Published:Updated:

`அரசியலும் கிரிக்கெட்டை போலத்தான், எதுவும் நடக்கும்!- மகாராஷ்டிரா அரசியல் பற்றி நிதின் கட்கரி சூசகம்

`அரசியலும் கிரிக்கெட்டை போலத்தான்’ என மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் பற்றி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார்.

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

மகாராஷ்டிராவில் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக நடந்துவரும் அரசியல் சிக்கல் தேசிய அளவில் கவனம் ஈர்த்துவருகிறது. அந்த மாநிலத்தில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றிய பா.ஜ.க, சிவசேனா மற்றும் என்.சி.பி ஆகிய மூன்று கட்சிகளும் ஆட்சியமைக்க முன்வராததாலும், அவர்களுக்குப் போதுமான பெரும்பான்மை இல்லாததாலும் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

பா.ஜ.க - சிவசேனா
பா.ஜ.க - சிவசேனா

தேர்தலுக்கு முன்னர் கூட்டணி வைத்து வெற்றி பெற்ற பா.ஜ.க - சிவசேனாவுக்கும் இடையே ஏற்பட்ட பதவி மோதலே இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த இரு கட்சிகளுக்குள்ளும் நடந்த அனைத்துப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

கடைசியாக பி.ஜே.பி முன்வைத்துள்ள 3 சான்ஸ்!- செவிசாய்க்குமா சிவசேனா?

சிவசேனாவுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் நிதின் கட்கரி, இதில் தலையிட்டுப் பேசினால் மகாராஷ்டிரா பிரச்னைக்கு ஒரு தீர்வு காணமுடியும் என கூறப்பட்டது. ஆனால், அதுவும் சரிவராமல் தற்போது சிவசேனா, பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகி என்.சி.பி மற்றும் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகிறது.

சோனியா- பவார்- உத்தவ்
சோனியா- பவார்- உத்தவ்

இந்த நிலையில், நேற்று மாலை மகாராஷ்டிராவில் நடந்த ஒரு வணிக கருத்தரங்கில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அம்மாநில அரசியல் குறித்துப் பேசியுள்ளார். ``அரசியலும் கிரிக்கெட்போலத்தான். கிரிக்கெட் மற்றும் அரசியலில் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம். கிரிக்கெட் விளையாடும்போது சில சமயங்களில் நீங்கள் போட்டியில் தோல்வியடைந்ததாக நினைக்கலாம். ஆனால், போட்டியின் முடிவில் எதிர்பாராதவிதமாக வெற்றியடையலாம். அதேபோலத்தான் அரசியலும்.

`அலர்ட்’ சிவசேனா; தாக்கரேவின் நைட் விசிட்! - இறுதிக்கட்டத்தில் மகாராஷ்டிரா அரசியல் களம்

நான் இப்போதுதான் டெல்லியிலிருந்து மகாராஷ்டிரா வந்துள்ளேன். இங்கு நடக்கும் அரசியல் நிலவரங்கள் குறித்து எனக்குத் தெரியவில்லை. அறிந்த பிறகு முழுமையாகப் பேசுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, ‘ மகாராஷ்டிராவில் பா.ஜ.க ஆட்சி அமையவில்லையென்றால் இங்கு நடக்கும் திட்டங்களும் கைவிடப்படுமா?’ எனப் பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி கேட்டுள்ளனர்.

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

அதற்கு கட்கரி, ``மகாராஷ்டிராவில் யார் ஆட்சிவேண்டுமானாலும் அமையலாம், ஆனால், நடைமுறையில் உள்ள திட்டங்கள் எந்தக் காரணத்துக்காகவும் கைவிடப்படாது. அதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. மகாராஷ்டிராவில் பா.ஜ.க., என்.சி.பி, காங்கிரஸ் என யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்” எனத் தெரிவித்துள்ளார். `அரசியலில் எதுவும் நடக்கலாம்’ என நிதின் கட்கரி கூறியுள்ளது மகாராஷ்டிர அரசியலில் அதிக கவனம் பெற்றுள்ளது.