Published:Updated:

உத்தரப்பிரதேசம்: மோடியின் வாரணாசி விசிட்... `பூர்வாஞ்சல்’ கணக்கு?! - ஓர் அரசியல் பார்வை

காசியில் பிரதமர் மோடி
News
காசியில் பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் உச்சகட்ட பாதுகாப்பை மீறி சாமானியர் அணிவித்த தலைப்பாகை, தொழிலாளர்களுடன் மதிய உணவு, அவர்களுடனேயே குழுப் புகைப்படம் என பிரதமரின் பல செயல்பாடுகள் பேசுபொருளாக மாறியிருக்கின்றன.

உத்தரப்பிரததேச மாநிலம், வாரணாசியிலுள்ள காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ள பகுதி விழாக்கோலம் பூண்டிருந்தது. பிரதமர் மோடியின் உச்சகட்ட பாதுகாப்பை மீறி சாமானியர் அணிவித்த தலைப்பாகை, தொழிலாளர்களுடன் மதிய உணவு, அவர்களுடனேயே குழுப் புகைப்படம் என பிரதமரின் பல செயல்பாடுகள் பேசுபொருளாக மாறியிருக்கின்றன.

இந்தியாவில் பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. ஆளும் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாடி கட்ச , பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டன. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்துவரும் நிலையில், பிரதமர் மோடி உத்தரப்பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உபி-யில் மூன்று புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்திருக்கிறார்.

காசியில் பிரதமர் மோடி
காசியில் பிரதமர் மோடி

அதில் ஒன்று வாரணாசியில் புனரமைக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் வளாகம். கங்கை நதியிலிருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்குள் பக்தர்கள் நேரடியாகச் செல்ல வேண்டும் என்பதற்காக 2019-ம் ஆண்டு 600 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்தத் திட்டத்தின் முதற்கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் 23 கட்டடங்கள், 339 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் திட்டத்துக்காக 300 பேரின் சொத்துகள் கையகப்படுத்தப்பட்டு, 1,400 கடைக்காரர்கள், வீட்டின் உரிமையாளர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டதாகவும், 40 பழைமையான கோயில்கள் இந்த புனரமைப்பு திட்டத்தின்போது கண்டுபிடிக்கப்பட்டு பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஜனவரி மாத முதல் வாரத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிடும் என்பதால், உத்தரப்பிரதேசத்தை மையப்படுத்தி திட்டங்கள் தொடங்கப்பட்டும் வருகின்றன என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். குறிப்பாக, பிரதமரின் தொகுதியான வாரணாசியில் அதிகப்படியான திட்டங்கள் தொடக்கப்பட்டுவருகின்றன.

கிழக்கு உத்தரப்பிரதேச பகுதியில் அமைந்துள்ள பூர்வாஞ்சல் பகுதியைக் குறிவைத்து பிரதமர் மோடி தொடங்கி, மத்திய அமைச்சர்கள், முதல்வர் யோகி வரை அதிகப்படியான கூட்டங்கள், திட்டங்களை அறிவித்துவருகிறார்கள். பூர்வாஞ்சல் பகுதியில் அதிக தொகுதியை கைப்பற்றுவதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிவிடலாம் என்பதான கணக்கு அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.

காசியில் பிரதமர் மோடி
காசியில் பிரதமர் மோடி

28 மாவட்டங்கள் கொண்ட பூர்வாஞ்சல் பகுதியில், 156 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. 2017-ம் ஆண்டு தேர்தலில் 106 இடங்களை பாஜக கைப்பற்றியது, 2012-ம் ஆண்டு சமாஜ்வாதி 85 இடங்களையும், 2007-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் 70 இடங்களையும் கைப்பற்றி கடந்த காலங்களில் ஆட்சியைப் பிடித்தன. 2017 தேர்தலின்போது கிழக்கு உ.பி-யில் அதிகப்படியான இடங்களை பாஜக கைப்பற்ற காரணமாக இருந்தது ஓம் பிரகாஷ் ராஜ்பரின் சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி. ஆனால் தற்போது சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த பூர்வாஞ்சல் பகுதியில் ராஜ்பர் சமூக வாக்குகள் 18 முதல் 20 சதவிகிதம் வரை இருப்பதால் வாரணாசி, கோரக்பூர் மற்றும் அசம்கர் உட்பட 125 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள். 2017-ம் ஆண்டு தேர்தலில் நான்கு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்ற ஓம் பிரகாஷ் ராஜ்பருக்கு மாநில அமைச்சரவையில் அமைச்சர் பதவியை பாஜக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு பக்கம் பாஜக பூர்வாஞ்சலைக் குறித்துவைத்து வேலை செய்துவரும் நிலையில் மறுபக்கம் பாஜக, பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து எம்எல்ஏ மற்றும் முக்கியத் தலைவர்களை தங்கள் பக்கம் இழுத்து வருகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ வினய் ஷங்கர் திவாரி மற்றும் முன்னாள் எம்.பி குஷால் திவாரி சமாஜ்வாடி கட்சிக்குத் தாவியுள்ளனர். அதேபோல பாஜக-வின் முக்கியத் தலைவர்களாக பார்க்கப்படும் முக்தார் அன்சாரி மற்றும் ஹரி சங்கர் திவாய் ஆகியோரை அகிலேஷ் யாதவ் தரப்பு தங்கள் பக்கம் கொண்டுவந்துள்ளது. இது தவிர ஆளும் பாஜக-வின் ஒன்பது எம்எல்ஏ-க்கள் கட்சி தாவயிருப்பதாகவும் கூறப்படுகிறது.

காசியில் பிரதமர் மோடி
காசியில் பிரதமர் மோடி

காசி கோயிலைச் சுற்றி 2022 சட்டமன்றத் தேர்தல் கணக்குகள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் 2015-ம் ஆண்டு அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் காசி விஸ்வநாதர் கோயிலைப் புனரமைக்க அமைச்சரை முடிவு செய்து நிதி ஒதுக்கீடு செய்ததாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். கோயிலைச் சுற்றி பல தலைமுறைகளாக வாழ்ந்துவரும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-வினரே புனரமைப்பு பணிக்காகக் கட்டடங்கள் இடிக்கப்படுவதற்கு 2019 முதல் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். புனரமைப்பு பணியின்போது பல கோயில் சிலைகள் இடிக்கப்பட்டதாகவும் அங்கு வாழும் மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

காசியில் பிரதமர் மோடி
காசியில் பிரதமர் மோடி

ஆனால் அங்குள்ள அதிகாரிகள் தரப்பு அதை மறுத்துள்ளது.17, 18, 19-ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட 3 முதல் 5 அடுக்கு கட்டடங்கள் இடிக்கப்பட்டதாகவும் பல தலைமுறைகளாக வாழ்ந்தவர்கள் தற்போது மாற்று இடம் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. காசி கோயிலுக்கு 100 மீட்டரில் இருந்த 200 ஆண்டு பழைமைவாய்ந்த மாணவர் விடுதியும் இடிக்கப்பட்டிருக்கிறது. சம்ஸ்கிருதம் கற்றுக்கொள்ள காசி வரும் மாணவர்கள் இங்கு தங்கி பயிற்சி பெற்றுவந்திருக்கிறார்கள். முன்பு இது காசி கோயில் தலைமை குருக்கள் மேற்பார்வையில் நிர்வகிக்கப்பட்டு வந்திருக்கிறது. 1983-ம் ஆண்டு அரசின் கட்டுப்பாட்டில் வருவதற்கு முன்னதாக இறுதியாக தலைமை குருக்களாக இருந்த ராஜேந்திர திவாரி இந்தப் புனரமைப்பு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

காசி கோயில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதாக 2019 -ல் பணி தொடங்கியதும் கோயிலுக்கு பத்து மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஞானவாபி மசூதி குறித்து பேச்சுகள் வந்து சென்றதும் அரசியலில் கவனிக்கப்பட்டது.

காசியில் பிரதமர் மோடி
காசியில் பிரதமர் மோடி

காசி விஸ்வநாதர் கோயில் புனரமைப்பு, அதை ஒட்டிய நிகழ்ச்சிகள் பிரதமர் மோடியின் பயணம் பாஜக-வின் வாக்குவங்கி அரசியலுக்கு நிச்சயம் உதவும் என பாஜக நம்புகிறது. அந்த அரசியல் கணக்கை முறியடிக்கும் வேலையை சமாஜ்வாடி கட்சி தொடங்கிவிட்டது. ``என்னைப் பொறுத்தவரை மக்களே எனது தெய்வங்கள்" என பிரதமர் மோடியின் பேச்சு தேர்தலில் எடுபடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!