Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

கடந்த ஆட்சியில் ராஜகுருவாக இருந்து ஆலோசனை வழங்கிய புள்ளிக்கு, பெரிய அளவில் போலீஸ் பாதுகாப்பு வழங்கி தன் விசுவாசத்தை நிரூபித்தார் துணிவானவர். அதே பாதுகாப்பு, ராஜகுருவாக விளங்கிய புள்ளிக்கு இப்போதும் தொடர்கிறது. ‘ஆட்சி மாறலாம், காட்சிகள் மாறாது’ எனக் காதைக் கடிக்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில். #கூட்டிக் கழிச்சுப் பாருங்க… ஆடிட்டர் கணக்கு கரெக்டா வரும்!

விசில் கட்சியிலிருந்து அணி மாறி, தாய்க்கழகத்துக்கு வந்த நிர்வாகிகளுக்குச் சம்பந்தமே இல்லாத எண்களிலிருந்து அழைப்பு வருகிறதாம். ‘பணம் தேவைப்பட்டால் சொல்லுங்கள். துணிவானவர் உங்களுக்குக் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்’ என்கிறார்களாம். ‘உண்மையாகவே துணிவானவர்தான் கேட்கச் சொல்கிறாரா… இல்லை வேறு யாரும் விளையாடுகிறார்களா?’ என அணி மாறிய நிர்வாகிகளுக்குக் குழப்பம். ‘தேர்தலில் நிறைய செலவு பண்ணிக் கஷ்டப்பட்டிருப்பீங்க. அதனால நான்தான் கேட்கச் சொன்னேன்’ என முக்கிய சோர்ஸ் மூலம் சொல்லி, குழப்பத்தைத் தீர்த்தாராம் துணிவானவர். #எட்டணா இருந்தா... எட்டு ஊரு எம்பாட்டக் கேக்கும்!

கிசுகிசு

உள்ளாட்சித் தேர்தலை முடித்துவிட்டு, நாடாளுமன்றத் தேர்தலுக்கு இடைப்பட்ட இடைவெளியில், வம்பு நடிகரை வைத்து ஓர் படத்தை இயக்கிவிட வேண்டும் என நினைத்தார் அண்ணன் தலைவர். இதற்கிடையில், வம்பு நடிகருக்குச் சொன்ன கதை சில மாற்றங்களுடன் தெலுங்கில் தயாராவதாகச் சொல்லப்பட, உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னரே தனது படப்பிடிப்பைத் தொடங்கிவிட நினைக்கிறாராம் அண்ணன். கதை விவாதம் வேகமாக நடக்கத் தொடங்கியிருக்கிறது. #அண்ணன்கிட்ட இல்லாத கதையா... ஹீரோ அ.க.47 எடுத்து வில்லன் வயித்துலேயே சுடுவார்ல?

பவன்புள்ளி மாறப்போகிறார் எனப் பரபரப்பான செய்திகள் வருகிறதே தவிர, ஆள் மாறியபாடில்லை. இந்தமுறை அவரை மாற்ற டெல்லி முயன்றது உண்மைதானாம். அது தெரிந்து, முன்னெச்சரிக்கையாக முக்கியத் தலைவரைச் சந்தித்த அவர், சில உறுதிகளை வழங்கினாராம். அதுதான் பவன்புள்ளியின் பதவி மாற்றத்தைத் தள்ளிப்போட வைத்ததாம். #வரும்... ஆனா... வராஆஆஆது!

‘மணல் விஷயத்தில் தலையிடவே மாட்டேன். எனக்கு அந்த ஆசையெல்லாம் கிடையவே கிடையாது’ எனத் தன்னிலை விளக்கம் கொடுத்த பக்கத்து மாநில ரெய்டு புகழ் புள்ளி, கடந்த ஆட்சியில் தனக்கு நிழலாக விளங்கிய இனிஷியல் புள்ளிக்கு மணல் ஒப்பந்தத்தை சைலன்ட்டாகப் பெற்றுக்கொடுக்கப்போகிறாராம். திருமதி முதன்மையின் ஒப்புதலும் கிடைத்துவிட்டதாம். கடந்த ஆட்சியில் கோலோச்சியவர்களே இந்த ஆட்சியிலும் மணல் மாஃபியாக்களாகக் கொடிநாட்டப் போகிறார்களாம். #கோவிந்தா... கோவிந்தா!

மாஜிக்கள் பலரும் பல ரூட்டில் ஆளுங்கட்சியிடம் சரண்டராக, இப்போதைக்குப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் வேகம்காட்ட வேண்டாம் என்று அமைதிகாக்கச் சொல்லியிருக்கிறார் முதன்மையானவர். ஆனாலும் சிலரைக் குறிப்பிட்டு, ‘நடவடிக்கை பட்டியலில் இவர்கள் பெயர் நிச்சயம் இருக்க வேண்டும்’ என்று சொன்னதோடு, அதில் ‘இரண்டு பேருக்கு மன்னிப்பே கிடையாது’ எனச் சொல்லி, அவர்கள் சம்பந்தப்பட்ட அத்தனை விவகாரங்களையும் தோண்டித் துருவ உத்தரவு போட்டிருக்கிறாராம். பெல் மாஜி, குட்கா மாஜி இருவரும்தான் டார்கெட் லிஸ்ட்டில் இருக்கும் முதலிரண்டு புள்ளிகளாம். #சோகம் என்னன்னா... முகேஷை எங்களால காப்பாத்த முடியலை!

கிசுகிசு

ஆக்‌ஷன் நடிகர், ஆஞ்சநேயர் கோயில் கட்டிவரும் விஷயம் வெளியே தெரிந்தபோதே ‘அந்தக் கோயிலுக்குச் செல்ல வேண்டும்’ எனச் சொல்லியிருந்தாராம் சின்ன தலைவி. இதற்கிடையில், கோயில் திறக்கும் நேரத்தில் ஆக்‌ஷன் நடிகர் முதன்மையானவரை நேரில் சந்தித்தார். இதனாலோ என்னவோ, ஆஞ்சநேயர் தரிசனத்தைத் தள்ளிப்போட்டிருக்கிறார் சின்ன தலைவி. #போற திசையெல்லாம் முட்டுச்சந்தாவே இருக்கே!

கட்சியைவிட்டு ஒவ்வொருவராகக் கழன்றுகொண்டிருக்கும் இக்கட்டைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறுகிறார் நறுமணத் தலைவர். “ `கட்சியைக் கலைத்தால், மத்திய அமைச்சர் பதவியே தருகிறேன்’ என்றார்கள். நான் `கட்சிதான் முக்கியம்’ எனச் சொல்லிவிட்டேன். கட்சிமீது நான் காட்டும் அக்கறையைக் கட்சியால் நன்மை பெற்றவர்கள்கூடக் காட்டுவதில்லையே…” என நெருங்கியவர்களிடம் புலம்பியிருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் உரிய வாய்ப்புகளைப் பெற்றுத் தருவேன் எனவும் உறுதி கூறுகிறாராம். #எதே... பஞ்சரான சைக்கிளை வெச்சு பந்தயத்துல கலந்துக்கிறதா?!