Published:Updated:

பிரதமரை இழிவுபடுத்தினால், அது நம் நாட்டுக்கே இழிவு!

பொன்.ராதாகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
பொன்.ராதாகிருஷ்ணன்

- விளக்கம் கொடுக்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்

பிரதமரை இழிவுபடுத்தினால், அது நம் நாட்டுக்கே இழிவு!

- விளக்கம் கொடுக்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்

Published:Updated:
பொன்.ராதாகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
பொன்.ராதாகிருஷ்ணன்

“பிரதமர் மோடியை அவதூறு செய்துவிட்டனர்” என்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு எதிராகத் தமிழக பா.ஜ.க-வினர் பொங்கிக்கொண்டிருக்க... குடியரசு தின அணிவகுப்பில் தங்களது அலங்கார வாகனங்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில்தான் தமிழக பா.ஜ.க-வின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்...

“குடியரசு தின நிகழ்ச்சியில், தமிழகத்தின் அலங்கார ஊர்தியை நிராகரித்துவிட்டது மத்திய அரசு. ஸ்டாலின், பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியும் பலன் இல்லை. இது சுதந்திரப் போராட்டத்தைத் தாண்டிய பெரும் போராட்டமாக இருக்கிறதே?’’

“அலங்கார ஊர்திகளில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பதை வரைமுறைப்படுத்தி, அனுமதி அளிக்க நிபுணர்குழு உள்ளது. விதிமுறைகளுக்கு உட்படாத ஊர்திகள் அணிவகுப்பில் பங்குபெற முடியாது. இதில் அரசியல் பின்னணி எதுவும் கிடையாது. கடந்தகாலங்களிலும் பல்வேறு மாநிலங்கள் இதுபோல் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.’’

பிரதமரை இழிவுபடுத்தினால், அது நம் நாட்டுக்கே இழிவு!
பிரதமரை இழிவுபடுத்தினால், அது நம் நாட்டுக்கே இழிவு!

“ஆனால், மத்திய அரசைத் தொடர்ச்சியாக விமர்சிக்கும் மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் மட்டுமே புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனவே?’’

“இது கொரோனா காலகட்டம் என்பதால் 12 ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதில், எந்தெந்த மாநிலங்களுக்கு அனுமதி கிடைத்திருக்கிறது; எந்தெந்த காரணங்களுக்காக மற்ற மாநிலங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்பது குறித்த முழு விவரங்களும் தெரிவிக்கப்படவில்லை. இந்தச் சூழலில், இது குறித்து கருத்து சொல்ல முடியாது. அதேநேரம், நமக்கு அனுமதி கிடைக்கவில்லை என்பதற்காக ‘மத்திய அரசு ஓரவஞ்சனையாக செயல்படுகிறது’ என்று மக்கள் மனதில் பதியவைக்கும் முயற்சியைச் சிலர் செய்துவருகிறார்கள்... இதுதான் அரசியல்!’’

“சமூக சீர்திருத்தவாதி நாராயண குருவுக்கு பதிலாக ஆதி சங்கராச்சாரியார் நினைவுச் சின்னத்தைப் பயன்படுத்துமாறு கேரள அரசுக்கு நிபுணர்குழு பரிந்துரைத்திருப்பதுதானே மத அரசியல்?’’

“அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணம் தெரியாமல் பதில் சொல்ல இயலாது. நாளை, ‘மாநில அரசுகள்மீதுதான் தவறு’ என்று காரணம் தெரியவந்தால், தோப்புக்கரணம் போட்டுக்கொள்வார்களா இவர்கள்? இந்த விவகாரத்தில் அரசியலை நுழைத்து, மக்களைக் குழப்பாதீர்கள். நாராயண குரு சுவாமி போன்ற மகான்களை, தங்களுடைய அரசியல் லாபத்துக்காக அரசாங்கமே பயன்படுத்தக் கூடாது. பிரதமர் மோடி, கேரளா சென்றபோது நாராயண குரு சுவாமி ஆலயத்தைத் தேடிப்போய் வணங்கினார். ஆக, கடவுளுக்கு ஒப்பான நாராயண குருவை எப்படி மத்திய அரசாங்கம் புறக்கணிக்கும்? அதேபோல், வேலு நாச்சியார் பிறந்த நாளன்று அவரது பெருமையைப் பறைசாற்றும் வகையில் பிரதமர் ட்விட்டரில் பதிவிட்டிருந்த கருத்தையும் பார்த்தோம். எனவே, யாரையும் புறந்தள்ள வேண்டிய அவசியம் பிரதமருக்குக் கிடையாது.’’

பிரதமரை இழிவுபடுத்தினால், அது நம் நாட்டுக்கே இழிவு!
பிரதமரை இழிவுபடுத்தினால், அது நம் நாட்டுக்கே இழிவு!

“கவிஞர் வைரமுத்து, ‘வ.உ.சி வியாபாரி, மருது நாயகர்கள் திருடர்கள், வேலு நாச்சியார் ஜான்சிராணி சாயல் என நிபுணர்குழுவினர் கருதுகின்றனர்’ என்று ட்வீட் செய்திருக்கிறாரே?’’

“என்ன நடந்தது என்று தெரியாமலேயே, இவர்கள் வேண்டுமானால் கற்பனைக் குதிரை ஓட்டிக்கொண்டிருப்பார்கள். அந்த ரத ஓட்டத்துக்கு நான் தயாரில்லை. வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாள் ஆண்டு இது. சிறப்பு வாய்ந்த இந்தத் தலைவரை நம் குழந்தைகள் மத்தியில் நாம் எந்த அளவுக்குக் கொண்டுபோய் சேர்த்திருக்கிறோம்? 150-வது ஆண்டிலாவது அவரை நாம் கொண்டாடியிருக்க வேண்டாமா!’’

“முதல் மூன்று கட்டங்களில் தமிழக ஊர்திகள் தேர்வானதாகவும், அதன் பிறகு காரணம் சொல்லப்படாமலேயே நிராகரிக்கப்பட்டுவிட்டதாகவும் தமிழக முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளாரே?’’

“இந்த விவகாரத்தில், மாநில அரசுகள் என்னென்ன வழிமுறைகளில் விண்ணப்பித்தன, நிபுணர்குழு என்னென்ன காரணங்களுக்காக புறக்கணித்தது என்பது போன்ற காரணங்கள் தெரியவில்லை. தமிழக அரசுதான் விதிமுறைகளைப் பின்பற்றி ஊர்தியைத் தயார் செய்யவில்லை என்று பின்னாளில் தெரியவந்தால், அதற்காக நம் முதல்வரைக் குறை சொல்ல முடியுமா? நம் முதல்வருக்குத் தலைகுனிவு என்றால், அது தமிழகத்துக்கே தலைகுனிவு. எனவே, அப்படி யொரு சூழலை யாருமே விரும்ப மாட்டோம். அதேபோல், இந்த விவகாரத்தில் தேவையே இல்லாமல் பிரதமரைக் குற்றம் சாட்டுவதும் தவறு. ஏனெனில், பிரதமரை நாம் இழிவுபடுத்தினால், அது நம் நாட்டுக்கே இழிவு!’’

பிரதமரை இழிவுபடுத்தினால், அது நம் நாட்டுக்கே இழிவு!

“தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், ‘பிரதமரை அவதூறு செய்துவிட்டனர்’ என்று தமிழக பா.ஜ.க-வினரே தொடர்ந்து பேசிவருவது யாருக்கு அவமானம்?’’

“மறைந்த பத்திரிகையாளர் சோ ராமசாமி செய்யாத அரசியல் விமர்சனங்களா... திரைப்படங்களிலும் இது போன்ற விமர்சனங்கள் வந்துள்ளன. அவற்றை யெல்லாம் நாங்கள் யாரும் எதிர்க்கவில்லை... ஆனால், இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ஏதும் அறியாத குழந்தைகளை ஆயுதமாகப் பயன்படுத்தி தவறாகப் பேச வைத்தது எந்த வகையில் நியாயம்? பெண்களை எல்லோரும் தெய்வமாகப் போற்றுகிறோம். ஆனால், அந்தப் பெண்ணையே தவறாகப் பயன்படுத்தி நமது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தார்கள். அதேபோல், இந்த அப்பாவிக் குழந்தைகளையும் நாளை கொண்டுபோய்விட மாட்டார்கள் என்பதற்கு என்ன சார் உத்தரவாதம்?’’

“அப்படியென்றால், சில ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ஒருவரின் பள்ளியில், குழந்தைகளே பாபர் மசூதியை இடிப்பதாக நாடகம் நடத்தப்பட்டதே... அது மட்டும் சரியா?’’

“அப்படியான காணொலி எதையும் நான் பார்க்கவில்லை. நீங்கள் சொல்வதுபோல் நடந்திருந்தால், அதுவும் தவறுதான்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism