Published:Updated:

கரை வேட்டி டாட் காம்

கரை வேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
News
கரை வேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

சசி ஆதரவு போஸ்டர்... கதறும் ஆண்டிப்பட்டி நிர்வாகி!

சசிகலாவை வரவேற்று பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுவரும் சூழலில், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பகுதியில் அதிகமான போஸ்டர்களைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக, ஆண்டிப்பட்டி மேற்கு ஒன்றிய நிர்வாகிகளே சசிகலா ஆதரவு போஸ்டர்களைத் தொடர்ச்சியாக ஒட்டிவருகிறார்கள். இதனால், மேற்கு ஒன்றியச் செயலாளரும், ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல் அ.தி.மு.க வேட்பாளருமான லோகிராஜன் கலக்கமடைந்துள்ளார். தன்னுடைய எல்லைக்குட்பட்ட நிர்வாகிகளின் இந்தச் செயலால், வரும் சட்டமன்றத் தேர்தலில் தனக்கு சீட் கிடைக்காமல் போய்விடுமோ என்று புலம்பிவருகிறாராம் லோகி. #லோகிக்கு வெச்சுட்டாங்களே போகி!

சீட்டுக்கு மல்லுக்கட்டும் அம்மணி!

புதிதாக உதயமான அருவி மாவட்டத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சியின் பெண் பிரமுகருக்கு மீண்டும் அதிகார ஆசை அருவியாகக் கொட்டத் தொடங்கியிருக்கிறதாம். இடையில் கிடைத்த அதிர்ஷ்டத்தால் எம்.எல்.ஏ ஆன அந்தப் பெண் பிரமுகரின் செயல்பாடுகள் ஜெயலலிதாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதால் ஓரங்கட்டப்பட்டிருந்தார். இப்போது தனக்குத் தடைபோட ஆளில்லாததால் மீண்டும் அதிகாரத்தை ருசிக்க ஆசைப்படுபவர், கட்சியின் பிரபலங்கள் பலரையும் நேரில் சந்தித்து மீண்டும் போட்டியிட வாய்ப்பு வாங்கிக் கொடுக்குமாறு வலியுறுத்திவருகிறாராம். இதனால், அம்மணியின் தலை தெரிந்தாலே கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அலறியடித்து ஓட்டம்பிடிக்கிறார்களாம். #எல்லா சிப்பிக்குள்ளயும் ‘முத்து’ கிடைப்பதில்லையே!

கரை வேட்டி டாட் காம்

ஷாக் ஆன ஜாண் தங்கம்!

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட ஆலஞ்சி பகுதியில் அம்மா மினி கிளினிக் திறப்புவிழா ஜனவரி 31-ம் தேதி நடந்தது. கிளினிக்கைத் திறந்துவைப்பதற்காக குமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரான ஜாண் தங்கம் சென்றிருந்தார். அங்கு கிள்ளியூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாரும் சென்றிருக்கிறார். அப்போது அம்மா மினி கிளினிக்கைச் சுற்றி காங்கிரஸ் கொடிகளும் தோரணங்களும் களைகட்டியிருக்கின்றன. ஒரு அ.தி.மு.க கொடிகூட அங்கில்லை. இதனால் அதிர்ந்துபோனாராம் ஜாண் தங்கம். ‘‘கட்சித் தொண்டர்களுடன் நெருக்கம் காட்டி, மாவட்டச் செயலாளர் அரவணைத்துச் சென்றிருந்தால், காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்குக் கிடைத்ததுபோல வரவேற்பு பலமாக இருந்திருக்கும். தனக்கு வேண்டிய சிலரை மட்டும் காரில் ஏற்றிக்கொண்டு சுற்றினால் இப்படித்தான் சந்தி சிரிக்கும்’’ என்று கமென்ட் அடித்தனர் அங்கிருந்த அ.தி.மு.க தொண்டர்கள். #ஒரு ஜாண் அளவுக்குக்கூட கட்சிக்கொடி இல்லைங்களா ஜாண்?

மதில்மேல் பூனையாக அறிவாளி!

ஒருகாலத்தில் மலை மாவட்டத்தில் ஏகோபித்த செல்வாக்குடன் உலா வந்துகொண்டிருந்த அந்த ‘அறிவாளி’ ஆளுங்கட்சி நிர்வாகியின் செல்வாக்கு, எடப்பாடியின் எழுச்சிக்குப் பிறகு படிப்படியாகச் சரிய ஆரம்பித்தது. பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்டு, இருக்கும் இடம் தெரியாமல் உலாவருகிறார். சிறையிலிருந்து விடுதலையான சசிகலா, விரைவில் தமிழகம் வரவிருக்கும் நிலையில், அறிவாளி நிர்வாகியை அழைத்த பழைய மண்டலப் பொறுப்பாளர், ‘‘நாம அமைக்கப்போற புது டீம்ல நீங்க முக்கியமான பொறுப்புல இருக்கப்போறீங்க. அதனால, முதல் வேலையா நம்ம பக்கம் வரப்பாருங்க’’ என்று மிரட்டும் தொனியில் தெரிவித்திருக்கிறாராம். மதில் மேல் பூனையாக தவித்து வருகிறாராம் ‘அறிவாளி.’ #‘புத்தி’யுள்ள புள்ளை பொழைச்சிக்கும்!