கட்டளை'தான் என்ற உண்மை தெரியவந்த பிறகு இந்தச் சர்ச்சைகளெல்லாம் அடங்கிவிட்டன. இந்த விவகாரங்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைச் சந்தித்துப் பேசினேன்...

பெரியார்
பெரியார்

''பெரியார் மேடைகளில் அரசியலைத் தொடங்கிய சீமான், தற்போது பெரியாருக்கு சிலை அமைக்கப்படுவதையே எதிர்க்கும் நிலைக்கு வந்திருப்பது ஏன்?''

''சிறு வயதிலிருந்தே ஐயா பெரியாரை வாசித்தும் நேசித்தும் வளர்ந்த பிள்ளை நான். அந்தக் காலகட்டத்தில் பெரியாரைப் பற்றி நிறைய மேடைகளில் பேசியும் இருக்கிறேன். ஆனால், அதே பேச்சுகளை இப்போது எனக்கு எதிராகவும் சிலர் பரப்பிவருகிறார்கள். பெரியார் குறித்து நான் பேசிய அந்தப் பேச்சுகளை நான் என்றைக்குமே மறுத்ததில்லை. இன்றைக்கும் அவரது கோட்பாடுகளை மேடைதோறும் நான் பேசிவருகிறேன். எனவே, இதில் எனக்குப் பெருமைதான்.

'நான் இந்து இல்லை; சைவன்... அதிலும் வீர சைவன் - சிவ சமயம்' என்று இன்றைக்கும் நான்தானே சொல்லிக்கொண்டிருக்கிறேன். 'நாங்கள்தான் பெரியார் வழி வந்தவர்கள்' என்று சொல்லிக்கொள்ளும் தி.மு.க-வினர், 'எங்கள் கட்சியில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் இந்து; எங்கள் வீட்டில் மூன்று வேளை சாமி கும்பிடுகிறோம்' என்றுதானே கத்திக்கொண்டிருக்கிறார்கள்.

அண்ணல் அம்பேத்கர், மார்க்ஸ் எல்லோரும் எனக்கு வேண்டியவர்கள் ஆகும்போது, ஐயா பெரியார் மட்டும் எனக்கு வேண்டாதவர் ஆகிவிடுவாரா? நான் தமிழ்த் தேசியத்துக்குத் தலைவராக ஐயா பெரியாரைப் பார்க்கவில்லை; தமிழ்த் தேசியத்தின் எதிரியாகவும் ஐயாவைப் பார்க்கவில்லை. ஆனாலும்கூட, அரசியல்ரீதியாக எனக்கு எதிரே பெரியாரை நிறுத்திக் குழப்பத்தைக் கட்டமைக்க சிலர் முயல்கிறார்கள்.

தமிழக அரசு சார்பில், ஐயா பெரியாருக்கு சிலை அமைக்கப்படவில்லை. அறக்கட்டளை சார்பில்தான் அமைக்கப்போகிறோம் என்று இப்போது சொல்கிறார்கள். இந்தநிலையில், நாங்கள் சொல்லவருவது... பெரியாருக்கு நிறைய சிலைகள் இருக்கின்றன. சிக்கனத்தை போதித்த பெரியாருக்கு, எளிமையான முறையில் சிலை அமைத்துவிட்டு, மீதமுள்ள காசை ஐயாவின் பெயரிலேயே ஏழை மக்களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்தலாம். இதைத்தான் ஐயா பெரியாரும் விரும்புவார்.''

''பகுத்தறிவுப் பாதையில் பயணத்தை ஆரம்பித்து நீங்கள், முப்பாட்டன் முருகன், மாயோன் வழிபாடு எனப் பாதை மாறியதன் பின்னணிதான் என்ன?''

''நான் சிறுவயதிலிருந்தே இறை மறுப்பாளன்தான். ஆனால், பிரபாகரனை நான் எப்போது சந்தித்துவிட்டுத் திரும்பினேனோ அப்போதிருந்தே என் பாதையும் பயணமும் வேறுபட்டுவிட்டன. அதனால்தான் ஐயா பெரியாரைப் பற்றிச் சொல்லும்போதுகூட, 'அது நான் வழி நடந்த பாதை...', 'இது நான் வழி நடத்தும் பாதை...' என்று சொல்கிறேன்.

ஒரு தேசிய இன உரிமை, விடுதலை என்று வரும்போது, அதன் பண்பாடு, வழிபாடுகளையும் சேர்த்து மீட்டெடுக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் வந்துவிடுகின்றன. எனவே, என்னுடைய இறை எது, மெய்யியல் கோட்பாடு எது என்பதையெல்லாம் என்னுடைய தம்பி, தங்கைகளுக்கு நான் அடையாளப்படுத்த வேண்டியிருக்கிறது. எனவே, நான் விரும்பியோ அல்லது விரும்பாமலோ 'இதுதாண்டா நம்ம சாமி' என்று வெளிப்படுத்துவதற்காக மாயோன் வழிபாட்டைச் செய்துவருகிறேன்.

ஒரு தேசிய இனம் மீளெழுச்சிகொள்ள வேண்டுமென்றால், வரலாற்றின் பாதையில்தான் எழ முடியும். கீழடியைச் சிலர் 'திராவிட நாகரிகம்' என்கிறார்கள். இன்னும் சிலர் 'பாரதப் பண்பாடு நாகரிகம்' என்கிறார்கள். இது தமிழரின் தொன்ம நாகரிகம் என்று சொல்வதற்கு மட்டும் இங்கே யாருக்கும் மனசே வருவதில்லை.''

சீமான் - பிரபாகரன்
சீமான் - பிரபாகரன்

''தொடர்ச்சியாக தி.மு.க-வைக் குறிவைத்துத் தாக்குகிறீர்களே, தி.மு.க தலைமையிலான அரசின் திட்டங்களில் பாராட்டத்தக்க அம்சம் என்று எதுவுமே இல்லையா?''

''பாராட்டக்கூடிய விடயங்களை பாராட்டத்தான் செய்கிறோம். திட்டமிட்டு யாரையும் திட்டவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை! அதேசமயம், எங்களைக் குறிவைத்து அரசியல்ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்போது விமர்சனம் செய்கிறோம்.

இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர், திரு.வி.க., மறைமலையடிகள், வ.உ.சி என மறைக்கப்பட்ட முன்னோர்களது நினைவைப் போற்றும்விதமாக கடந்த பத்து ஆண்டுகளாக வீரவணக்கம் சுவரொட்டிகளை நாங்கள் ஒட்டிவருகிறோம். இது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உறுத்தலாகவே இருந்திருக்கிறது. அதனால்தான், முதல்வராகப் பொறுப்பேற்றதும் 'சென்னைக்குள் சுவரொட்டி ஒட்டத் தடை' என்று அறிவிக்கிறார். கேட்டால், 'சிங்காரச் சென்னையின் அழகு கெடுகிறது' என்று காரணம் சொல்கிறார்கள்.

அப்படியென்றால், சென்னை நகரெங்கும் சுவர்களில் 'ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்' என்றெல்லாம் மொக்கை, மொக்கையாக கட்சி விளம்பரங்களைச் செய்துவைத்திருக்கிறீர்களே... அதெல்லாம் சிங்காரச் சென்னைக்கு அழகூட்டுகின்றனவா... சாலைகளெல்லாம் சவக்குழிபோல கேடுகெட்டத்தனமாக இருக்கின்றனவே... அவையெல்லாம் சிங்காரச் சென்னையில்தான் வருகின்றனவா... நெகிழி, குழைமம் சேர்ந்த குப்பைகளெல்லாம் மலைபோல் தேங்கிக் கிடக்கின்றனவே... இவையும்கூட சிங்காரச் சென்னையின் அழகில்தான் வருகின்றனவா... இதையெல்லாம் கேள்வி கேட்காமல் ஏன் திசை திருப்பிக்கொண்டிருக்கிறார்கள்?''

"மக்கள் விரும்பினால் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன்!"- `தலைவி' கங்கனா ரணாவத்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''நாம் தமிழர் கட்சியினர் ஒட்டும் சுவரொட்டிகளைத் தடை செய்வதற்காகத்தான் 'சிங்கார சென்னைத் திட்டம்' என்று நீங்கள் சொல்வதை எப்படி ஏற்க முடியும்?''

''அப்படியென்றால், சுவரில் எழுதப்படும் கட்சி விளம்பரங்களையும் தடை செய்யச் சொல்லுங்கள். அவை மட்டும் சிங்கார சென்னைக்கு அழகு தருகின்றனவா என்ன?''

''கறுப்பர் கூட்டத்தின் 'கந்த சஷ்டி கவசம்' குறித்துக் கடுமையாக விமர்சித்த நீங்கள், கே.டி.ராகவன் வீடியோ விவகாரத்தில் மட்டும் 'உலகில் யாரும் செய்யாததையா ராகவன் செய்துவிட்டார்' என எளிதாகக் கடந்து செல்கிறீர்களே?''

''எனது செல்பேசியில், தேவையில்லாத ஓர் அழைப்பு வருகிறதென்றால் அந்த அழைப்பை நான் துண்டிப்பேன். அதுபோல், அந்தத் தங்கச்சியும் செய்திருக்கலாம். மாறாக, சம்பவத்தில் இருவருமே உடன்பட்டிருக்கும்போது, அதைப் பற்றி நாம் பேசுவது நாகரிகம் இல்லை. இல்லை, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய தங்கச்சி புகார் தெரிவித்திருந்தால்கூட நாம் இது குறித்துப் பேச முடியும்.

ஜோதிமணி
ஜோதிமணி

ஆசிஃபாவில் ஆரம்பித்து தாழ்த்தப்பட்ட சகோதரிகளை நிர்வாணப்படுத்துவது, வன்புணர்வு செய்வது என நாடு முழுக்க பல்வேறு பாலியல் வன்முறைச் சம்பவங்களை பா.ஜ.க-வினர் அரங்கேற்றிவருகின்றனர். தொடர்ச்சியான இந்தச் சம்பவங்கள் பற்றியெல்லாம் காங்கிரஸ் கட்சியோ அல்லது ஜோதிமணியோ ஒன்றுமே பேசவில்லை. இப்படியிருக்கும்போது, இந்த விஷயத்தை மட்டும் பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பது ஏன் என்று கேட்டேன். ஒரு மாணவனுக்கு எந்தப் பக்கத்தை மறைக்க வேண்டும்; எந்தப் பக்கத்தைக் காட்ட வேண்டும் என்பதெல்லாம் ஓர் ஆசிரியருக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல், பிள்ளைக்கு எதைக் கொடுக்க வேண்டும்; எதைத் தடுக்க வேண்டும் என்று ஒரு தாய்க்குத் தெரிந்திருக்க வேண்டும். எதை விவாதத்துக்கு வைப்பது, எதை விலக்கி வைப்பது என்று ஒரு தலைவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல், இந்த விஷயம் குறித்துப் பேசுவதையே தவிர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். பொதுச் சொத்தையெல்லாம் தனியாருக்குத் தாரை வார்த்துக்கொண்டிருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு. 100 லட்சம் கோடிக்கு திட்டங்கள் வைத்திருப்பவர்கள் ஆறு லட்சம் கோடிக்கு அரசுச் சொத்தை விற்கவேண்டிய அவசியம் என்ன வந்தது? 20 லட்சம் கோடிக்கு நலத்திட்டங்களை அறிவித்த மத்திய அரசு, ஒரு லட்சம் கோடி பணத்தை ரிசர்வ் வங்கியிலிருந்து ஏன் எடுக்க வேண்டும்?

வேலூர்: இரவு முழுவதும் தவித்த குழந்தைகள்! -வி.ஏ.ஓ சஸ்பெண்ட்; ஆட்சியரின் விளக்கம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே, 'ஒரு தர்க்கமும் இல்லாமல், நாடாளுமன்றத்தில் பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன. எங்கே போய்க்கொண்டிருக்கிறது நாடு?' என்று வேதனைப்படுகிறார். நாட்டில் இவ்வளவு பிரச்னைகள் இருக்கும்போது, இது குறித்தெல்லாம் கேள்வி எழுப்பாமல், கே.டி.ராகவன் அழுக்கு குறித்துப் பேசுவதுதான் இப்போது முக்கியமா? இதே கேள்வியை தஞ்சாவூரில் கேட்டார்கள், நான் தவிர்த்துவிட்டேன். திருநெல்வேலியில் கேட்டார்கள் தவிர்த்துவிட்டேன். மறுபடி சென்னையிலும் அதே கேள்வியைக் கேட்கும்போது, கோபத்தில் நான் கத்துகிறேன். அன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது மத்திய, மாநில அரசுகளை நோக்கி நான் எத்தனையோ கேள்விகளை எழுப்பினேன்... அதற்கெல்லாம் ஆட்சியாளர்கள் பதில் சொன்னார்களா?

அதையெல்லாம் கேட்காமல், 'கே.டி.ராகவனுக்கு சப்போர்ட் பண்ணுகிறீர்களா' என்று இதை மட்டும் வெட்டி எடுத்துக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்களே... தொலைக்காட்சி விவாதங்களிலேயே நானும் கே.டி.ராகவனும் சண்டை போட்டுக்கொள்வோம். என் முகத்தைத் தொலைக்காட்சியில் காட்டினால்கூட, 'சீமானுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்' என்றெல்லாம் நேரடியாகத் தொலைக்காட்சி அலுவலகத்துக்கே போய்ச் சொல்வார் கே.டி.ராகவன் என்றெல்லாம் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு எங்களுக்குள் பகை இருக்கிறது.''

சீமான்
சீமான்

''நாம் தமிழர் கட்சி, 'பா.ஜ.க-வின் பி டீம்' என உங்கள் மீது தொடர்ச்சியாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு அரசியலை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''பா.ஜ.க-வின் பி டீம் எனச் சொல்லி எல்லோரும் என்னைத்தானே திட்டுகிறார்கள். ஏ டீமான பா.ஜ.க-வை ஏன் திட்டுவதில்லை? ஆக, இதில் ஓர் உள்ளரசியல் இருக்கிறது. இப்போது எங்களுக்குக் கிடைத்துள்ள 31 லட்சம் வாக்குகளில் கிறித்தவர், இஸ்லாமியர் வாக்குகள் பெருமளவில் இல்லை. அந்த வாக்குகளும் என்னை வந்தடைந்தால், நான் இன்னும் பெரிய ஆளாகிவிடுவேன். ஆக, அந்த வாய்ப்பை எனக்கு கொடுத்துவிடக் கூடாது என்று அவர்கள் எண்ணுகிறார்கள். அதனால்தான் 'சீமான், பா.ஜ.க-வின் பி டீம்' எனத் தொடர்ச்சியாகச் சொல்லி மக்களின் மனதில் பதியவைக்க முயல்கிறார்கள். 'பத்து லட்சம் பேர் ஒன்று சேர்ந்து சொன்னாலும்கூட பொய், உண்மையாகிவிடாது' என்கிறார் புத்தர். எனவேதான் நானும் இவர்கள் சொல்வதைப் பற்றியெல்லாம் துளிக்கூட கவலைப்படுவது கிடையாது. நீ பேசிட்டே இரு ராஜா...''

அடுத்த கட்டுரைக்கு