Published:Updated:

நாகை: கட்டுக்கட்டாக லஞ்சப் பணம்..! - சிக்கிய மாசு கட்டுப்பாடு வாரிய பொறியாளர்

லஞ்சப்பணம்
லஞ்சப்பணம்

அரிசி ஆலைகளை புதுப்பிப்பதற்கு பொறியாளர் தன்ராஜ் ஆலை உரிமையாளர்களிடமிருந்து தொடர்ந்து லஞ்சம் பெற்றுவந்ததாகக் கூறப்படுகிறது.

திருவாரூரில் அரிசி ஆலையில் லஞ்சம் பெற்றபோது பிடிபட்ட நாகை மாசுக் கட்டுப்பாடு வாரிய பொறியாளரின் வீடுகளில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நடத்திய  சோதனையின்போது ரூ.62 லட்சம் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

லஞ்சப் பணம்
லஞ்சப் பணம்

நாகப்பட்டினம் ஆண்டோ சிட்டி பகுதியில்  குடியிருந்துவரும் தனராஜ், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கான மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளராகப் பணியாற்றிவருகிறார். இவரது கட்டுப்பாட்டில் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் சுமார் 50 நவீன அரிசி ஆலைகள் இயங்கிவருகின்றன. இந்த அரிசி ஆலைகளை புதுப்பிப்பதற்கு பொறியாளர் தன்ராஜ் அரிசி ஆலை உரிமையாளர்களிடமிருந்து தொடர்ந்து லஞ்சம் பெற்றுவந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம், விளமலை பகுதியைச் சேர்ந்த  அரிசி ஆலை ஒன்றில், காற்று மற்றும் நீர் உரிமத்தைப் புதுப்பிக்க அதன் உரிமையாளர் துரைசாமி மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். இந்த மனு மீது புதுப்பிக்க சான்றிதழ் வழங்காமல் நீண்டநாள்களாக இழுத்தடித்து வந்ததாகவும், ரூபாய் 40,000 லஞ்சம் கொடுத்தால் புதுப்பித்துத்  தருவதாக தன்ராஜ் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அரிசி ஆலையின் உரிமையாளர் துரைசாமி, திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் அறிவுரையின்படி, ரசாயன பவுடர் தடவிய நோட்டுகளாக ரூ.40,000-ஐ நேற்று மாலை அந்த அரிசி ஆலைக்கு வந்து பொறியாளர் தன்ராஜ்  பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை  டி.எஸ்.பி நந்தகோபால் மற்றும் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி தலைமையிலான  போலீஸார் கையும் களவுமாகப் பிடித்துக் கைதுசெய்தனர்.

லஞ்சப்பணம்
லஞ்சப்பணம்

பொறியாளர் தன்ராஜுக்கு நாகை மற்றும் சென்னையில் இரண்டு வீடுகள் இருக்கின்றன. இந்த  இரு இடங்களிலும் போலீஸார் நடத்திய சோதனையில் ரூ. 62 லட்சம் ரொக்கம் கட்டுக்கட்டாக சிக்கியுள்ளது. மேலும், நகை மற்றும் விலையுயர்ந்த பொருள்களையும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைப்பற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு