Published:Updated:

`இறையன்பே வந்தாலும்...' பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் உடன்பிறப்புகள்

டாக்டர் வரதராஜன்
டாக்டர் வரதராஜன்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு அதிருப்தியைக் கடந்தும் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வென்றது பலரையும் அதிர வைத்தது. இதற்கும் தி.மு.க உள்கட்சி பூசலும் ஒரு முக்கிய காரணம் என்கின்றனர்.

சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டல தொகுதிகளில் பெரும்பாலும் அ.தி.மு.க-வே வெற்றி பெற்றது. கடந்த அ.தி.மு.க ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை இருந்த போதும், அ.தி.மு.க கொங்கு மண்டலத்தை கைக்குள் வைத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. `` கொங்கு மண்டலத்தில் தி.மு.க தோல்விக்கு, தி.மு.க-வினரின் உள்ளடி வேலைகள்தான் காரணம்” என்று உடன்பிறப்புகள் சிலர் புலம்பி வருகின்றனர். அதிலும் பொள்ளாச்சி பாலியல் வழக்கு கொடுத்த அதிருப்தியைக் கடந்து 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வென்றது பலரையும் அதிர வைத்தது.

இதற்கும் தி.மு.க உள்கட்சி பூசலே தவிர்க்க முடியாத காரணங்களில் ஒன்று. பொள்ளாச்சி தி.மு.க உள்கட்சி அரசியல் நிலைமை குறித்து, தேர்தலுக்கு முன்பே ஜூனியர் விகடன் வெளிச்சம் போட்டு காட்டியிருந்தது.``ரெளடிகள் ராஜ்ஜியமாகிறதா கொங்கு மண்டலம்? கோவை தி.மு.க பிரமுகர் மீது குவியும் புகார்கள்” என்ற தலைப்பில் கடந்தாண்டு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

டாக்டர் வரதராஜன்
டாக்டர் வரதராஜன்

அந்த இதழ் பொள்ளாச்சி மக்களின் கண்களில் படாமல் அள்ளிவிட்டார் தென்றல் செல்வராஜ். சென்னையிலும் அப்படி ஏதாவது நடந்ததோ, என்னவோ..? அறிவாலயம் அந்த விவகாரத்தைக் கண்டுகொள்ளவில்லை. தேர்தல் முடிந்த பிறகும் உள்கட்சி பூசலை உறுதிப்படுத்தும் விதமாக, தற்போது பொள்ளாச்சி தி.மு.க வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த டாக்டர்.வரதராஜனுக்கு உடன்பிறப்புகள் தரப்பில் இருந்து கொலை மிரட்டல் வருகின்றதாம்.

தி.மு.க கோவை தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை தலைவர் லிங்கதுரை, வரதராஜனுக்கு தி.மு.க வாட்ஸப் குழுவில் எச்சரிக்கை விடுக்க, அதே தெற்கு மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் சண்முகப்ரியாவின் கணவர் வெல்லம் ஶ்ரீனிவாசன் என்பவரும் வரதராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்து ஆடியோவே வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில், ``பொள்ளாச்சி தி.மு.க வேட்பாளர் வரதராஜன் கொல்லப்படுவார்.

வாட்ஸ்அப் உரையாடல்
வாட்ஸ்அப் உரையாடல்

தடுக்க முடிந்த தி.மு.க-வினர் வாருங்கள். வெல்லம் ஶ்ரீனிவாசன் ஆகிய நான் கொலை செய்யப் போகிறேன். சீஃப் செக்கரட்ரி இறையான்மையு (இறையன்பைத் தான் அப்படி சொல்கிறார்.. ட்ங்க் ஸ்லிப்) வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. இதை அனைவரும் ஷேர் செய்யுங்கள்” என யூ-ட்யூப் பிரபலம் போல பந்தாவாக மிரட்டுகிறார்.

இதுகுறித்து பொள்ளாச்சி தி.மு.க-வை சேர்ந்த மோகன்ராஜ், ``லிங்கதுரை மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜின் ஆதரவாளர். டாக்டர் வரதராஜனை வேட்பாளராக அறிவித்ததால் அவர்கள் அதிப்திருப்தியடைந்துவிட்டனர். வரதராஜன் எங்கள் பகுதிக்கு பிரசாரம் வந்தால், `மேலே இருந்து அதை வீசுவோம், இதை வீசுவோம்’ என்று மிரட்டினார். போலீஸ் வந்து சொல்லியுமே அவர் அடாவடியாகத்தான் இருந்தார்.

மோகன்ராஜ்
மோகன்ராஜ்

லிங்கதுரை இதேபோல பலமுறை டாக்டரை அவனமானப்படுத்திவிட்டார். இதுகுறித்து தென்றல் செல்வராஜிடம் கூறினால்,`அவன் மட்டும்தான் அப்படி பண்றானா? எல்லோரும் யோக்கியமா?’ என்று கேட்கிறார். தி.மு.க உள்கட்சி பூசலை பார்த்து இங்கிருக்கும் அ.தி.மு.க-வினர் சிரிக்கின்றனர்.

மாவட்ட பொறுப்பாளர் என்ற அடிப்படையில் தென்றல் ஓட்டு கேட்க வரவில்லை. அதனால், அவரது சொந்த வார்டில் கூட அ.தி.மு.க தான் முன்னிலை வகித்தது. கோஷ்டி பூசலில் இவர்கள் வேலையே செய்யவில்லை. எப்படியாவது தி.மு.க வெற்றி பெற வேண்டும் என அ.தி.மு.கவை எதிர்த்து நாங்கள் போராடினால், எங்களுக்குள்ளேயே சிலர் நாங்கள் வெற்றி பெறக் கூடாது என வேலை பார்த்தனர்.

லிங்கதுரை தென்றல் செல்வராஜ்
லிங்கதுரை தென்றல் செல்வராஜ்

நகரப் பகுதியில் பூத்துக்கு ஐந்து ஓட்டு கிடைத்திருந்தாலே நிலைமை மாறியிருக்கும். ரவுடியிசம் இருக்கக் கூடாது என தலைமை சொல்கிறது. இங்கிருப்பவர்கள் அதை விடுவதாய் இல்லை. கடுமையான நடவடிக்கை எடுத்து நல்ல நபரை பொறுப்பாளராக போட வேண்டிய நேரம் இது” என்றார்.

``இங்கிருக்கும் உள்கட்சி பூசலை ஓரளவுக்கு அறிந்துதான், அனைவருக்கும் சமரசமாக போகக் கூடிய டாக்டர் வரதராஜனை தலைமை வேட்பாளராக அறிவித்தது. நல்ல வேட்பாளர் அறிவித்தும் உள்கட்சி பூசலால் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டோம். லிங்கதுரை மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் இருக்கின்றன.

வெல்லம் ஶ்ரீனிவாசன் தென்றல் செல்வராஜ்
வெல்லம் ஶ்ரீனிவாசன் தென்றல் செல்வராஜ்

2019-ம் ஆண்டு டீக்கடையில், இரவு நேரத்தில் சூடான வடை கேட்டு தகராறு செய்த வழக்கில் லிங்கதுரை கைது செய்யப்பட்டார். வெல்லம் ஶ்ரீனிவாசனின் உடன்பிறந்த சகோதரர் பொள்ளாச்சி ஜெயராமனின் வலதுகரமாக வலம் வருபவர். இவர்களை கட்சியில் இருந்து நீக்குங்கள் என்று பலமுறை சொல்லியும் கேட்கவில்லை.

தேர்தலுக்கு பிறகு தென்றல் செல்வராஜின் மகன் மணிமாறன் ஒட்டியுள்ள போஸ்டரில் நகர பொறுப்பாளர் என்ற அடிப்படையில் கூட வரதராஜன் பெயரோ, புகைப்படமோ இல்லை. இப்போதுகூட லிங்கதுரை, வெல்லம் ஶ்ரீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி வரதராஜன், தென்றல் செல்வராஜிடம் புகாரளித்துள்ளார்.

தி.மு.க போஸ்டர்
தி.மு.க போஸ்டர்

எந்த நடவடிக்கையும் இல்லை. இப்படிப்பட்ட நபர்களை உருவாக்கி, கட்சியை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார் தென்றல் செல்வராஜ். அதனால்தான் இங்கு தி.மு.க திணறிக் கொண்டிருக்கிறது” என்கின்றனர் விபரம் அறிந்த உடன்பிறப்புகள்.

இதுகுறித்து விளக்கம் கேட்க லிங்கதுரையை தொடர்பு கொண்டபோது, ``நான் மூன்று தேர்தல்களில் பணியாற்றியிருக்கிறேன். டாக்டர் வரதராஜன் பிரசாரம் செய்யக் கூடாது என்றெல்லாம் நான் சொல்லவில்லை. அவருடன் இருந்தவர்கள் சரியாக ஒருங்கிணைக்கவில்லை. எந்தக் கூட்டத்துக்கும் தகவல் சொல்லவில்லை.

லிங்கதுரை
லிங்கதுரை

குறிப்பிட்ட தரப்பினரை மட்டும் தவிர்த்தனர். அதனால் என்னுடைய அதிருப்தியை சொல்லியிருந்தேன். மற்றபடி, தனிப்பட்ட முறையில் வரதராஜன் மரியாதையானவர். எல்லோருடனும் எளிதாக பழகக் கூடியவர்” என்றார்.

வெல்லம் ஶ்ரீனிவாசனை தொடர்பு கொண்டபோது, ``என் அண்ணனுக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவாகி, ட்ரீட்மென்ட்க்காக அலைஞ்சுட்டு இருந்தேன். அதனால மன உளைச்சல். ஆஸ்பத்திரில கொரோனா நோயாளிகள் இருந்ததால, எங்க எனக்கும் கொரோனா வந்துவிடுமோனு பயம் வந்துருச்சு. கைக்கால் எல்லாம் நடுங்குச்சு. பயத்துல சாப்ட்டுட்டேன். ஆமாங்க சரக்கு போட்டு சாத்திட்டேன். நண்பர் ஒருத்தர் மிலிட்டரி சரக்கு கொடுத்திருந்தார். ஏமாந்து குடிச்சு தொலைஞ்சுட்டேன். அதான் என்னை அறியாம என்னன்னமோ பேசிட்டேன். ஆஸ்பத்திரில நடக்கற பிரச்னைய தலைமை செயலாளருக்கு கடிதமாக எழுதலாம்னு இருந்தேன்.

ஸ்டாலின் வெல்லம் ஶ்ரீனிவாசன்
ஸ்டாலின் வெல்லம் ஶ்ரீனிவாசன்

அதுக்குள்ள உணர்ச்சிவசப்பட்டுட்டேன். டாக்டர் வரதராஜன் மேல எனக்கு நிறைய மரியாதை இருக்கு. அந்த ஆடியோ எல்லாம் டெலிட் பண்ணி, அவர்கிட்ட மன்னிப்பும் கேட்டுட்டேன். எனக்கும், அவருக்கும் எந்த சங்கடமும் இல்ல. நான் எல்லார்கிட்டயும் சகோதரத்துவமா தான் பழகுறேன். அப்படியும் உள்கட்சி பூசல்ல எங்க ஆள்களே இப்படி பண்றாங்க” என்றார்.

இதுகுறித்து கோவை தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் தென்றல் செல்வராஜிடம் கேட்டதற்கு, ``அவர்கள் என் ஆதரவாளர்கள் இல்லை. எல்லோரும் கட்சிக்காரர்கள்தான். வேட்பாளர் அறிவித்த நொடியில் இருந்து வாக்கு எண்ணிக்கை வரை நான் சிறப்பாக வேலை செய்திருக்கிறேன். பொள்ளாச்சி, வால்பாறை இரண்டு தொகுதிகளுக்கு பணியாற்றினேன்.

தென்றல் செல்வராஜ்
தென்றல் செல்வராஜ்

இங்கு மிகக் குறைந்த வித்தியாசத்தில்தான் தோற்றுள்ளோம். கொங்கு மண்டலம் முழுவதும் இந்த மாதிரிதான் ஆகியிருக்கிறது. அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. டாக்டர் வரதராஜன் கொடுத்த புகாரை தலைமைக்கு அனுப்பியிருக்கிறேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு