Published:Updated:

நாங்கல்லாம் அப்பவே அப்படி!

செல்லூர் ராஜூ, கே.என்.நேரு
பிரீமியம் ஸ்டோரி
செல்லூர் ராஜூ, கே.என்.நேரு

இந்தக் கொரோனா ஊரடங்குதான் எங்களை வீட்டுக்குள்ளேயே முடக்கிப்போட்டு விட்டது.

நாங்கல்லாம் அப்பவே அப்படி!

இந்தக் கொரோனா ஊரடங்குதான் எங்களை வீட்டுக்குள்ளேயே முடக்கிப்போட்டு விட்டது.

Published:Updated:
செல்லூர் ராஜூ, கே.என்.நேரு
பிரீமியம் ஸ்டோரி
செல்லூர் ராஜூ, கே.என்.நேரு
மேடைதோறும் எதிர்க்கட்சியினருக்கு சவால் விடுத்துக்கொண்டிருந்த அரசியல்வாதிகள், இப்போது வீட்டுச் சிறையில் இருந்துகொண்டு, ‘டல்கோனா’ சவால் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். ‘இப்படி வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்த அனுபவம் இதற்கு முன் உண்டா?’ என்ற கேள்வியை அரசியல் பிரபலங்கள் சிலரிடம் கேட்டோம்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அமைச்சர் செல்லூர் ராஜூ (அ.தி.மு.க)

‘`வீட்டுச்சிறை அனுபவத்தைவிட, நிஜ சிறை அனுபவம்தான் எனக்கு உண்டு. டான்சி வழக்கில், அம்மாவுக்கு (ஜெயலலிதா) சிறைத்தண்டனை விதித்தது நீதிமன்றம். மதுரையிலிருந்து சென்னை வந்த நாங்கள், நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திக் கைதானோம். வேலூர்ச் சிறையில் கொண்டுபோய் அடைத்தார்கள்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

வழக்கமாக அரசியல் போராட்டங் களுக்காகப் பலமுறை கைதாகியிருக்கிறோம். ஆனால், அப்போதெல்லாம் மதுரையில்தான் சிறை வைப்பார்கள். கட்சிக்காரர்கள், தெரிந்தவர்கள் என அடிக்கடி வந்து பார்ப்பார்கள். இம்முறை வேலூரில் அடைத்ததால், உறவினர்களோ தெரிந்தவர்களோ பார்க்க வசதியில்லை. நல்லவேளையாக ஜெயில் வார்டன் ஒருவர் மதுரைவாசியாக இருந்ததால், அவரோடு நிறைய நேரம் ஊர்க்கதைகள் பேசிப் பொழுதைக் கழித்தேன்.

புத்தகம் வாசிப்பது, சீட்டாடுவது என ஜெயிலுக்குள் எல்லோரும் பொழுதுபோக் குவார்கள். எனக்கு சீட்டாடத் தெரியாது. எனவே, சிறை வளாகத்துக்குள்ளேயே நடைப்பயிற்சி செல்வேன். மற்ற தண்டனைக் கைதிகளை சந்தித்து, விலாவாரியாகக் கேட்டுப் பேசிக்கொண்டிருப்பேன். இதுதான் ஜெயிலுக்குள் என் பொழுதுபோக்கு.’’

கே.என்.நேரு (தி.மு.க)

‘`ஒரே இடத்தில் முடங்கிக்கிடந்த இடம் என்றால் சிறைதான். 2011-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த புதிதில், அரசியல் வழக்குகளில் என்னையும் பொன்முடியையும் கைது செய்து கடலூர்ச் சிறையில் அடைத்துவிட்டார். 54 நாள்கள் சிறைவாசம்.

கே.என்.நேரு
கே.என்.நேரு

எனக்கும் பொன்முடிக்கும் ‘வாடா போடா’ நட்பு. அதனால், எப்போதும்போல் சிறையிலும் சகஜமாகப் பேசிக்கொண்டே வாக்கிங் செல்வோம்; ஷட்டில்காக் விளையாடு வோம். சிறைக்குள் இருந்த 54 நாள்களும் குடும்பத்தினரைப் பிரிந்திருந்தோமே தவிர, கட்சி ஆட்களோடு பேசுவது, பழகுவது என்பது எப்போதும்போலவே இருந்தது. ஆனால், சிறையை விட்டு வெளியே வரும்போது, 7 கிலோ உடல் எடை குறைந்துவிட்டேன். அந்தச் சம்பவத்துக்குப்பிறகு இப்போது இந்தக் கொரோனா ஊரடங்குதான் என்னை வீட்டுக்குள்ளேயே முடக்கிப்போட்டு விட்டது.’’

திருநாவுக்கரசர் (காங்கிரஸ்)

‘`நான் எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்று 43 வருடங்கள் ஆகிவிட்டன. இத்தனை ஆண்டுக்காலப் பொதுவாழ்க்கையில், இப்போதுபோல் மாதக்கணக்கில் நான் வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்ததே இல்லை. சிறையைவிடக் கொடுமையாக இருக்கிறது இது.

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்

1982-ல் அம்மை நோய் வந்து, 10 நாள் படுத்த படுக்கையாகக் கிடந்தேன். அந்த 10 நாள்களைக் கடப்பதே போதும் போதுமென்றாகிவிட்டது. ஆனால், இப்போது அதையும் தாண்டிய சோதனையாக இருக்கிறது. எவ்வளவு நேரம்தான் பேப்பர் பார்ப்பது, டி.வி பார்ப்பது, போன் பேசுவது. இப்போது என் சுய சரிதையை எழுத ஆரம்பித்துவிட்டேன். ரொம்பவே வித்தியாசமான அனுபவம் இது!’’

ஞானதேசிகன் (த.மா.கா)

‘`இந்தித்திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் 1965-ம் வருடம் தீவிரமாக இருந்தன. அப்போது நான் கோவை அரசுக் கலைக் கல்லூரியில் படித்துக்கொண்டி ருந்தேன். கோவை ஆர்.எஸ் புரத்தில்தான் நான் தங்கியிருந்தேன். தெருவில், இரண்டுபேர் கூடிநின்று பேசினாலே போலீஸ் வந்து பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள். எங்கள் ஏரியா இன்ஸ்பெக்டர் கொஞ்சம் வித்தியாசமானவர். கையில் ஒரு சாட்டையை வைத்துக்கொண்டு ஜீப்பில் ரோந்து வருவார். தெருவில் யாராவது கூடி நின்றால், ஜீப்பில் இருந்தவாறே அந்தக் கும்பலை நோக்கி சாட்டையைச் சுழற்றுவார்.

ஞானதேசிகன்
ஞானதேசிகன்

அவ்வளவுதான், அடி தாங்கமுடியாமல் மொத்தக் கூட்டமும் சிதறி ஓடும். வீட்டுக்குள் அடைந்தே கிடக்கும் இந்நாள்களில், அந்தப் பழைய ஞாபகமெல்லாம் வந்துபோகின்றன. அவையெல்லாம் சில நாள்கள்தான். இப்படி மாதக்கணக்கில் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடப்பது வாழ்க்கையிலே இதுதான் முதல் அனுபவம்!’’

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)

‘`1974-ல் டைபாய்டு காய்ச்சல் வந்து அவதிப்பட்டேன். உடல்நிலை ஓரளவு சரியானதும், கட்சி வேலைகளில் பிஸியாகி ஆரோக்கியத்தைக் கவனிக்கத் தவறிவிட்டேன். எனவே, மறுபடியும் வயிற்றில் பிரச்னை வந்து, ‘பித்தப் பை’ ஆபரேஷன் செய்துகொள்ள நேரிட்டது.

ஜி.ராமகிருஷ்ணன்
ஜி.ராமகிருஷ்ணன்

அறுவைச்சிகிச்சை முடிந்து முதல் 15 நாள் மருத்துவமனையில் தங்கியிருந்தேன். அதன்பின்னர் வீட்டில், 15 நாள்கள் முழு ஓய்வில் இருந்தேன். பேப்பர், புத்தகம் படிப்பது மட்டும்தான் அப்போதைய பொழுதுபோக்கு. 45 வருடங்களுக்குப் பிறகு இப்போது மறுபடியும் மொத்தமாக மாதக்கணக்கில் வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இப்போது செய்திகளை உடனுக் குடன் தெரிந்துகொள்ள வசதியிருப்பதால், மக்கள் பிரச்னைகளை உடனடியாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.’’

பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)

“திண்டுக்கல் மாவட்டம் கதிரணம்பட்டி தான் என் சொந்த ஊர். 1991 தேர்தல் பிரசாரத்துக்காக வெளியூர் சென்றிருந்தேன். திடீரென, ராஜீவ்காந்தி படுகொலையான செய்தி வந்து சேர்ந்தது. அப்போது நாங்கள் தி.மு.க கூட்டணியில் இருந்தோம். ராஜீவ் படுகொலையில், தி.மு.க-வை இணைத்துப்பேசி நாடு முழுக்கக் கலவரம் நடக்க ஆரம்பித்தது. பேருந்துகள் ஓடாததால், நானும் ஊர் திரும்ப முடியவில்லை.

பாலபாரதி
பாலபாரதி

தேர்தல் பிரசாரம் செய்த ஊரிலிருந்த தோழர் திலகவதி என்பவரது வீட்டின் கீழ்ப் பகுதியில்தான் கட்சி அலுவலகம் இருந்தது. அங்கேயே தங்கிக்கொண்டேன். தொடர்ந்து நான்கு நாள்கள் கலவரம் நடந்தன. கடைகள் எதுவும் திறக்கவில்லை. கலவரக்காரர்கள் கட்சி அலுவலகக் கதவைத் தட்டித் தகராறு செய்தனர். தோழர் வீட்டிலிருந்த அரிசிக் கஞ்சியைத்தான் நான்கு நாள்களாக சாப்பிட்டு உயிர் பிழைத்தோம்.

இந்திரா காந்தி இறந்தபோதும் இதேபோன்று, நான் வெளியூரில் சிக்கிக்கொண்டேன். அந்த ஊரிலிருந்த என் கல்லூரித் தோழர் நாகலட்சுமியின் வீட்டில் மூன்று நாள்கள் தங்கியிருந்தேன்.’’

சசிகலா புஷ்பா (பா.ஜ.க)

‘`2016-ல் நான் ஜெயலலிதாவை எதிர்த்த காலகட்டம். அதன் விளைவாக எம்.பி பதவியில் இருந்து விலகச்சொல்லிப் பல வழிகளிலும் அழுத்தம் கொடுத்தனர். அரசாங்கத்தை எதிர்த்துத் தனி மனுஷியாய் நான் நடத்திய சட்டப்போராட்டம் என் வாழ்நாளில் மறக்கமுடியாதது. நாள் முழுக்க வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்து வழக்கு சம்பந்தமான ஆவணங்களைத் திரட்டுவது, விவாதிப்பது என இயங்கிக்கொண்டே யிருந்தேன். அதன்பிறகு நான், பாதி வழக்கறிஞராகவே மாறிவிட்டேன். இந்த ஊரடங்கு காலகட்டம் அந்த நாளையெல்லாம் நினைவுபடுத்துகிறது.

சசிகலா புஷ்பா
சசிகலா புஷ்பா

அப்போது நான், வீட்டுக்குள் முடங்கிக்கிடந்தாலும் என் துணிச்சலை ஒருபோதும் இழக்கவில்லை. அதனால்தான், ‘எம்.ஜி.ஆர் சொல்லியும்கூட நான் எம்.பி பதவியை ராஜினாமா செய்யவில்லை. சசிகலா புஷ்பா மட்டும் ராஜினாமா செய்து விடுவாரா என்ன...’ என்று ஜெயலலிதாவே என்னைப்பற்றிச் சொன்னதாகப் பின்னாளில் கேள்விப்பட்டேன்.’’