Published:Updated:

நெருங்கும் 2021 தேர்தல்; அதிர்ச்சி கொடுத்த வாக்குகள்! -பா.ஜ.க வளர்ச்சியால் கடுகடுத்த மம்தா

மேற்குவங்கத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸுக்கு பா.ஜ.க பெரும் போட்டியாக இருந்துள்ளது.

மேற்கு வங்கம் என்றாலே கம்யூனிஸ்ட்டுகளின் அசைக்கமுடியாத கோட்டை என்பது பலரும் அறிந்த விஷயமே, ஆனால், 2011-ம் ஆண்டு அந்தக் கோட்டையை ஒற்றை ஆளாக நின்று தகர்த்தார் மம்தா பானர்ஜி. அந்த ஆண்டு நடந்த தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 150 இடங்களுக்கும் மேல் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. அப்போது பா.ஜ.க-வால் மேற்குவங்கத்தில் கால்கூட பதிக்கமுடியாத நிலை இருந்தது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

2014-ம் ஆண்டு நாடு முழுவதும் மோடி அலை வீசியது, ஆனால் அந்த அலையால் மேற்குவங்கத்தை மட்டும் எதுவுமே செய்யமுடியவில்லை. 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் மம்தாவை யாராலும் வீழ்த்த முடியவில்லை. 2011 தேர்தலைவிட இன்னும் வீறுகொண்டு எழுந்து 200 தொகுதிகளைக் கைப்பற்றியது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி. மம்தாவின் வளர்ச்சி கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு அதிகப்படியான கோபத்தையும் அச்சத்தையும் ஒருசேர கொடுத்தது.

தாங்கள் பெரும்பான்மை இழந்தாலும் பரவாயில்லை, ஆனால் எந்தக் காரணத்துக்காகவும் மம்தா வெற்றிபெறக் கூடாது என்ற நோக்கத்துடன் இருந்த கம்யூனிஸ்ட்டுகள், பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளித்து அவர்களுக்காகப் பிரசாரம் மேற்கொள்ளத் தொடங்கினர். இந்த இரண்டு கட்சிகளின் கூட்டணி மம்தாவுக்கு பெரும் தலைவலியாக மாறியது. இதன் எதிரொலியாக 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 22 தொகுதிகளிலும், பா.ஜ.க 18 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது.

பா.ஜ.க
பா.ஜ.க

`இதேநிலை தொடர்ந்தால், விரைவில் மம்தா மேற்குவங்க அரசிலிருந்து வெளியேற்றப்படுவார்' என்பதால் 2021-ம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் எப்படியேனும் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இதற்காகத் `தேர்தல் வித்தகர்' பிரசாந்த் கிஷோரின் உதவியையும் அவர் நாடியுள்ளார்.

`ஒட்டுக்கேட்கிறார்கள்... போனில் சுதந்திரமாகப் பேச முடியவில்லை!' - அலறும் மேற்குவங்க முதல்வர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், அந்த மாநிலத்தில் கடந்த திங்கள்கிழமை மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அந்த மூன்று தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ்தான் வெற்றி பெற்றது, ஆனால், மம்தாவால் இந்த வெற்றியை முழு மனதாக கொண்டாட முடியவில்லை. காரணம் இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளே காரணம்.

மோடி - அமித்ஷா
மோடி - அமித்ஷா

கலியாகுஞ் (Kaliagunj) தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் 97,417 வாக்குகளும் பா.ஜ.க வேட்பாளர் 94,999 வாக்குகளும் பெற்றுள்ளனர். கரக்பூர் சதார் தொகுதியில் டி.எம்.சி 72,424 வாக்குகளும் பா.ஜ.க 51,613 வாக்குகளும் பெற்றுள்ளன. கால்பதிக்கவே முடியாத கட்சியாக இருந்த பா.ஜ.க தற்போது திரிணாமுல் காங்கிரஸுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

இதனால் 2021-ம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் இடைத்தேர்தல் வெற்றி தொடர்பாகப் பேசியுள்ள மம்தா பானர்ஜி, `` பா.ஜ.க-வின் ஆணவத்தை மக்கள் தோற்கடித்துள்ளனர். மத்திய அரசு, மேற்குவங்கத்தில் என்.ஆர்.சி-யை கொண்டுவரவுள்ளதாகவும் இங்குள்ள மக்களை விரட்டவுள்ளதாகவும் மிரட்டி வருகிறது. நாம் அனைவரும் குடிமக்கள்தான். அதனால் ஒவ்வொருவருக்கும் இந்த மண்ணில் குடியிருக்க உரிமை உண்டு.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

கம்யூனிஸ்ட்டுகளும் காங்கிரஸும் ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். இரு கட்சிகளும் தங்களை பலப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு பா.ஜ.க-வை வலிமையாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எனக்குத் தேசிய அளவில் காங்கிரஸ் மீது ஒரு மதிப்பு உள்ளது. ஆனால், மேற்குவங்கத்தைப் பொறுத்தவரையில், அவர்கள் பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளிக்கிறார்கள், இது மிகவும் வருத்தமளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு