அலசல்
அரசியல்
கார்ட்டூன்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: ‘தோஸ்து’ கிஷோர்... ‘வாஸ்து’ பிடியில் அறிவாலயம்!

டி.ஆர்.பாலு, மு.க.ஸ்டாலின், துரைமுருகன்
பிரீமியம் ஸ்டோரி
News
டி.ஆர்.பாலு, மு.க.ஸ்டாலின், துரைமுருகன்

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு, தி.மு.க-வுக்கு பெரும்பின்னடைவுதானே?

ஏர்போர்ட் போகும் கழுகார், நம்மை ஆயிரம்விளக்கு மெட்ரோ ஸ்டேஷனில் இணைந்துகொள்ளச் சொன்னார். மதிய நேரத்தில் காற்றாடிய மெட்ரோவில் ஏறினோம். கழுகார் அருகில் அமர்ந்து, ‘‘கடும் எதிர்ப்புகளுக்கிடையே குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றிவிட்டார்களே?” என்ற கேள்வியுடன் ஆரம்பிக்க, நிதானமாகப் பேச ஆரம்பித்தார் கழுகார்.

‘‘இது எல்லோரும் எதிர்பார்த்ததுதான். ஆனால், எதிர்பாராததும் நடந்திருக்கிறது. பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையில், ‘இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களில் இந்து, சீக்கியம், பெளத்தம், சமணம் மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்’ எனக் கூறப்பட்டிருந்தது. இப்போது இந்தப் பட்டியலில் கிறிஸ்துவர்களையும் பார்சிக்களையும் சேர்த்திருக்கிறார்கள். இந்த இரு பிரிவினரையும் தவிர்த்தால், குடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களிலும் மேற்குலக நாடுகளிலும் கடும் எதிர்ப்பு எழும் என்பதுதான் காரணமாகச் சொல்லப்படுகிறது.’’

‘‘இதைத்தான் தயாநிதி மாறன் அழுத்தமாகப் பேசினாரே?’’

‘‘ஆமாம். மசோதாவின்மீது தயாநிதி மாறன் பேசிய பேச்சு, இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. மேற்கத்திய நாடுகளுக்கு பா.ஜ.க அரசு அஞ்சியே கிறிஸ்துவர்களைச் சேர்த்ததைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், ‘முஸ்லிம்களை மட்டும் பட்டியலில் இணைக்காமல்விட்டதற்கு வெறுப்புணர்வுதான் காரணம். உங்களுக்கு இந்த அவையில் மெஜாரிட்டி இருக்கலாம். ஆனால், எங்கள் மாநிலத்தில் உங்கள் கட்சிக்கு ஓர் உறுப்பினர்கூட இல்லை’ எனப் பேசியதற்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிகின்றன.’’

மிஸ்டர் கழுகு
மிஸ்டர் கழுகு

‘‘உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு, தி.மு.க-வுக்கு பெரும்பின்னடைவுதானே?’’

‘‘அப்படித்தான் சொல்ல வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தி.மு.க தரப்பில் தாக்கல் செய்த மனுவில் அழுத்தமான காரணங்கள், ஆதாரங்கள் இல்லை என்று இப்போது பேச்சு எழுந்திருக்கிறது. இதற்கு தி.மு.க தலைமைக்கு நெருக்கமான சில வழக்கறிஞர்களிடையே இருக்கும் ‘ஈகோ’வும் முக்கிய காரணம் என்கிறார்கள் மூத்த உடன்பிறப்புகள்.’’

‘‘ஏன், நன்றாகத்தானே வாதாடினார்கள்?’’

‘‘ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி எனத் தனித்தனியாக தேர்தல் நடத்துவதற்குக் காரணமே, அப்போதுதான் விட்டமின் ‘ப’வை நிதானமாக வீடு வீடாக விநியோகிக்க முடியும் என்பதுதான். இதையெல்லாம் நீதிமன்றத்தில் சொல்லி வாதாடவில்லை. மக்கள்தொகைப் பெருக்கம், விரிவாக்கம் ஆகியவற்றுக்கேற்ப வார்டுகளை மறுவரையறை செய்யவில்லை என்பதை ஆதாரத்துடன் எடுத்துவைக்கவில்லை. பல கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடந்தால், நடத்தை விதிகள் காரணமாக பட்டா, முதியோர்/ விதவைகள் பென்ஷன் போன்றவை வழங்குவதில் சிக்கல் எழும் என எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும் என்கிறார்கள்.’’

‘‘ஓ..!’’

‘‘வெறும் ஒன்பது மாவட்டங்களில் மட்டும் தேர்தலை நிறுத்திவிட்டு, உள்ளாட்சி வழக்கில் வெற்றிபெற்றுவிட்டதாகக் கூறி தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு தி.மு.க வழக்கறிஞர்கள் ‘பொக்கே’ கொடுத்து வாழ்த்தியதைச் சொல்லி தலையில் அடித்துக்கொள்கிறார்கள் சில தி.மு.க நிர்வாகிகள். உண்மையில், ஸ்டாலின் அப்செட்தான் என்பதே அவர்கள் சொல்லும் தகவல்.’’

‘‘உள்ளாட்சித் தேர்தலுக்கு அ.தி.மு.க தரப்பு உற்சாகமாகத் தயாராகிவிட்டதுபோலிருக்கிறதே?’’

‘‘கூட்டணிக் கட்சிகளிடம், `சீட் ஒதுக்கீடு பிரச்னையையெல்லாம் மாவட்டச் செயலாளரிடம் பேசிக்கொள்ளுங்கள்’ என அ.தி.மு.க தலைமை கைகாட்டிவிட்டது. பேச்சுவார்த்தைக்கு வந்தவர்கள் சதவிகித அடிப்படையில் சீட் ஒதுக்கீட்டை எதிர்பார்த்ததால்தான், மாவட்டச் செயலாளர்களை எடப்பாடி பழனிசாமி கைகாட்டிவிட்டாராம். மாவட்டங்களுடன் கூட்டணிக் கட்சிகள் முட்டிமோதுவதற்குள், தேர்தலே நடந்து முடிந்துவிடும் என்கிறார்கள்.’’

‘‘தி.மு.க தரப்பு இந்தத் தேர்தலை எப்படி எதிர்கொள்ளப்போகிறதாம்?’’

‘‘கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர், ‘ஆளுங்கட்சியின்மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால் நிச்சயம் ஜெயிக்கலாம்’ என்று தெம்பூட்டுகிறார்கள். ஆனால், ஆளுங்கட்சியின் பணபலத்துக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியுமா என்ற அச்சமும் அவர்களுக்கு இருக்கிறது.’’

டி.ஆர்.பாலு, மு.க.ஸ்டாலின், துரைமுருகன்
டி.ஆர்.பாலு, மு.க.ஸ்டாலின், துரைமுருகன்

‘‘பிரசாந்த் கிஷோர் இதற்கெல்லாம் எந்த ஐடியாவும் கொடுக்கவில்லையா?’’

‘‘சரியாகக் கேட்டீர். அவருடைய ஐடியா வேற லெவலில் இருக்கிறது. ஒருகாலத்தில் பகுத்தறிவுப் பாசறையாகக் கருதப்பட்ட அண்ணா அறிவால யத்திலேயே தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டாராம் அவர். அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் அறைக்கு வலதுபுறத்தில் கதவு ஒன்று இருந்தது. அது வழியாகத்தான் கருணாநிதி வீல் சேரில் அமர்ந்தபடி உள்ளே வருவார். ஸ்டாலின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அறிவாலயத்தின் மெயின்கேட் வழியே உள்ளே நுழைந்து தலைவர் அறைக்குள் செல்வார். அங்கிருந்து கிளம்பும்போது வலதுபக்கக் கதவின் வழியே காரில் ஏறிச் சென்றுவிடுவார். இதுதான் வழக்கமாயிருந்தது. இப்போது அதில் ஒரு மாற்றம்.’’

‘‘அப்படி என்ன மாற்றமாம்?’’

‘‘இனிமேல் கிழக்கு வாசல் வழியாக நுழைந்து மேற்கு வாசல் வழியாக வெளியேற வேண்டாம்; மேற்கு திசை சூரிய அஸ்தமனத்துக்கான குறியீடு என்று பிரசாந்த் தரப்பில் சொல்லப்பட்டிருக் கிறதாம். இதனால், முன்வாசல் வழியாகச் செல்லும் ஸ்டாலின், அதே வழியில் ரிட்டனும் ஆகிறார். பின்பக்கக் கதவைத் திறக்கவே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களாம். அறிவாலயத் தரப்பில் விசாரித்தால், ‘வாஸ்தெல்லாம் இல்லை. வாசல் கதவை வேறு இடத்துக்கு மாற்றப்போகிறார்கள். அதனால், தற்காலிகமாக ஒரே வழியை தலைவர் பயன்படுத்துகிறார்’ என்கிறார்கள்.’’

‘‘ரஜினியின் பிறந்த நாள் எப்படிச் சென்றதாம்?’’

‘‘ஏற்கெனவே அவர் சொன்னபடி அன்றைய தினம் அவர் வீட்டில் இல்லை. தனக்கு வாழ்த்து சொன்ன மிக நெருங்கிய நண்பர்களிடம், ‘அதிசயம் அற்புதம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கண்டிப்பாக நடக்கும்’ என்று வழக்கம்போல் சொல்லியிருக்கிறார். வழக்கமான டயலாக் என்றாலும், இந்த முறை நண்பர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.’’

‘‘எங்கிருந்து இந்தப் புது நம்பிக்கை?’’

‘‘பிறந்த நாள் நிகழ்ச்சியில், ‘முதல்வர் வேட்பாளராக ரஜினிகாந்த் களம் இறங்குவார்’ என்று ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணா பேசினார். அந்தக் குரலில் இருந்த அழுத்தம்தான் இந்த நம்பிக்கைக்குக் காரணம். வழக்கமாக இப்படியெல்லாம் ரஜினி வட்டாரத்திலிருந்து பேச்சுகள் வருவதில்லை. இந்த முறை வந்திருப்பதைவைத்து, அநேகமாக ‘தர்பார்’ படம் வெளியான பிறகு ரஜினி தரப்பிலிருந்து மேலும் நம்பக்கூடிய அளவுக்குத் தகவல்கள் வரக்கூடும் என நண்பர்களும் ரசிகர்களும் எதிர்பார்க்க ஆரம்பித்துள்ளனர்.’’

‘‘காங்கிரஸிலிருந்து ராயபுரம் மனோ விலகியதற்கு என்ன காரணமாம்?’’

‘‘காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் நா.சே.ராமச்சந்திரனை நீக்கிவிட்டு அந்தப் பொறுப்பை மனோவுக்குத் தருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உறுதியளித் திருந்தாராம். சமீபத்தில் 14 மாவட்டத் தலைவர்களை நீக்கிவிட்டு, புதியவர்களை நியமனம் செய்யும் பட்டியலுடன் மனோவுக்கான பரிந்துரையும் காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பப் பட்டுள்ளது. ஆனால், அந்தப் பட்டியல் சோனியாவின் பார்வைக்கே போகவில்லையாம். அந்தப் பரிந்துரை ஒரு சமூகத்துக்கு ஆதரவாகத் தயாரிக்கப்பட்டதாக எதிரணி போட்டுக்கொடுத்ததால், காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் முகுல் வாஸ்னிக்கிடமே நின்றுவிட்டதாம். அதன் பிறகுதான் மனோ விலகியதாகச் சொல்கிறார்கள்.’’

‘‘அவரும் ரஜினி மன்றத்தில் சேரப்போகிறாரா?”

‘‘கராத்தே தியாகராஜனுக்கும் அவருக்கும் ஆகாது என்பதால், ரஜினி மன்றத்தில் மனோ இணைவது சந்தேகம்தான். ஆனால், சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மாதவரம் சுதர்சனம் மூலமாக ஸ்டாலினைச் சந்திப்பதற்கு ஏற்பாடாகியிருக்கிறதாம். ‘கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதால், உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் அங்கிருந்து ஒருவர் தி.மு.க-வில் இணைவது சரியாக இருக்காது. 20 நாள்கள் போகட்டும். பிறகு வரச் சொல்லுங்கள்’ என்று சொல்லிவிட்டாராம் ஸ்டாலின்.’’

‘‘பழ.கருப்பையா ஏன் தி.மு.க-வைவிட்டு விலகினாராம்?’’

‘‘பழ.கருப்பையாவின் பேச்சுதான் அதற்குக் காரணமாம். ‘அ.தி.மு.க-வுக்கு எதிராக எந்த வீரியமான போராட்டத்தையும் நடத்தவில்லை. அறிக்கையுடன் நின்றுவிடுகிறார்கள். கட்சி, கார்ப்பரேட் கம்பெனியாகிவிட்டது’ என்று பேசியிருக்கிறார் அவர். இது மேலிடத்துக்கு கசிந்து, மனக்கசப்பு ஏற்பட்டுவிட்டது என்கிறார்கள். இதனால் தானாகவே விலகிவிட்டாராம். இப்போதைக்கு அவர் எந்தக் கட்சிக்கும் போவதாக இல்லையாம்’’ என்ற கழுகார், ஏர்போர்ட் மெட்ரோ ஸ்டேஷன் நிறுத்தம் வந்ததும் சிறகுகளை விரித்தார்.

வீடியோவை நீக்கினால் ரூ.10,000 சன்மானம்!

பெரிய கட்சித் தலைவர் ஒருவர் பேசுவதையெல்லாம் கிண்டலடித்து சிலர் ‘யூ டியூப்’பில் வீடியோக்களாக வெளியிடுகின்றனர். இந்த வீடியோக்கள் வைரலாகி அந்தத் தலைவரின் இமேஜையே சரிப்பதாக, சம்பந்தப்பட்ட கட்சியின் ஐ.டி விங் கணக்கெடுத்துள்ளது. தலைவரைக் கிண்டலடிக்கும் வீடியோக்களை ‘யூ-டியூப்’ தளத்திலிருந்து நீக்குவதற்காகவே சமீபத்தில் தனியார் ஐ.டி நிறுவனம் ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. ‘போட்ஸ்’ எனப்படும் தானியங்கி நிரல் மூலம் சம்பந்தப்பட்ட வீடியோக்களுக்கு அதிகமாக ரிப்போர்ட் அடித்து ‘யூ-டியூப்’ தளத்திலிருந்து நீக்கும் பணியை இந்தத் தனியார் நிறுவனம் செய்கிறது. ஒரு வீடியோவை நீக்குவதற்கு 10,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப் படுகிறதாம். இப்படி இதுவரையில் 34 வீடியோக்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் நீக்கியிருப்பதாக தகவல்.