Published:Updated:

தமிழகம், கேரளா, மேற்கு வங்க ஊர்திகளின் நிராகரிப்புக்குப் பின்னால்..! - விரிவான `அரசியல்’ பார்வை!

குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பு

தென்னிந்தியாவில் பா.ஜ.க ஆட்சி செய்துவரும் கர்நாடக மாநிலம் தவிர்த்து, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா என ஒட்டுமொத்த மாநிலங்களும் இந்த வருடம் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.

தமிழகம், கேரளா, மேற்கு வங்க ஊர்திகளின் நிராகரிப்புக்குப் பின்னால்..! - விரிவான `அரசியல்’ பார்வை!

தென்னிந்தியாவில் பா.ஜ.க ஆட்சி செய்துவரும் கர்நாடக மாநிலம் தவிர்த்து, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா என ஒட்டுமொத்த மாநிலங்களும் இந்த வருடம் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.

Published:Updated:
குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பு

`75-வது குடியரசு தினவிழா' அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது, கடும் எதிர்ப்புகளைச் சந்தித்துவருகிறது.

மத்திய பா.ஜ.க அரசை எதிர்த்து குரல் எழுப்பிவருகிற, 'கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டுள்ளன' என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு, 'இது இயல்பான நடைமுறைதான்... எதிர்க்கட்சிகள்தான் திட்டமிட்டே அரசியல் செய்கின்றன' என்று பதிலடி கொடுத்துவருகின்றனர் பா.ஜ.க-வினர்.

தேசியக்கொடி
தேசியக்கொடி

இதையடுத்து, 75-வது குடியரசு தின விழாவைக் கொண்டாடுகிற நேரத்தில், இப்படியொரு சர்ச்சை உருவானதன் பின்னணி என்ன, உண்மையிலேயே இந்த விவகாரத்தில் அரசியல் செய்வது யார் என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுகின்றன.

டெல்லியில், வருகிற 26-ம் தேதி '75-வது குடியரசு தின விழா' கோலாகலமாக நடைபெறவிருக்கிறது. இதையொட்டி டெல்லி ராஜ பாதையில், ராணுவ வீரர்கள் மற்றும் தளவாடங்களின் அணிவகுப்பும் நடைபெறவிருக்கின்றன. இந்த அணிவகுப்பில், நாட்டின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பது வழக்கமான நடைமுறை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், இந்த முறை இந்த அணிவகுப்பில், மேற்கு வங்க மாநில ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகச் செய்தி வெளியானதையடுத்து, அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், 'இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத் தலைவரும், போராளியுமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-ம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, மேற்கு வங்கத்தின் சார்பில் அவரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையிலான அலங்கார ஊர்தியை சிறப்பான முறையில் தயார் செய்திருந்தோம்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

மேலும், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர், ரவீந்திரநாத் தாகூர், விவேகானந்தர் உள்ளிட்ட தேசபக்தர்களின் உருவப் படங்களைத் தாங்கிய வகையில் தயார்செய்யப்பட்டிருக்கும் மேற்கு வங்க அலங்கார ஊர்தியை குடியரசு தின விழாவில் அனுமதியளிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

மத்திய பா.ஜ.க அரசுடன் அரசியல்ரீதியாக நேருக்கு நேர் மோதிவருபவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இந்த நிலையில், குடியரசு தின அணிவகுப்பில் மேற்கு வங்கம் புறக்கணிக்கப்பட்டதும், இதை பிரதமரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று மம்தா பானர்ஜி அனுமதி கேட்டதும், அரசியல் அரங்கில் பல்வேறு விவாத அலைகளை உருவாக்கியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள்ளாக 'தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கும் அனுமதி இல்லை' என்ற செய்தி பரவியது. மேலும், 'தமிழக அலங்கார ஊர்தியில் இடம்பெற்றுள்ள வ.உ.சி., வேலுநாச்சியார், பாரதியார் உள்ளிட்ட தலைவர்கள் தேசிய அளவில் பிரபலமாகாத தலைவர்கள். எனவே, தமிழகத்தின் அலங்கார ஊர்திக்கு குடியரசு தின அணிவகுப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது' என்ற அதிகாரபூர்வமற்ற செய்தியும் பரவவே... ஊடகங்கள் மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் வாதப் பிரதிவாதங்கள் அனல்பறக்க ஆரம்பித்தன.

மகாகவி பாரதியார்
மகாகவி பாரதியார்

இதற்கிடையே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், 'தமிழகத்தில் உள்ள பல சுதந்திரப் போராட்ட வீரர்களில் வ.உ.சிதம்பரனார், பாரதியார், வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகியோரும் விளங்குகிறார்கள். எனவே, அவர்களின் சித்திரிப்புகளைக்கொண்ட அலங்கார ஊர்தி விலக்கப்பட்டிருப்பது, தமிழக மக்களின் உணர்வுகளைக் கடுமையாக காயப்படுத்துவதாக அமைந்துள்ளது' என பிரதமரின் கவனத்துக்குக் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து அரசியல்ரீதியான விமர்சனங்கள் காரசாரமாகிவருகின்றன.

'எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்துவரும் மாநிலங்களை மத்திய பா.ஜ.க அரசு திட்டமிட்டே புறக்கணித்துள்ளது. குறிப்பாக, தென்னிந்தியாவில் பா.ஜ.க ஆட்சி செய்துவரும் கர்நாடக மாநிலம் தவிர்த்து, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா என ஒட்டுமொத்த மாநிலங்களும் இந்த வருடம் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.

கடந்தகாலங்களில் தமிழக அலங்கார ஊர்தியில் பண்பாட்டு அடையாளமாக கோயில் கோபுரங்கள் இடம்பெற்றிருந்ததால் அனுமதி அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இம்முறை செக்கிழுத்த செம்மல், வீரமங்கை, முண்டாசுக் கவிஞன் உள்ளிட்ட தென்னிந்தியத் தலைவர்களின் படங்கள் இடம்பெற்றிருந்தன. நாட்டுக்காக உயிரையே அர்ப்பணித்துப் போராடிய நம் முன்னோர்களது தியாகத்தை அவமதிப்பு செய்யும் வகையில், மத்திய அரசு நடந்துகொண்டிருக்கிறது’ என்ற குற்றச்சாட்டுகள் வரிசைகட்டின.

வேலு நாச்சியார்
வேலு நாச்சியார்

அண்மையில்கூட வேலு நாச்சியார் பிறந்தநாளன்று அவரைப் புகழ்ந்து ட்வீட் செய்திருந்தார் பிரதமர் மோடி. ஆனால், அவரின் ஆட்சியிலேயேதான் குடியரசு தின ஊர்வலத்தில் வேலு நாச்சியார் உருவப் படத்துக்கு அனுமதி இல்லை.

`மதம் சார்ந்த வெறுப்புணர்வு, எதிர்க்கட்சிகள் மீதான காழ்ப்புணர்ச்சியோடு தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பது வட இந்தியரின் ஆதிக்க ஆணவத்தையும், பா.ஜ.க அரசின் அதிகாரத் திமிரையும் மட்டுமே பறைசாற்றுகிறது. வட இந்தியாவையும் வட இந்தியத் தலைவர்களையும் மட்டுமே முன்னிறுத்தி சுதந்திரப் போராட்ட வரலாற்றையே திரித்து எழுதியவர்கள், முக்கியத்துவம் வாய்ந்த 75-வது குடியரசு தின அணிவகுப்பிலும் அதைக் கடைப்பிடித்துவருவது இந்திய ஜனநாயகத்தையே குழிதோண்டிப் புதைப்பதாக அமைந்துள்ளது' என்று மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராகக் குமுறுகின்றனர்.

கேரள மாநிலத்தின் சார்பிலான அலங்கார ஊர்தியில், சாதி எதிர்ப்பு சமூக சீர்திருத்தவாதியான நாராயண குருவின் புகைப்படம் இடம்பெறுவதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், நாராயண குருவுக்கு பதிலாக அத்வைத தத்துவத்தை முன்னிறுத்திய இறையியலாளர் ஆதி சங்கராச்சாரியார் படத்தை இடம்பெறச் செய்யுமாறு கேரள அரசுக்கு மத்திய பாதுகாப்புத்துறை நிபுணர் குழு பரிந்துரைத்ததாகவும், கேரள அரசு இந்தப் பரிந்துரையை ஏற்க மறுத்ததால் அந்த மாநிலம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

வ.உ.சிதம்பரனார்
வ.உ.சிதம்பரனார்

இது குறித்துப் பேசுவோர், 'சமூக சீர்திருத்தவாதியான நாராயண குருவின் புகைப்படத்தை கேரள மாநில அலங்கார ஊர்தியில் இடம்பெறச் செய்வதற்காக கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து முயன்றுவருகிறோம். ஆனால், மத துவேஷ எண்ணம்கொண்ட மத்திய பா.ஜ.க அரசு, கேரள அரசின் முயற்சிக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுவருகிறது. சமூக முற்போக்கு எண்ணங்களைப் பின்னுக்குத் தள்ளி, மக்களிடையே பிற்போக்குத்தனமான மத அரசியலைப் பரப்பும் வகையில் மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து செயல்பட்டுவருவது வேதனைமிக்கது' என்கின்றனர் வேதனையோடு.

இதற்கிடையே, குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு பதில் அளிக்கும் வகையில், மத்திய அரசு வட்டாரங்கள் தரப்பிலான விளக்கம் வெளியாகியுள்ளது. அதில், 'குடியரசு தின அணிவகுப்பு அலங்கார ஊர்திகளை மத்திய அரசு தேர்வு செய்வதில்லை. மாறாக, இதற்கென்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள்தான் மாநிலங்களுடன் நீண்ட ஆலோசனைகள் செய்து அலங்கார ஊர்திகளுக்கான அனுமதியை வழங்கிவருகின்றனர்.

மமதா பானர்ஜி - மு.க.ஸ்டாலின் - பினராயி விஜயன்
மமதா பானர்ஜி - மு.க.ஸ்டாலின் - பினராயி விஜயன்

இந்த ஆண்டு அணிவகுப்புக்கு 56 அலங்கார ஊர்தி யோசனைகள் வந்தன. ஆனால், நேரக் கட்டுப்பாடு மற்றும் பலகட்ட ஆலோசனைகள் காரணமாக 21 ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் கடந்தகால காங்கிரஸ் கட்சி ஆட்சியின்போதும் நிகழ்ந்துள்ளன. அப்போதெல்லாம் மாநில மக்களை, மத்திய அரசு இழிவுபடுத்திவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததில்லை. ஆனால், தற்போது சில மாநில முதலமைச்சர்கள் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான மோதலாகத் திட்டமிட்டு சித்திரிக்கிறார்கள்' என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளது.

மேலும், தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ள மாநிலங்கள் கடந்தகால குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சிகளின்போது பங்கேற்ற - பங்குபெற அனுமதி மறுக்கப்பட்டுள்ள விவரங்களையும் ஆண்டுவாரியாக புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

ஆனாலும்கூட '' 'ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே மதம்' என்ற சிந்தனைக்குள் 130 கோடி மக்களையும் அடைக்கப்பார்க்கிறது மத்திய பா.ஜ.க அரசு. அதற்காக பல்வேறு வடிவங்களில் மாநில அரசுகள்மீது அதிகாரத் திணிப்புகள் அரங்கேறிவருகின்றன. பெருமதிப்புவாய்ந்த 75-வது குடியரசு தின அணிவகுப்பு நிகழ்வில், அனைத்து மாநில அலங்கார ஊர்திகளையும் பங்குபெறச் செய்யாமல், பாகுபாடு காட்டியிருப்பதே பா.ஜ.க-வின் வெறுப்பரசியலுக்கு வெளிப்படையான உதாரணம்.

ராஜ் நாத் சிங்
ராஜ் நாத் சிங்

எதிர்ப்புகள் கிளம்புகிறபோதெல்லாம் முந்தைய காங்கிரஸ் அரசை உதாரணம் காட்டுவது பா.ஜ.க-வினருக்குப் புதிதல்ல. அவர்களைப் பொறுத்தவரையில், மதரீதியிலாக நாட்டை கற்காலத்துக்கு இழுத்துச்செல்வது மட்டுமே நோக்கம். எனவே, முற்போக்காக சிந்தித்து முன்னேறுகிற மாநிலங்களையும் எதிர்க்கட்சியினரையும், ஒடுக்குவதையும் பழிவாங்குவதையும் தங்கள் அரசியல் அதிகாரத் துணையோடு திட்டமிட்டுச் செய்துவருகிறார்கள்.

கடந்தகாலங்களிலும் இதேபோல், குறிப்பிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனக் கூறுகின்றனர். உண்மைதான்... அன்றைய சூழலில், நிபுணர் குழு பரிந்துரை என்ன, பங்கேற்க முடியாமல் போனதன் காரணம் என்னவென்பதெல்லாம் சர்ச்சைக்குரியதாக இருந்திருக்கவில்லை. ஆனால், தற்போது இந்திய சுதந்திர வரலாற்றை அறியாதவர்களை நிபுணர் குழுவில் நியமிப்பதும், அரைகுறை புரிதலோடு பா.ஜ.க சித்தாந்தத்தை திணிக்கும் முயற்சியாகவும் இந்தக் குழுவினர் செய்துவரும் செயல்திட்டங்களை மத்திய பா.ஜ.க அரசு கண்டும் காணாமல் இருப்பதுவும்தான் கேள்விக்குரியதாகிறது.

பெருமைமிகு 75-வருட குடியரசு தின வரலாற்றில், சுதந்திரப் போராட்ட வரலாற்று நாயகர்களின் தியாகத்தைப் பறைசாற்றாமல், சாதனை, தீர்வு என அணிவகுப்பின் மையக் கருத்தையே திசைதிருப்பியதிலிருந்தே பா.ஜ.க-வின் அரசியல் ஆரம்பமாகிவிட்டது. சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தைப் பற்றியெல்லாம் அவர்களுக்குத் துளியும் அக்கறையில்லை. ஜனவரி 26-ம் தேதியன்று அணிவகுக்கிற அலங்கார ஊர்திகளைப் பார்த்தாலே தெரிந்துவிடும்... நிபுணர்குழுவின் பரிந்துரையின் நோக்கமும்'' என்கின்றனர் இந்த விவகாரத்தில் மத்திய பா.ஜ.க அரசைக் குற்றம்சாட்டுபவர்கள்.

பா.ஜ.க-வினரோ, ''மத்திய பா.ஜ.க அரசை மக்கள் விரோத அரசாக மக்களிடையே கட்டமைப்பதுதான் எதிர்க்கட்சிகளின் செயல்திட்டமாகவே இருக்கிறது. அதற்கான டூல் கிட்டாக குடியரசு தின அணிவகுப்பைப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்தே, அணிவகுப்பு ஊர்திகள் பற்றிய மையக் கருத்தும், அது தொடர்பான ஆலோசனைகளும் ஒவ்வொரு மாநிலத்திடமிருந்தும் முறையாகப் பெறப்பட்டு, அறிவுரைகளும் வழங்கப்பட்டே வந்திருக்கின்றன. ஆனாலும்கூட, குடியரசு தின நெருக்கத்தில் வந்து ஒட்டுமொத்தப் பழியையும் மத்திய பா.ஜ.க அரசு மீது சுமத்தி, மக்களின் கோபத்தை பா.ஜ.க பக்கமாகத் திருப்பிவிடத் திட்டமிடுகிறார்கள். அவர்களது எந்த முயற்சிக்கும் மக்கள் மயங்கிவிட மாட்டார்கள்'' என்கின்றனர் தெளிவாக.

இதற்கிடையே கவிப்பேரரசர் வைரமுத்து, 'தமிழ்நாட்டு ஊர்தியை நிராகரிப்பது ஒன்றிய அரசின் அதிகாரம். ஆனால், காரணங்கள் சரியில்லை. வ.உ.சி வியாபாரியாம். வேலுநாச்சி ஜான்ஸிராணி சாயலாம், மருதிருவர் தீவிரவாதிகளாம். நிபுணர்குழுவின் புரிதல் இது. திருத்துவதற்கு நேரமிருக்கிறது. எங்களுக்கும் பொறுமை இருக்கிறது' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையோடிருப்போம்..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism