Published:Updated:

அரசியல் கட்சியினரின் கூடுதல் பண வசூலிப்பு; வாக்குவாதம்... களேபரம்! - ஏற்காடு ஏல சலசலப்பு!

ஏற்காடு ஏல சலசலப்பு

அரசியல் கட்சியினர், `ஏலம் எடுக்க வேண்டுமென்றால், எங்களுக்கு 1.75 லட்சம் பணம் கொடுக்க வேண்டும்' என ஏலதாரர்களிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஏலதாரர்கள் மறுப்பு தெரிவிக்கவே, அங்கு சலசலப்பு நிலவியது.

Published:Updated:

அரசியல் கட்சியினரின் கூடுதல் பண வசூலிப்பு; வாக்குவாதம்... களேபரம்! - ஏற்காடு ஏல சலசலப்பு!

அரசியல் கட்சியினர், `ஏலம் எடுக்க வேண்டுமென்றால், எங்களுக்கு 1.75 லட்சம் பணம் கொடுக்க வேண்டும்' என ஏலதாரர்களிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஏலதாரர்கள் மறுப்பு தெரிவிக்கவே, அங்கு சலசலப்பு நிலவியது.

ஏற்காடு ஏல சலசலப்பு

சேலம் மாவட்டம், ஏற்காடு தமிழகத்திலுள்ள சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். தினமும் ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகளை மையமாக வைத்து ஏற்காட்டில், ஏராளமான சிறு குறு கடைகள் இயங்கிவருகின்றன. இந்த நிலையில், நேற்றைய தினம் இந்த ஊராட்சிக்குச் சொந்தமான 22 கடைகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவை ஏலத்தில் விடப்பட்டன. ஏலத்தில் பங்கேற்க முன்வைப்புத் தொகையாக 50,000 ரூபாய் செலுத்தியவர்கள்தான் ஏலத்தில் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, ஏலம் எடுக்க 430-க்கும் மேற்பட்டோர் முன்வைப்புத் தொகையைச் செலுத்தி ஏலத்தில் பங்கேற்றனர். ஏற்கெனவே அரசியல் கட்சியினரின் தலையீட்டால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்தக் கடைகளுக்கான ஏலம் இரண்டு முறை ரத்துசெய்யப்பட்டது.

ஏற்காடு
ஏற்காடு

இந்த நிலையில், மூன்றாவது முறையாக ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புராஜ் முன்னிலையில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கென்னடி தலைமையில் ஏலம் நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் முன்வைப்புத் தொகை செலுத்திய நபர்கள் அனைவரும் பங்கேற்றனர். காலை 11 மணியளவில் ஏலம் தொடங்கியது. கடை எண்கள் வரிசையாக ஏலம்விடப்பட்டன. அப்போது அங்கு வந்த அரசியல் கட்சியினர், `ஏலம் எடுக்க வேண்டுமென்றால், எங்களுக்கு 1.75 லட்சம் பணம் கொடுக்க வேண்டும்' என ஏலதாரர்களிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஏலதாரர்கள் மறுப்பு தெரிவிக்கவே, அங்கு சலசலப்பு நிலவியது.

அதையடுத்து தி.மு.க ஒன்றியச் செயலாளர் ராஜா என்கிற ராஜேந்திரன், மாணவரணி ஒன்றியச் செயலாளர் புகழேந்தி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெய், ஆனந்த், பா.ஜ.க சேலம் கிழக்கு மாவட்டத் துணைத் தலைவி ஜெயந்தி, தே.மு.தி.க ஒன்றியச் செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் தங்கள் ஆதரவாளர்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஏலத்தை நிறுத்த முற்பட்டனர்.

ஆனால், வட்டார வளர்ச்சி அலுவலர், `ஏலத்தை நிறுத்த முடியாது. நீங்கள் தேவைப்பட்டால் ஏலத்தில் கலந்துகொண்டு, கடைகளை எடுத்துக்கொள்ளுங்கள்' என்று தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து ஏலம் தொடங்கியது. அப்போது ஏலத்தில் பங்கேற்ற பா.ஜ.க சேலம் கிழக்கு மாவட்டத் துணைத் தலைவி ஜெயந்தி, அதிகபட்சமாக 5.28 லட்சம் ரூபாய்க்கு ஏலம் கோரியதால், ஏலம் அவரது பெயருக்கு விடப்பட்டது. அதன் பிறகு இரண்டாவது கடைக்கு 4 லட்சம் ரூபாய் வரை ஏலம் கூறினார். அவர் வேண்டுமென்றே ஏலத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காக ஏலத்தொகையை அதிகப்படியாகக் கூறிவந்தார்.

ஏலம்
ஏலம்

இதனால் கடை வைத்திருக்கும் வியாபாரிகள், அனைத்துக் கட்சி பொறுப்பாளர்களிடமும் வேறு வழி இல்லாமல் ஒரு கடைக்கு 1,75,000 ரூபாய் தருவதாகக் கூறியதன்பேரில், அவரவர் வைத்திருக்கும் கடைகளை அவர்களே எடுத்துக்கொள்வதற்கு அரசியல் கட்சியினர் ஒரு மனதாக முடிவுசெய்து, பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், ஏலம் நடந்துகொண்டிருக்கும்போதே கட்சியினருக்கும், ஏலாதாரர்களுக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆனால், ஏலம் எடுக்கும் கடைக்காரர்கள், கட்சியினருக்கு தலா 1.75 லட்சம் ரூபாய் கொடுப்பதாக ஒப்புக்கொண்டதன்பேரில், யாரும் ஏலம் கூறாமல் பெயரளவுக்கு அரசு நிர்ணயித்த தொகையைவிட மேலே ஆயிரம் ரூபாய் வைத்து, அவரவர் வைத்திருக்கும் கடைகளை அவர்களே எடுத்துக்கொண்டனர்.

இறுதியாக `உணவகம்' என்ற கேட்டகரியிலிருக்கும் `கருப்பையா' உணவகத்தை, சேர்வராய்ஸ் குழுமம் ஏலம்விடும்போது, அரசுத் தரப்பில் ஆறு லட்சம் ரூபாய் குறிப்பிடப்பட்டது. ஆனால், 23 லட்சம் ரூபாய் வரை அனைத்துக் கட்சியினரும் ஒன்று சேர்ந்து ஏலத்தை ஏற்றிவிட்டனர். இறுதியாக 24 லட்சம் ரூபாய்க்கு சேர்வராய்ஸ் குழுமத்தின் மேலாளர் அழகேசன் கேட்டார். அப்போது, `வெளியூர்க்காரர் ஏலம் கேட்கக் கூடாது' என அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, `ஏலம் விடக் கூடாது... மேற்படி கருப்பையா ஹோட்டலை சீல் வைக்க வேண்டும்' எனக் கோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். இதனால் மேற்படி உணவகத்துக்கான ஏலம், வாரச் சந்தைக்கான ஏலம் ஆகிய இரண்டும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன.

பங்கு பிரிப்பு (வீடியோ காட்சி)
பங்கு பிரிப்பு (வீடியோ காட்சி)

அதைத் தொடர்ந்து ஏலம் முடிந்து, வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்குள் ஒரு தனி அறைக்குள் கறுப்பு நிறப் பையை அரசியல் கட்சியினர் கொண்டுசென்றதாகக் கூறப்படுகிறது. மேலும், தி.மு.க ஒன்றியச் செயலாளர் ராஜா சுமார் 32 லட்சம் ரூபாயை அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பங்கு பிரித்துக் கொடுத்ததாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் பேசியபோது, “சம்பந்தப்பட்ட வீடியோவை நானும் பார்த்தேன். உதவி ஆட்சியர் மூலம் இது குறித்து விசாரித்துவருகிறேன். விரைவில் நடவடிக்கை மேற்கொள்வோம்” என்றார்.