Published:Updated:

'மசோதா’ மத்திய அரசு... மல்லுக்கட்டும் எதிர்க்கட்சிகள்!

மோடி, அமித் ஷா
பிரீமியம் ஸ்டோரி
மோடி, அமித் ஷா

‘இந்த மாதம் மசோதா மாதம்’ என விளம்பரம் கொடுக்காதது மட்டும்தான் குறை.

'மசோதா’ மத்திய அரசு... மல்லுக்கட்டும் எதிர்க்கட்சிகள்!

‘இந்த மாதம் மசோதா மாதம்’ என விளம்பரம் கொடுக்காதது மட்டும்தான் குறை.

Published:Updated:
மோடி, அமித் ஷா
பிரீமியம் ஸ்டோரி
மோடி, அமித் ஷா

ற்றபடி, தினம் ஒரு மசோதா என நாடாளுமன்றத்தை அலறவிட்டிருக்கிறது மத்திய அரசு. ‘கடந்த இருபதாண்டுகளில் இதுதான் மிகவும் உபயோகமான கூட்டத்தொடர்’ என்று அறிவித்திருக்கிறார், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா. இன்னொருபுறம், எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்குச் சிறிதும் மதிப்பளிக்காமல் அத்தனை மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டிருப்பதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மொத்தம் 37 நாள்கள் நடந்த அவையில் 38 மசோதாக்களைத் தாக்கல் செய்திருக்கிறார்கள். அவற்றில் 28 மசோதாக்கள் இரு அவையிலும் நிறைவேறிவிட்டன. மக்களவையில் நிறைவேறிய மசோதாக்கள் மட்டும் 36. மாநிலங்களவையில் 10 மசோதாக்கள் நிலுவையில் இருக்கின்றன. முக்கியமான ஒன்று, இவற்றில் எந்த மசோதாவையுமே நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கோ, தேர்வுக்குழுவுக்கோ தப்பித்தவறியும் அனுப்பவில்லை. கடைசிக்கட்டத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தபிறகு, மிகச்சில மசோதாக்களை மட்டும் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

'மசோதா’ மத்திய அரசு... மல்லுக்கட்டும் எதிர்க்கட்சிகள்!

நாடாளுமன்ற ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பவை, அதன் குழுக்கள். அவைதான் நாடாளுமன்றத்துக்கு வலுவான ஜனநாயகத்தன்மையை அளிக்கின்றன. துறை ரீதியாக அரசின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் அமைப்பாகவும் இவை இருக்கின்றன. குழுக்களில் நிறைய வகை உண்டு. அவற்றில் முக்கியமானவை, நிலைக்குழு மற்றும் தேர்வுக்குழு. இதில், நிலைக்குழு நிரந்தரத்தன்மை கொண்டது. ஆண்டுக்கொருமுறை அதன் உறுப்பினர்கள் மாற்றியமைக்கப்படுவார்கள். கடந்த முறை, மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இருந்த குழுவில், கிட்டத்தட்ட 22 பேர் வரை இருந்தார்கள். தேர்வுக்குழு தற்காலிகமானது. ஒரு குறிப்பிட்ட மசோதா அல்லது விவகாரம் குறித்து விவாதிப்பதற்காகத் தனியாக அமைக்கப்படுவது. பணி முடிந்ததும் அது கலைக்கப்பட்டுவிடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தக் குழுக்கள் நடத்தும் கூட்டங்கள், மூடிய அறையில் நடக்கக்கூடியவை. எதிர்க்கட்சி உறுப்பினர்களால் அவையில் பேசமுடியாத சங்கதிகளை, குழுக்கூட்டத்தில் உறுதியாக முன்வைக்க முடியும். ஏனென்றால், அங்கே அவர்களுக்குக் கட்சியின் கொறடாக்களால் எந்தத் தடையும் சொல்ல முடியாது. சுருங்கச்சொன்னால், ஒரு விரிவான விவாதம், அவையைவிடக் கூடுதலாகக் குழுக்கூட்டத்தில் சாத்தியம். அதனால்தான், நாட்டு நிர்வாகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் முக்கிய மசோதாக்களை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்கிறது ஜனநாயக மரபு. இப்போது அந்த மரபு புறக்கணிக்கப்பட்டிருப்பதுதான் விமர்சனங்களின் தோற்றுவாய்.

மத்திய அரசு கொண்டு வந்த மசோதாக்கள் எல்லாமே மோசமென்று சொல்வதற்கில்லை. உச்சநீதிமன்ற மசோதாவில், நீதிபதிகளின் எண்ணிக்கையை, 31-லிருந்து 34-ஆக உயர்த்தியிருக்கிறார்கள். திருநங்கைப் பாதுகாப்பு மசோதா, திருநங்கைகளுக்குப் பல உரிமைகளை அளித்திருக்கிறது. மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதாவும் பல நல்ல விஷயங்களைக் கொண்டிருக்கிறது. விபத்தைக் குறைப்பதற்கான முன்னெடுப்பு, ‘விபத்து நிதியம்’ உருவாக்குவது போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆனால், இவற்றையும்கூட எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பாணியில் நிறைவேற்றப்பார்ப்பதுதான் ஏற்றுக்கொள்ள முடியாதது.

தேசியப் புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ மசோதாவில் மூன்று முக்கியத் திருத்தங்கள் செய்திருக்கிறார்கள். இந்தத் திருத்தங்களில் ஒன்று, மாநிலங்களில் விசாரணை நடத்தும்போது, காவல்துறையினருக்கு நிகரான அதிகாரம் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் என்கிறது. இது மாநில உரிமையை எந்த அளவுக்குப் பறிக்கிறது என்று யூகிப்பதே சிரமம்.

என்.ஐ.ஏ-வின் கீழ்வரும் ‘உபா’ ( Unlawful Activities Prevention Act ) சட்டமும் திருத்தப்பட்டிருக்கிறது. 1967-ம் ஆண்டு உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை மூன்றுமுறை திருத்தப்பட்டிருக்கிறது உபா. இப்போது நான்காவது முறை. இதுவரை `அமைப்பு’கள் மட்டுமே பயங்கரவாதிகள் என்று குற்றம்சாட்டப்படு வார்கள். ஆனால், இப்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் சட்டத்திருத்தத்தின் மூலம் தனிமனிதர்களையும் பயங்கரவாதி என்று முத்திரை குத்திவிட முடியும். இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கும், அரசை எதிர்த்துப் போராடுபவர்களை அச்சுறுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் அச்சம் கொள்கிறார்கள்.

நமது விசாரணைச் சட்டங்களின் சிறப்பே `கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் அல்லர்; குற்றம் சாட்டப்பட்டவரே’ என்ற அம்சம்தான். காவல்துறை ஒருவரைக் கைதுசெய்தால், அவர் குற்றவாளி என்பதைக் காவல்துறைதான் சட்டப்படி நிரூபிக்க வேண்டும். அதுவரை, கைது செய்யப்பட்டவர் விசாரணைக் கைதிதான். பிணை உள்ளிட்ட உரிமைகள் அவருக்கு உண்டு. இதற்கு முன்பு வந்த தடா, பொடா போன்ற சட்டங்கள் இந்த உரிமையைத் தூக்கித் தூர எறிந்தன. குற்றம் சாட்டப்பட்டவரே, தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கவேண்டும் என்றன இந்தக் கறுப்புச்சட்டங்கள். வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் கொண்டுவந்த பொடாவை, வாஜ்பாய் கூட்டணியில் இருந்த வைகோவின் மீதே ஜெயலலிதா அரசு பிரயோகித்ததை நாம் மறக்கமுடியாது. பல்வேறு மனித உரிமைப் போராட்டங்களின் வழியாகவே இந்த ஆள்தூக்கிச் சட்டங்கள் முடிவுக்கு வந்தன. இப்போது மீண்டும் அந்த அபாயம் தலைதூக்குகிறது. சட்டவிரோத நடவடிக்கைகளில் கைது செய்யப்படும் எவரையும் எவ்வித விசாரணையுமின்றி ஆறு மாதம் வரை சிறையில் அடைக்க வழிவகுக்கிறது ‘உபா.’

சென்றமுறையே முத்தலாக் தடை மசோதாவைக் கொண்டுவருவதில் ஆர்வமும் அவசரமும் காட்டிய பா.ஜ.க அரசு, இப்போது அதைக் கொண்டுவந்து நிறைவேற்றியும்விட்டது. ‘முஸ்லிம் பெண்களின் உரிமைகளைக் காப்பாற்றிவிட்டோம்’ என்று மத்திய அரசு பெருமையடித்துக்கொண்டாலும், தலாக் முறையை எதிர்க்கும் பெண்ணியவாதிகளே இந்த மசோதா பாரபட்சமானது என்று விமர்சிக்கி றார்கள். எல்லா மதத்தவர்களுக்கும் விவாகரத்து என்பது சிவில் பிரிவில் வரவு வைக்கப்படுகையில், இஸ்லாமியர்களை மட்டும் கிரிமினல் பிரிவில் கொண்டு வைத்ததுதான் பிரச்னைக்கு முக்கிய காரணம். தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் முஸ்லிம் ஆண்களைச் சிறையில் அடைக்க வழிசெய்யும் இந்த மசோதா சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ‘சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உறுதிசெய்த, பெண்களின் ஆலய நுழைவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் பா.ஜ.க தலாக் விஷயத்தில் மட்டும் திடீர் பெண்ணியவாதிகளாக மாறுவது நகைப்புக்குரியது’ என்ற வாதம் சுலபத்தில் நிராகரிக்கத்தக்கதல்ல.

அதேபோல் அரைநிமிட விவாதம்கூட இல்லாமல், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டி ருப்பதும் எதிர்க்கட்சிகளிடம் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரின் முக்கியத் தலைவர்கள் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டன. வெளி மாநிலங்களில் வசிக்கும் காஷ்மீர் மக்கள், காஷ்மீரில் இந்த ஆண்டு பக்ரீத்தைக் கொண்டாட முடியவில்லை. அரசின் சார்பில் சிறப்புத் தொலைபேசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டாலும், இரண்டு மணி நேரம் வரிசையில் காத்துநின்றால், வெறுமனே இரண்டு நிமிடங்கள் மட்டுமே பேச முடியும். சர்ச்சைக்குரிய பிரச்னையில் அதிரடி முடிவுகளை எடுக்கும்போது, இப்படியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது உலகம் முழுவதும் உள்ள நடை முறைதான் என்றாலும், இதுவே காஷ்மீரின் அமைதியைக் குலைத்துவிடாதா என்று எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்புகிறார்கள். காஷ்மீரில் அடக்குமுறைகள் நிலவுவதாக, ‘நியூயார்க் டைம்ஸ்’ இதழ் படங்களுடன் கட்டுரை வெளியிட்டுள்ளது. இதை ராகுல்காந்தி சுட்டிக்காட்டியபோது, ‘வேண்டுமானால் ராகுல் தனிவிமானத்தில் வந்து காஷ்மீரைப் பார்வையிடட்டும். நான் ஏற்பாடு செய்கிறேன்’ என்று ஜம்மு காஷ்மீர் கவர்னர் சத்ய பால் மாலிக் காட்டமாகப் பதில் அளித்தார். “நான் வரத் தயார். வந்தால் நான் மக்களைச் சந்திக்கவும் ராணுவத்தினரைச் சந்தித்துப் பேசவும் வேண்டும். அதற்கு நீங்கள் தயாரா?” என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

இவை மட்டுமல்ல, அணைப் பாதுகாப்பு மசோதா, தேசிய மருத்துவ ஆணைய மசோதா, தகவல் உரிமைச் சட்டத்திருத்த மசோதா என, இந்தியச் சமூகத்தின் அடிமட்டம் வரை ஆபத்து விளைவிக்கும் மசோதாக்களும், எதிர்க்கருத்துகளுக்கு இடம் அளிக்கப்படாமல் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

'மசோதா’ மத்திய அரசு... மல்லுக்கட்டும் எதிர்க்கட்சிகள்!

இந்தியாவில், அரசின் வெளிப்படைத் தன்மைக்கு ஆகச்சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது, தகவல் அறியும் உரிமைச்சட்டம். மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் பல ஊழல்கள் இருந்தாலும், அந்த அரசு கொண்டு வந்த சில நல்ல விஷயங்களில் முக்கியமானது தகவல் அறியும் உரிமைச்சட்டம். அது காங்கி ரஸையும் அதன் கூட்டணிக் கட்சிகளையுமேகூட அம்பலப்படுத்தியுள்ளது. தன்னார்வமும் அர்ப்பணிப்பும் மிக்க, `தகவல் அறியும் உரிமை’ ஆர்வலர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் உருவாகியிருக்கிறார்கள். தற்போது மோடி அரசு கொண்டுவந்துள்ள திருத்தங்கள், அதன் அடிப்படையையே சிதைக்கிறது. தகவல் ஆணையரின் ஊதியம் மற்றும் பதவிக்காலத்தில் அது கை வைக்கிறது. அடிப்படையில், தகவல் ஆணையம் ஒரு தன்னாட்சி அமைப்பு. அப்படிப்பட்ட ஓர் அமைப்பை மத்திய அரசை எதிர்பார்த்து இயங்கும் அமைப்பாக மாற்றுவது, சிங்கத்தின் பற்களைப் பிடுங்கிவிட்டு சர்க்கஸ் கூண்டுக்குள் அடைப்பதற்குச் சமம்.

அதேபோல் பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள அணைப் பாதுகாப்பு மசோதா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கிறது. ஏற்கெனவே காவிரிப்பிரச்னையில் நடுவர் மன்றம் அமைக்கவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் நாம் நீண்ட, நெடிய போராட்டத்தை நடத்தியிருக்கிறோம். உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பிலும் இப்போது அமைக்கப்பட்டுள்ள வாரியத்திலும் நமக்கு முழுத்திருப்தி இல்லையென்றாலும், குறைந்தபட்ச உரிமைகளை உறுதிசெய்வதற்காகவாவது ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் மத்திய அரசின் ‘ஒரே நதிநீர் வாரியம்’, அணைப் பாதுகாப்பு மசோதா போன்றவை பிரச்னைகளை எவ்வளவு சிக்கலாக்கும் என்பதை நம் சொந்த அனுபவங்களில் இருந்தே உணர முடியும்.

அணைப் பாதுகாப்பு மசோதாவின்படி, எடப்பாடி சொல்லி மேட்டூர் அணை திறக்கப்படாது. அமைப்பின் தலைவராக மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் இருப்பார். துணைத்தலைவராக இன்னுமொரு மத்திய அரசு அதிகாரி இருப்பார். இவர்களே இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் பெற்றவர்கள். தேசிய மருத்துவ ஆணைய மசோதாவும் நாடு முழுவதும் மருத்துவர்களின் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது. முக்கிய காரணம் நெக்ஸ்ட் (National Exit Test) தேர்வு. இறுதி ஆண்டு மருத்துவப்படிப்பை முடிப்பதற்கு முன் மாணவர்கள் எழுதும் தேர்வு தான் நெக்ஸ்ட். இது ஒரு மதிப்பீட்டுத் தேர்வாக மட்டும் இருந்தால் பிரச்னையில்லை. ஆனால், மாணவர்களின் அடுத்தகட்ட மருத்துவ மேல்படிப்புக்கு அதுவே சேர்க்கைத் தேர்வாகவும் மாறுகிறது. அதாவது, மருத்துவப்படிப்புக்கு உள்ளே வரும்போதும் ஒரு நாடுதழுவிய தேர்வு, படித்து முடித்துவிட்டு வெளியே போகும்போதும் ஒரு நாடுதழுவிய தேர்வு. இரு பக்கமும் கதவை அடைத்துவிட்டு, தப்பித்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள். இதுபோக, மருத்துவராகப் பதிவு செய்வதற்கும் நெக்ஸ்ட் மதிப்பெண்ணே முக்கியமாக இருக்கப்போகிறது. இப்படியொரு அதிமுக்கிய மசோதாவைத்தான், எந்தக் குழுவுக்கும் அனுப்பாமல் அவசரகதியில் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

ஆங்கிலேயர் காலத்தில் நடைபெற்ற வட்டமேசை மாநாடுகள், அரசியல் நிர்ணய சபைக் குழுக்கூட்டங்கள், இதுவரையிலான மக்களவை, மாநிலங்களவைக் கூட்டங்கள் - எல்லாவற்றையும் கவனித்தால் ஒரு உண்மை புரியும். விவாதங்களும் கருத்துமோதல்களும் பன்மைத்துவமும் நெகிழ்வுத்தன்மையும்தான் இந்திய ஜனநாயகத்தை நகர்த்தி வந்திருக்கின்றன. எந்த விவாதங்களும் இல்லாமல், எதிர்க்கட்சிகள் கலந்தா லோசிக்கப்ப டாமல், நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் புறக்கணிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் மசோதாக்கள், ஜனநாயகத்தின் மீதான கரும்புள்ளிகளே.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism