Published:Updated:

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் செங்கோட்டையன்

அமைச்சர் செங்கோட்டையன்
பிரீமியம் ஸ்டோரி
அமைச்சர் செங்கோட்டையன்

‘மாமூல்’ மழை கொட்டும் தொகுதி என்பதால், தொகுதியின் காவல் நிலையப் பணிகளுக்கே கிராக்கி அதிகம்

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் செங்கோட்டையன்

‘மாமூல்’ மழை கொட்டும் தொகுதி என்பதால், தொகுதியின் காவல் நிலையப் பணிகளுக்கே கிராக்கி அதிகம்

Published:Updated:
அமைச்சர் செங்கோட்டையன்
பிரீமியம் ஸ்டோரி
அமைச்சர் செங்கோட்டையன்
இங்கு நடந்த 15 சட்டமன்றத் தேர்தல்களில் ஒன்பது முறை அ.தி.மு.க வெற்றிபெற்றுள்ளது. அவற்றில் ஏழு முறை செங்கோட்டையன் வெற்றிபெற்றுள்ளார். பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரான செங்கோட்டையனின் செயல்பாடுகள் தொகுதியில் எப்படியிருக்கின்றன?

என்ன செய்தார் அமைச்சர்? - செங்கோட்டையன் - பள்ளிக் கல்வித் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை - கோபிசெட்டிபாளையம்

சொன்னாரே? - எஸ்.வி.சரவணன், காங்கிரஸ்

`விவசாயம் சார்ந்த தொழிற்சாலை, வேளாண் கல்லூரி கொண்டுவருவேன்’ என்றவர், அதை நிறைவேற்றவில்லை. கோபியை மையமாகவைத்து, தனி மாவட்டம் உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. தொகுதியில் பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி எதையும் கொண்டுவரவில்லை. அருகிலேயே பவானி ஓடினாலும் வாரத்துக்கு ஒரு முறைதான் குடிநீர் கிடைக்கிறது. கீரிப்பள்ள ஓடையைச் சீரமைக்கவில்லை. சாலைகள் படு மோசம். வேலைவாய்ப்பு இல்லை. பேருந்து நிலையம், காய்கறி மார்க்கெட் விரிவாக்கம் செய்யப்படவில்லை. அமைச்சர் ஆதரவுடன் குளம், குட்டைகளில் மண் கொள்ளை ஜோராக நடக்கிறது.

செய்தேனே! - அமைச்சர் செங்கோட்டையன்

கொடிவேரி அருகே ஐ.டி.ஐ., நம்பியூரில் அரசு கலைக் கல்லூரி, கோபி நகரில் 17,000 வீடுகளுக்குக் குடிநீர் இணைப்பு, திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 3,248 வீடுகள், நம்பியூரைத் தலைமையிடமாகக்கொண்டு தனி தாலுகா, கோபி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தல், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்கால் சீரமைப்பு, பெரிய கொடிவேரி கூட்டுக் குடிநீர்த் திட்டம், நம்பியூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம், கிருஷ்ணா நகரில் உள் விளையாட்டு அரங்கம், நம்பியூர் பேருந்து நிலையம் விரிவாக்கம், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டது... இவையெல்லாம் நான் நிறைவேற்றி முடித்த திட்டங்கள். அத்திக்கடவு - அவினாசி திட்டத்தால் பல பகுதிகள் பாசன வசதி பெறவிருக்கின்றன. 19 கோடி மதிப்பீட்டில் கீரிப்பள்ளம் ஓடையைத் தூர்வாரி, இருபுறமும் கான்கிரீட் தளம் அமைக்கவிருக்கிறோம். கொளப்பலூர் அருகே ‘டெக்ஸ்டைல் பார்க்’ கட்டும் பணிகள் நடக்கின்றன. கோபி மருத்துவமனையில் மகப்பேறு, குழந்தைகள் பிரிவுக்காக மூன்று மாடிக் கட்டடம் கட்டவிருக்கிறோம். 32 கோடி ரூபாயில் கோபி நகரச் சாலைகளைச் சீரமைக்கவிருக்கிறோம்.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் செங்கோட்டையன்


கள நிலவரம்: அ.தி.மு.க-வில் மீண்டும் செங்கோட்டையனே களமிறங்க வாய்ப்பு அதிகம். விவசாயத்துக்குப் பெரிதாகத் திட்டங்களைக் கொண்டுவராதது, அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்யாதது, அமைச்சரின் பெயரைச் சொல்லி ஆளும்கட்சியினர் செய்யும் அட்ராசிட்டி ஆகியவை செங்கோட்டையனுக்கு மைனஸ். தி.மு.க கூட்டணியில் கடந்த முறை போட்டியிட்ட காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவர் சரவணன் சீட் கேட்கிறார். தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா காய்நகர்த்துகிறார். தொகுதியில் பெயர் சொல்லும் அளவுக்கு தி.மு.க-வில் ஆட்களும் கட்டமைப்பும் வலுவாக இல்லை. செங்கோட்டையனின் ‘செல்வாக்கால்’ அ.தி.மு.க-வுக்கு இங்கு வெற்றி வாய்ப்பு அதிகம்!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - தி.நகர்

‘மாமூல்’ மழை கொட்டும் தொகுதி என்பதால், தொகுதியின் காவல் நிலையப் பணிகளுக்கே கிராக்கி அதிகம். இப்படியான சூழலில் தொகுதி எம்.எல்.ஏ-வுக்கான ‘படா படா’ வாய்ப்புகள் பற்றிச் சொல்லத் தேவையில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் இதையெல்லாம் ‘கரெக்ட்’டாக செய்து ஏகப்பட்ட கெட்ட பெயரைச் சம்பாதித்திருக்கிறார் தி.நகர் எம்.எல்.ஏ சத்யா.

2016 சட்டமன்றத் தேர்தலில் சத்யாவை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் என்.எஸ்.கனிமொழியிடம் பேசினோம். எதிர்க்கட்சியாக இருந்தும், ஏனோ சத்யாவைப் பற்றிப் பேசுவதற்கு அவருக்கு மனமில்லை, மறுத்துவிட்டார். கூட்டணியில் இருப்பதால் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட ஹெச்.ராஜாவும், ‘நோ கமென்ட்ஸ்’ என்று சொல்லிவிட்டார். கடந்த தேர்தலில் நான்காவது, ஐந்தாவது இடங்களைப் பிடித்த தே.மு.தி.க., பா.ம.க வேட்பாளர்களும் பேச மறுத்துவிட்டனர். இறுதியாக, முன்னாள் தி.நகர் எம்.எல்.ஏ-வும், தி.மு.க இலக்கிய அணி இணைச் செயலாளருமான வி.பி.கலைராஜனிடம் பேசினோம்.

“தொகுதிக்குள் வழக்கமாக நடக்கும் பணிகளைத் தாண்டி, பெரிதாக வளர்ச்சிப் பணிகள் நடக்கவில்லை. ஆனால், சத்யாவின் ஆதரவுடன் சட்டவிரோத சூதாட்ட கிளப்புகள், மசாஜ் சென்டர்கள் ஏகபோகமாகச் செயல்படுகின்றன. தொகுதிக்குள் சாலையோர வியாபாரிகள் அனைவரும் தினசரி 500 ரூபாய் மாமூல் செலுத்த வேண்டும். அதற்காகவே வட்டச் செயலாளர் ஒருவரை நியமித்திருக்கிறார். கழிவுநீர்க் கால்வாய், மின் இணைப்பு அளிக்க வீட்டுக்கு 50,000 ரூபாய் லஞ்சமாக வசூலிக்கப்படுகிறது. இந்தப் பணியை, பகுதிச் செயலாளர் ஒருவரிடம் ஒப்படைத்திருக்கிறார். சென்னை சிட்டிக்குள் மட்டும் சத்யாவுக்கு 35 சொந்த வீடுகள் இருக்கின்றன. போரூர் சரவணா ஸ்டோர்ஸ் அருகே வேறொருவருக்குச் சொந்தமான 18 கிரவுண்ட் நிலத்தை ஆக்கிரமித்துவைத்திருக்கிறார். இதற்காக திருவல்லிக்கேணி, தி.நகர், புதுச்சேரியைச் சேர்ந்த ரெளடிகளை அங்கே அமர்த்தியிருக்கிறார். தொகுதி முழுவதும் வசூல், கட்டப் பஞ்சாயத்து மட்டுமே சத்யாவின் முழுநேரப் பணியாக இருக்கிறது. இவர் பெயரைச் சொல்லி ஏகப்பட்ட ரெளடிகள் போலீஸாரிடமிருந்து தப்பித்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் செங்கோட்டையன்

இது குறித்து சத்யாவிடம் விளக்கம் கேட்டோம். “என்மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். எந்த இடத்தையும் ஆக்கிரமிக்கவில்லை. என்மீது அவதூறு பரப்புகிறார்கள். தொகுதியில் அம்மா குடிநீர், மூன்று ரேஷன் கடைகள் திறந்திருக்கிறேன். மேற்கு மாம்பலத்தில் 85 லட்ச ரூபாயில் குடிநீர்க் கால்வாய்ப் பணிகள் நடக்கின்றன. ஐந்து அம்மா கிளினிக்குகள் திறக்கப்படவுள்ளன. மழை பெய்தால், தி.நகரில் அதிகபட்சம் ஒரு மணி நேரத்தில் தண்ணீர் வடிந்துவிடும் அளவுக்குப் பணிகள் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

தொகுதிக்குள் வலம்வந்து பலரிடம் பேசினோம், “ஜெயலலிதா இருந்தவரை தி.நகரில் சீட்டாட்ட விடுதிகள் வந்ததில்லை. இன்று ஏகப்பட்ட சீட்டாட்ட விடுதிகள் முளைத்துள்ளன. வடபழனி சிவன் கோயில் அருகே ஒரு கிளப் சத்யாவின் ஆதரவுடன் கனஜோராக கல்லா கட்டுகிறது. ரெளடிகள் சி.டி.மணி, காக்கா தோப்பு பாலாஜி உள்ளிட்டோர் சத்யாவின் பெயரைச் சொல்லி காக்கிகளை மிரட்டுகிறார்கள். முதல்வருக்கு நெருக்கமானவர் என்று சொல்லிக்கொண்டுதான் இத்தனை வேலைகளையும் எம்.எல்.ஏ செய்கிறார்” என்றார்கள்.

இப்படி ஏகப்பட்ட அதிருப்திகள் நிலவினாலும், முதல்வர் பழனிசாமிக்கு நெருக்கமாக இருப்பதாகக் காட்டிக்கொண்டு, அ.தி.மு.க சார்பில் மீண்டும் களமிறங்க முயல்கிறார் சத்யா. தி.மு.க-வில் வி.பி.கலைராஜன், மறைந்த மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகனின் மகன் ராஜா ஆகியோர் சீட் கேட்கிறார்கள். அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க தலைவர் ஹெச்.ராஜாவும் இந்தத் தொகுதியை எதிர்பார்க்கிறார். தொகுதியில் சத்யாவுக்கு எதிரான அதிருப்தி மனநிலை தீவிரமாக இருப்பதால், தி.மு.க வெற்றிபெறவே வாய்ப்பு அதிகம்!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - கிள்ளியூர்

சொன்னாரே? - பொன்.விஜயராகவன், பா.ஜ.க

புதுக்கடை பகுதிக்குக் கீழ்ப் பகுதிவரை, நிலத்தடியில் கடல்நீர் புகுந்து குடிநீர் உப்பாகிவிட்டது. `இந்தப் பிரச்னையைத் தீர்க்க குழித்துறை ஆற்றில் தடுப்பணை கட்டப்படும்’ என்றார் எம்.எல்.ஏ. ஆனால் செய்யவில்லை. புதிய குடிநீர்த் திட்டமும் கொண்டுவரப்படவில்லை. தொகுதி முழுவதுமே சாலைகள் படுமோசமாக உள்ளன. பல அரசு நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படவில்லை. மொத்தத்தில் மக்களுக்குத் தேவையான எந்தத் திட்டத்தையும் அவர் செயல்படுத்தவில்லை.

செய்தேனே! - ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ., காங்கிரஸ்

தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை, கிள்ளியூருக்கு புதிய தாலுகா, தேங்காப்பட்டணம் துறைமுகம் - இரையுமன் துறை இணைப்பு உயர்மட்ட பாலம் ஆகியவற்றைக் கொண்டுவந்திருக்கிறேன். தொகுதியில் மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. பேரூராட்சி, ஒன்றிய, கிராமச் சாலைகள் 70 சதவிகிதம் சரிசெய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள சாலைகளைச் சரிசெய்ய சட்டசபையில் பேசியிருக்கிறேன். தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகப் படகு விபத்தில் இறந்துபோனவர்களுக்கு நிவாரண நிதி பெற்றுக்கொடுத்தேன்.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் செங்கோட்டையன்

கள நிலவரம்: அ.தி.மு.க கூட்டணியில் இந்தத் தொகுதி பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்படலாம். காங்கிரஸ் சார்பில் போட்டியிட சிட்டிங் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார், ‘ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ்’ மாநில ஒருங்கிணைப்பாளர் ஆஸ்கர் பிரடி சீட் கேட்கிறார்கள். பா.ஜ.க-வில் ஏற்கெனவே போட்டியிட்ட விஜயராகவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மோகன் சந்திரகுமார், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் சந்திரகுமார் சீட் கேட்கிறார்கள். அ.தி.மு.க-வில் ஏற்கெனவே போட்டியிட்ட மேரி கமலபாய், முஞ்சிறை ஒன்றியச் செயலாளர் ஜீன்ஸ், குமரி மேற்கு மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் ஸ்ரீமகேஷ், வழக்கறிஞர் மார்ட்டின் சீட் கேட்கிறார்கள். தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி இங்கு பலமாக இருக்கிறது. இந்தக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - குளச்சல்

சொன்னாரே? - குமரி ப.ரமேஷ், பா.ஜ.க

`குமரி மாவட்டத்துக்கு வர்த்தகத் துறைமுகம் கொண்டுவருவேன்’ என்றார் பிரின்ஸ். ஆனால், மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், அந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தபோது அதை எதிர்த்து, பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் கெடுத்துவிட்டார். ஏ.வி.எம் கால்வாயைச் சீரமைப்பேன் என்றவர், செய்யவில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக அவர் எம்.எல்.ஏ-வாக இருந்தும் தொகுதிக்கு ஒரு பலனும் இல்லை.

செய்தேனே! - பிரின்ஸ், எம்.எல்.ஏ., காங்கிரஸ்

ஏ.வி.எம் கால்வாயைச் சீரமைத்தால், 500-க்கும் மேற்பட்ட வீடுகள் போய்விடும் என்பதால் மக்கள் எதிர்த்தார்கள். வள்ளியாற்றின் குறுக்கே பாலம் அமைக்க 2.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. புதூர் பகுதியில் கடல் அலை தடுப்பணை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. குளச்சல் மீன்பிடித் துறைமுக விரிவாக்கத்துக்காக 16 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. சிறு வர்த்தகத் துறைமுகம்தான் வேண்டும் என்பது மக்கள் கருத்து. இரணியல் கூட்டுக்குடிநீர்த் திட்டம், திங்கள் நகர் பேருந்து நிலையம், கோழிப்போர்விளையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கொண்டுவந்திருக்கிறேன்.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் செங்கோட்டையன்

கள நிலவரம்: சிட்டிங் எம்.எல்.ஏ பிரின்ஸ் மீண்டும் சீட் எதிர்பார்க்கிறார். காங்கிரஸில் முன்னாள் மாவட்டத் தலைவர் ராபர்ட் புரூஸ், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், மாநில மீனவரணித் தலைவர் சபீன் காய்நகர்த்துகிறார்கள். அ.தி.மு.க-வில் பச்சைமால், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சிவசெல்வராஜன், குமரி கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் சேவியர் மனோகரன் சீட் கேட்கிறார்கள். பா.ஜ.க-வில் குமரி ப.ரமேஷ், சிவகுமார் ரேஸில் இருக்கிறார்கள். இன்றைய சூழலில், தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி பலமாக இருக்கிறது. மீனவர்கள் வாக்குகளைச் சிதறாமல் அள்ளினால், அந்தக் கூட்டணியே வெற்றிபெறும்!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - பெரம்பலூர்

சொன்னாரே? - சிவகாமி, சமூக சமத்துவப்படை

`ரயில் போக்குவரத்தைக் கொண்டுவருவேன்’ என்றவர், அதற்காகத் துரும்பைக்கூட நகர்த்தவில்லை. சேலம்-ஆத்தூர்-பெரம்பலூர் ரயில்பாதை அமைக்கும் திட்டத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார்கள்; அது கிடப்பிலுள்ளது. `பெரம்பலூரில் ஜவுளித் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்’ என்றார் ஜெயலலிதா. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் திட்டம் கிடப்பிலுள்ளது. எம்.எல்.ஏ-வோ எதுவுமே செய்யவில்லை

செய்தேனே! - இளம்பை தமிழ்ச்செல்வன், எம்.எல்.ஏ., அ.தி.மு.க

ரயில்வே திட்டம், சிறப்புப் பொருளாதார மண்டலம் இரண்டிலுமே மத்திய அரசுடன் சேர்ந்து முடிவெடுக்க வேண்டியுள்ளது. வேப்பந்தட்டையில் அரசு கலை அறிவியல் கல்லூரிக்குக் கூடுதல் நிதி பெற்றுக் கொடுத்திருக்கிறேன். வேப்பூரில் பாரதிதாசன் மகளிர் உறுப்பு கல்லூரி, மருதடியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம், வேப்பந்தட்டையில் விசுவக்குடி அணை, செட்டிக்குளத்தில் சின்ன வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு கொண்டுவந்திருக்கிறேன். தொகுதி நீர்நிலைகளில் கொண்டுவரப்பட்டிருக்கும் தடுப்பணைகளால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் செங்கோட்டையன்

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் மூன்றாவது முறையாக சீட் கேட்கிறார் இளம்பை தமிழ்ச்செல்வன். முன்னாள் அமைச்சர் வரகூர் அருணாசலம், முன்னாள் எம்.எல்.ஏ சந்திரகாசி, நகரச் செயலாளர் ராஜபூபதி, மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் லெட்சுமி, லாடபுரம் கருணாநிதி ரேஸில் இருக்கிறார்கள். தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ துரைச்சாமி, நகரச் செயலாளர் பிரபாகரன் சீட் கேட்கிறார்கள். கூட்டணிக் கட்சியான வி.சி.க-வும் சீட் கேட்கிறது. தொகுதிக்குள் சில திட்டங்களை நிறைவேற்றியிருந்தாலும், சில வில்லங்க விவகாரங்களால் தமிழ்ச்செல்வனின் பெயர் டேமேஜாகியிருக்கிறது. தி.மு.க-வில் கடும் கோஷ்டிப் பூசல் நிலவுகிறது. எனவே, களநிலவரம் இழுபறிதான்!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - குன்னம்

சொன்னாரே? - அருள், நாம் தமிழர் கட்சி

`ஜவுளிப்பூங்கா கொண்டுவருவேன்’ என்றவர், அதைச் செய்யவில்லை. திருமாந்துறை அருகே சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு 3,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இன்றுவரை திட்டமும் வரவில்லை, விவசாயிகளுக்கு நிலமும் திருப்பித் தரப்படவில்லை. இங்கு வரவிருந்த மருத்துவக் கல்லூரியை அரியலூருக்குக் கொண்டுசென்றது குறித்து எம்.எல்.ஏ கேள்வி கேட்கவில்லை. ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு, பராமரிக்கப்படாமல் விவசாயம் நலிந்திருக்கிறது.

செய்தேனே! - ராமச்சந்திரன், எம்.எல்.ஏ., அ.தி.மு.க

செந்துறை பகுதியில் 11 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம், வெள்ளாற்றின் குறுக்கே 30 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை, ஆனைவாரி ஓடை, குழுமூர் உள்ளிட்ட பகுதிகளில் மூன்று தடுப்பணைகள் கட்டியிருக்கிறோம். காவிரி கூட்டுக் கூடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறோம். சிறப்புப் பொருளாதார மண்டல வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஜவுளிப்பூங்கா திட்டம் விரைவில் வரவிருக்கிறது. செந்துறைப் பகுதியில் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரியை என்னால் கொண்டுவர முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் செங்கோட்டையன்

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ ராமச்சந்திரன், வேப்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் வேட்டக்குடி கிருஷ்ணசாமி, செந்துறை தெற்கு ஒன்றியச் செயலாளர் உதயம் ரமேஷ், கர்ணன், சந்திரஹாசன் சீட் கேட்கிறார்கள். தி.மு.க-வில் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் குன்னம் ராஜேந்திரன், மாவட்டப் பொருளாளர் ரவி, வேப்பந்தட்டை பாஸ்கர், செந்துறை ஒன்றியச் செயலாளர் ஞானமூர்த்தி, வழக்கறிஞர் குமணன், பெரியசாமி, எழில் மாறன் எனப் பலரும் முட்டி மோதுகிறார்கள். உட்கட்சியின் உள்குத்து வேலைகள் ராமச்சந்திரனுக்கு மைனஸ். வேட்பாளர்களைப் பொறுத்தே வெற்றி தோல்வி; இன்றைய சூழலில் நிலவரம் இழுபறிதான்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் செங்கோட்டையன்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism