Published:Updated:

ரஜினிக்கு ரத்து... விஜய்க்கு விசாரணை - ஐ.டி விவகாரங்களுக்குப் பின் உள்ள அரசியல் என்ன?

ரஜினிக்கு ரத்து... விஜய்க்கு விசாரணை
News
ரஜினிக்கு ரத்து... விஜய்க்கு விசாரணை

தமிழ்த் திரையுலகில் ரஜினிக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்கிற பேச்சும் உண்டு. ஆனால், அரசியல்ரீதியாக ரஜினியின் கருத்தும் விஜய்-யின் கருத்தும் எதிரும் புதிருமாகவே இருந்திருக்கின்றன. உதாரணமாக சில சம்பவங்களைப் பார்க்கலாம்.

தமிழகத்தில், கடந்த ஒருவார காலத்தில் மக்களின் பேராதரவைப் பெற்ற இரு ஸ்டார் நடிகர்கள் சம்பந்தப்பட்ட இரு வேறு காட்சிகளைத் தற்போது பார்க்கலாம்.

காட்சி 1 : ரஜினிகாந்த் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் ரத்து!

2002 முதல் 2005 வரையிலான மூன்று ஆண்டுகளில், நடிகர் ரஜினிகாந்த் தாக்கல் செய்த வருமானவரி ஆவணங்களில் குறைபாடுகள் இருப்பதாக அவருக்கு 66,22,436 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. அவர்மீது மூன்று வழக்குகள் பதியப்பட்டன. இந்த நிலையில், கடந்த வாரம் வருமான வரித்துறை மேல்முறையீட்டுத் தீர்மானத்தில் ரஜினிகாந்த் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் ரத்துசெய்யப்பட்டன. அதற்கு, ரஜினிகாந்த் சரியான விளக்கம் அளித்துவிட்டதாக வருமானவரித்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த விளக்கம் மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. அந்த விளக்கத்தை விமர்சித்து நடிகர் ரஜினிகாந்த் பெயருடன் போடப்பட்ட ட்வீட்டுகள் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தன. இது ஒரு கதை.

(ரஜினிகாந்த் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்ட விவகாரம் குறித்த கட்டுரையைப் படிக்க, இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்.)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
விஜய்
விஜய்

காட்சி 2 : நடிகர் விஜய் மீது கெடுபிடி!

நடிகர் விஜய், `பிகில்' படத்தில் பெற்ற சம்பளம் தொடர்பாக விசாரிக்க, நெய்வேலிக்குச் சென்று ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே சம்மன் அளித்து விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள் வருமானவரித்துறை அதிகாரிகள். அதோடு மட்டுமல்லாமல், மேற்கொண்டு விசாரிக்க சென்னை வரவேண்டும் என விஜய்யை அழைக்க, ஈவ்னிங் ஷூட்டிங் முடிந்ததும் நேராக வருகிறேன் எனச் சொல்ல, எங்களுடன் இப்போதே... அதுவும் எங்கள் காரிலேயே வரவேண்டும் என வழுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளனர். இது, ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தவர்களை மட்டுமல்லாது, தமிழகம் முழுவதுமுள்ள விஜய் ரசிகர்களையும் கொதிப்படைய வைத்துள்ளது. அப்போதே #WeStandWithVijay என்னும் ஹேஷ்டேக்குடன், விஜய் ரசிகர்களின் ட்வீட்டுகள் பறந்தன.

(விஜய் ரெய்டு பின்னணி குறித்த கட்டுரையைப் படிக்க, இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்.)

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ரஜினியிடம் மிகவும் நெகிழ்வுத்தன்மையோடு நடந்துகொள்ளும் வருமானவரித்துறை, விஜய்-யிடம் இவ்வளவு கடுமை காட்டுகிறது என்றால், இந்த இரு சம்பவங்களுக்குப் பின்னால் பல்வேறு காரணிகள் புதைந்துள்ளன. வருமானவரித்துறை, மத்தியில் ஆளும்தரப்பின் கைப்பாவையாகச் செயல்படுகிறது என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை இந்த இரு வேறு சம்பவங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

ரஜினி துக்ளக் விழாவில்
ரஜினி துக்ளக் விழாவில்

பெரியார் விமர்சனத்துக்குப் பரிசு... அரசியல் நகர்வுக்கு கெடுபிடி!

நடந்துமுடிந்த துக்ளக் பொன்விழா மேடையில் தி.மு.க குறித்தும் பெரியார் குறித்தும் ரஜினி தெரிவித்த கருத்துகள் மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கின. ரஜினிக்கு எதிராக சில மாவட்ட காவல் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டன. இந்தச் சம்பவத்துக்கு ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனப் பலர் போர்க்கொடி உயர்த்த, `வருத்தம் தெரிவிக்க முடியாது' என அறிவித்தார் ரஜினி. திராவிட இயக்கங்களும் தி.மு.க-வும் இந்துக்களுக்கு எதிரான அமைப்புகள் போன்ற ஒரு தோற்றத்தை ரஜினியின் பேச்சு உருவாக்கியது. இது, மத்தியில் ஆளும் பா.ஜ.க -வின் அரசியலுக்கு மிகவும் சாதகமான ஒன்றாக அமைந்தது. ஆளும்தரப்பின் குரலாகவே ரஜினியின் கருத்துகள் ஒலித்தன என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. ரஜினியின் பெரியார் குறித்த பேச்சுக்குப் பரிசாகத்தான் ரஜினிக்கு இந்த வருமானவரி வழக்கு ரத்து அறிவிப்பு பரிசளிக்கப்பட்டுள்ளது என்கிற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. மறுபுறம், நடிகர் விஜய்-யின் ஆளும் தரப்புக்கு எதிரான கருத்துகளும் அவர் தந்தையின் சமீபத்திய அரசியல் நகர்வுகளும்தான் விஜய்க்கு எதிராக வருமானவரித்துறை இவ்வளவு கடுமை காட்டியிருக்கிறது என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

தமிழ்த் திரையுலகில் ரஜினிக்கு அடுத்து அதிக அளவிலான ரசிகர் பட்டாளம் இருப்பது நடிகர் விஜய்க்குதான். ரஜினிக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்கிற பேச்சும் உண்டு. ஆனால், அரசியல்ரீதியாக ரஜினியின் கருத்தும் விஜய்-யின் கருத்தும் எப்போதும் எதிரும் புதிருமாகவே இருந்திருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காவிரி விவகாரம்

காவிரி விவகாரத்தில், ஆரம்பம் முதலே சரியான நிலைப்பாடில்லாமல் இருக்கிறார் ரஜினி. 2002-ம் ஆண்டு திரைத்துறை நெய்வேலியில் நடத்திய போராட்டத்தைப் புறக்கணித்தார். அப்போது, `நான் முதலில் இந்தியன். பிறகுதான் தமிழன்' எனப் பேட்டி கொடுத்தார். காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து நெய்வேலியில் திரையுலகினர் போராட்டம் நடத்தினால் என்ன நடந்துவிடும். கர்நாடகத்துக்குப் போகும் மின்சாரத்தைத் தடுத்துவிட முடியுமா... எனக் கேள்வி எழுப்பினார். தொடர்ச்சியாக, காவிரி உரிமை தொடர்பான போராட்டங்களில் அவர் கலந்துகொண்டாலும் அவ்வப்போது பின்வாங்கிவிடுவார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது பேசிய ரஜினி, ``வன்முறையின் உச்சக்கட்டமே, சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான். இத்தகைய வன்முறை கலாசாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள்மீது கை வைப்பவர்களைத் தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்ற வேண்டும்'' என்று ட்வீட் செய்தார் ரஜினி.

காவிரி போராட்டத்தில் விஜய்
காவிரி போராட்டத்தில் விஜய்

இது, ரஜினிக்கு எதிராக மிகப்பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது. `காவலர்களைத் தாக்கியதைப் பார்த்த ரஜினி, காவலர்கள் தாக்கியது குறித்து ஏன் எந்தக் கருத்தும் சொல்லவில்லை... மக்களுக்காகக்கூட குரல் கொடுக்க வேண்டாம், திரைத்துறையைச் சேர்ந்த வெற்றிமாறன், களஞ்சியம் போன்றவர்கள் தாக்கப்பட்டுள்ளார்களே அவர்களுக்காகவாவது ரஜினி ஏன் குரல் கொடுக்கவில்லை’ என்று அப்போது கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. காவிரிப்போராட்டம் எழும்போதெல்லாம், அதைத் திசை திருப்புவதோடு மட்டுமல்லாமல், சாத்தியமே இல்லாத நதிநீர் இணைப்பு பற்றிப் பேசுவார் ரஜினி என்கிற குற்றச்சாட்டும் அவர்மீது முன்வைக்கப்படுகிறது. ஆனால், ஆரம்பம் முதலே காவிரி விஷயத்தில் மிக உறுதியாக தமிழகத்தின் பக்கம், தமிழர்களின் பக்கம் இருப்பதை தன் வசனங்களிலும் பேச்சுகளிலும் வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய்.

2018ல் திரைத்துறையினர் சார்பில் நடத்தப்பட்ட மௌனப் போராட்டத்துக்கு, முதல் ஆளாக வந்து ஆதரவு தந்தார் விஜய். அதுமட்டுமல்லாது, `தண்ணீர் எல்லாம் பொதுவானது. இது என் தண்ணீர் உன் தண்ணீர் என யாரும் உரிமை கோர முடியாது’ எனவும் தனது திரைப்பட வசனங்களில் தமிழக உரிமையை ஓங்கி ஒலித்தார் நடிகர் விஜய்.

தமிழ்த் திரையுலகமே திரண்டு போராட்டம் நடத்தப்போகும் நேரத்தில், ரஜினி தனியாகப் போராட்டம் நடத்துவது கண்டிக்கத்தக்கது. நெய்வேலி, தமிழகத்தில்தான் இருக்கிறது. கர்நாடகத்தில் இல்லை. நெய்வேலியில் பாதுகாப்பு இருக்காது என ரஜினி சொல்வதை ஏற்க முடியாது
திருமாவளவன் (2002-ல் பேசியது)

தூத்துக்குடி விவகாரம்

துப்பாக்கிச் சூட்டின்போது ஏற்பட்ட கலவரத்தில் படுகாயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக தூத்துக்குடி சென்றார் ரஜினி. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தவர், ``எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்தால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும். மக்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதே கலவரத்துக்குக் காரணம். அவர்கள் யார் என்பதை உலகிற்கு அடையாளம் காட்ட வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதே போலீஸ்தான். போலீஸை மட்டும் குறை கூறுவது தவறு’’ என்று கருத்து தெரிவித்தார். இது, மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. தங்களின் உயிரைக் காக்க உயிரைக் கொடுத்து போராடிய மக்களை சமூக விரோதிகள் என்பதா என எதிர்ப்புக்கிளம்பியது. துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களை மருத்துவமனையில் சென்று சந்தித்தார் ரஜினி.

மருத்துவமனையில் ஆறுதல் சொல்லும் ரஜினி
மருத்துவமனையில் ஆறுதல் சொல்லும் ரஜினி

அப்போது, ``நீங்கள் யார்... இப்போது எதற்காக இங்கு வந்தீர்கள்?" என ரஜினியைப் பார்த்துக் கேட்டார், பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர். இறுக்கமான முகத்துடன் அந்த இடத்தைவிட்டு நடிகர் ரஜினி நகர்ந்துசென்ற வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. அதேவேளையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்துபோனவர்களின் குடும்பத்தினரை நள்ளிரவில் ஒவ்வொரு வீடாகச் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார் விஜய். ஒவ்வொருவர் குடும்பத்துக்கும் தலா ஒரு லட்ச ரூபாய் நிதியுதவியும் செய்தார்.

சமூக விரோதிகள் என்று போராட்டக்காரர்களை ரஜினிகாந்த் கூறுவது சரியல்ல. தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நான் மற்றும் மற்ற தலைவர்கள் எல்லோரும் கலவரம் நடந்த மறுநாள் அங்கு சென்று பார்த்தோம். அங்கு, சமூகவிரோதிகளையும் பயங்கரவாதிகளையும் நாங்கள் பார்க்கவில்லை.
- திருநாவுக்கரசர் (காங்கிரஸ் கட்சி)

மேற்கண்ட இரண்டு விஷயங்களில் மட்டுமல்ல, ஈழத்தமிழர் விவகாரத்திலும்கூட, லைகா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்குச் செல்லவிருந்த ரஜினியை, இங்குள்ள அரசியல் தலைவர்கள் போகக்கூடாது எனத் தடுக்க, அது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார் ரஜினி. அந்த அறிக்கையில், `ராமனால் சபிக்கப்பட்ட பூமி’ என இலங்கையைக் குறிப்பிட்டிருந்தார். அது மிகப்பெரிய சர்ச்சையை அப்போது கிளப்பியது. மேலும், அங்கு நடந்த போரை புனிதப்போர் எனவும் குறிப்பிட்டார். அதுவும் ஈழத்தமிழர் ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கியது. ஆனால், ஈழத்தமிழர் விவகாரத்திலும் ஆரம்பம் முதலே முழு ஆதரவு நிலையில் இருக்கிறார் விஜய்.

ரஜினி - மோடி
ரஜினி - மோடி

500, 1000 ரூபாய் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, `` `புதிய இந்தியா பிறந்தது' என பிரதமர் மோடியைப் பாராட்டி ட்வீட் செய்தார் ரஜினி. ஆனால், மக்கள் பலர் வங்கியில் அல்லல்பட்டது குறித்து வாய்திறக்க மறந்தார். ஆனால், நடிகர் விஜய்யோ, ``இது நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான ஒரு முடிவுதான். ஆனால், இந்த முடிவால் ஏழை மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தன்னுடைய பேத்தியின் திருமணம் நடக்காததால் ஒரு பாட்டி தற்கொலை செய்துகொண்டது, மருத்துவமனையில் பணம் வாங்காததால் பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை போன்ற செய்திகளைத் தொலைக்காட்சியில் பார்க்கும் மனம் வருத்தமடைகிறது. இந்த முடிவை எடுப்பதற்கு முன்னர், இதன் பின்விளைவுகள் குறித்து மத்திய அரசு யோசித்திருக்கலாம். 20 சதவிகித பணக்காரர்களுக்காக 80 சதவிகித மக்கள்மீது பாதிப்பு ஏற்பட்டுள்ளது'' என வருத்தத்தோடு தன் கருத்துக்களை வெளிப்படுத்தினார் விஜய். இரண்டு ஆண்டுகள் கழித்து, `செயல்படுத்திய முறை தவறு’ என செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ரஜினி.

நாட்டில் பொதுமொழி இருந்தால் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். துரதிர்ஷ்டவசமாக நம்ம நாட்டில் பொதுமொழி என ஒன்றைக் கொண்டுவர முடியாது. இந்தியைத் திணித்தால், தமிழகம் மட்டுமல்ல தென்னிந்தியாவே ஏற்றுக்கொள்ளாது.
ரஜினி

அனிதா மரணத்தின்போது ரஜினி, விஜய் இருவருமே இரங்கல் தெரிவித்திருந்தாலும், நடிகர் விஜய் அனிதாவின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். சுபஶ்ரீயின் மரணத்துக்கு தன்னுடைய வருத்தைத் தெரிவித்திருந்தார் நடிகர் விஜய். அதோடு, ஆளும்கட்சிக்கு எதிராகக் கடும் விமர்சங்களையும் முன்வைத்தார். அதேபோல, `மெர்சல்’ படத்திலும் மத்திய அரசுக்கு எதிரான காட்சிகள், வசனங்கள் இருப்பதாக சர்ச்சை கிளம்பியது. விஜய்க்கு எதிராக தமிழக பா.ஜ.க-வினர் போர்க்கொடி உயர்த்தினர். உச்சபட்சமாக பா.ஜ.க தேசியச் செயலர் ஹெச்.ராஜா, விஜய்-யின் பெயர் ஜோசப் விஜய் எனக் குறிப்பிட்டு விமர்சனம் செய்தார். ஆனால், படம் வெளியான சில நாளில், ஹெ.ச்.ராஜா குறிப்பிட்ட அதே பெயரில் `மெர்சல்’ படத்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என நடிகர் விஜய்-யிடம் இருந்து அறிக்கை வெளிவந்தது.

ஆளும்தரப்புக்கு எதிராக, மக்களுக்கு ஆதரவாக விஜய் தன்னால் இயன்ற இடங்களில் எல்லாம் கருத்து தெரிவித்து வர, மறுபுறம் நடிகர் ரஜினிகாந்த், `ஒருவருக்கு எதிராக நிறைய பேர் திரண்டால், பலசாலி யார் என்று நீங்களே புரிந்துகொள்ளலாம் ' என்று கருத்து தெரிவித்தார்.

அனிதா வீட்டில் விஜய்
அனிதா வீட்டில் விஜய்

இப்போதும் சி.ஏ.ஏ-வுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட ``மாணவர்கள், தாங்கள் செய்யும் போராட்டத்தின் காரணம் அறிந்து, தீவிரமாக ஆலோசித்து, தங்கள் பேராசிரியரிடம் கருத்துக்கேட்ட பிறகே போராட்டத்தில் ஈடுபட வேண்டும். இல்லையென்றால், அரசியல் கட்சியினர் உங்களைப் பயன்படுத்திக்கொள்வார்கள். எதுவும் தெரியாமல் போராட்டத்தில் இறங்கினால், மாணவர்களான உங்களுக்குத்தான் பிரச்னை. போலீஸ் எப்போது எப்படி இருப்பார்கள் எனக் கூற முடியாது. எஃப்.ஐ.ஆர் மேல் எஃப்.ஐ.ஆர் வாங்கி உங்களது வாழ்க்கையே முடிந்துவிடும்” என்று மறைமுகமாக எச்சரிக்கும் விதமாகப் பேசினார் ரஜினி.

இந்த விஷயங்களில் மட்டுமல்ல, மொழித்திணிப்பு, எழுவர் விடுதலை உட்பட, மாநில உரிமைகள் சார்ந்த எந்த விஷயமாக இருந்தாலும் சரி, தொடர்ச்சியாக தமிழக மக்களின் மனநிலைக்கு எதிரான நிலையிலேயே ரஜினி பேசிவருகிறார். ஆதரவாகப் பேசுவது போல சில விஷயங்களில் பேசினாலும், அதிலும் ஆளும் வர்க்கத்துக்கு எதிராகத் தன் கருத்துகள் இல்லாதவாறு பார்த்துக்கொள்கிறார்.

திரையில் மக்களுக்கு ஆதரவாக சத்தமாகக் குரல் கொடுக்கும் விஜய் தரையில் சன்னமாகவேணும் அதைத் தொடர்கிறார்... ஆனால் திரையில் மக்களுக்காக சத்தமாகப் பேசும் ரஜினி, தரையில் அதைவிட சத்தமாக மக்களுக்கு எதிரான குரலையே ஒலிக்கிறார். இதுதான், ஒருவரிடம் ஆளும் வர்க்கம் பரிவோடு நடந்து கொள்ளவும் மற்றொருவரிடம் கடுமை காட்டவும் காரணம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

இப்போது பட வசூலில் இருவருக்கும் இடையே நடக்கும் போட்டி, எதிர்காலத்தில் அரசியலிலும் நடக்கலாம்!